இளவேனில் என்னும் அரசன் செங்கோலோச்ச வந்துவிட்டான். இதோ புதிய ஆண்டு, தமிழ்,தெலுங்கு, கன்னடப் புத்தாண்டுகள் வரிசையாய் அணிவகுத்து நிற்கின்றன. தினம் தினம் புதிய நாள்! கணந்தொறும் புது மூச்சு! எதிர்காலம் நிகழ்காலமாகிக் கொண்டே இருக்க, இரண்டையும் எண்ணிப்பார்ப்பதற்கு முன் இறந்தகாலமாகி நம்மை நோக்கி நகைக்கிறாள் காலமகள்!
நாம் புத்தாண்டு கொண்டாடுகிறோம்!
வெயில் பொன்னொளிக் கரம் கொண்டு அனைவரையும் இறுகத் தழுவித் திகைக்க வைக்கிறான்!பச்சைக் கூந்தலில் பொன்னிற, செந்நிற, இளஞ்சிவப்பு மலர்களை சூடிக்கொண்டு இயற்கை அன்னை இளநகை புரிகிறாள்! ஆன்மிகச் சூழலை ஏற்படுத்தும் வேப்பமலரின் நறுமணத்தைச் சுமந்து கொண்டு பவனி வருகிறது தென்றல் காற்று! வானம் பார்த்து மழை வேண்டி தவம் செய்கிறது பூமி!
நந்தன வருடம் விடை பெற்றுச் செல்ல, வெற்றிதருவேன் என அறிவித்து, நுழைகிறது விஜயவருடம்!
வீடு தோறும் மாவிலைத் தோரணம், உடன் வேப்பிலைக் கொத்து, வாசலிலே கோலம், மலர்கள், நாவுக்கு ருசியாக வேப்பம்பூவுடன் கலந்த வெல்லம், இனிப்புப் பாயசம்! புத்தாடை அணிந்து ஆனந்தமாக விளையாடும் அழகுச் சிறு குழந்தைகள். வாழ்த்துப் பரிமாறிக் கொள்ளும் இளவயதினர். பெரியோரிடம் ஆசி பெறும் முது வயதினர்.
வீடு தோறும் மாவிலைத் தோரணம், உடன் வேப்பிலைக் கொத்து, வாசலிலே கோலம், மலர்கள், நாவுக்கு ருசியாக வேப்பம்பூவுடன் கலந்த வெல்லம், இனிப்புப் பாயசம்! புத்தாடை அணிந்து ஆனந்தமாக விளையாடும் அழகுச் சிறு குழந்தைகள். வாழ்த்துப் பரிமாறிக் கொள்ளும் இளவயதினர். பெரியோரிடம் ஆசி பெறும் முது வயதினர்.
உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டனர் மக்கள். வள்ளலாரின் அருட்பா சொல்லும் செல்வம் என்றேன். என்ன செல்வம் அது?
நான் ஒருவரிடம் போய் நின்று எனக்கு ஒரு பொருளைத் தாருங்கள் என்று இரந்து கேட்காத வரம் வேண்டும்.'' இல்லாமை சொல்லி ஒருவர்தம்பால் சென்று நில்லாத நற்கதியை அளித்த அம்மையே''என்கிறது அபிராமி அந்தாதி.
என்னிடம் ஒருவர் வந்து வேண்டும், கொடுங்கள் எனக் கேட்கும் போது, 'இல்லையென்று' சொல்லாமல் கொடுக்கின்ற ஈகைக் குணம் வேண்டும். வைத்துக் கொண்டே இல்லையென்பது பாவம் என்கிறது வேதம். அதிகமில்லை, நொய்யரிசியின் ஒரு பாதியையாவது கொடுங்கள்.''நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள்,'' பிடி சோறாவது வறியவர்க்கு இட்ட பின் உண்ணுங்கள்,'' என்கிறார் அருணகிரிநாதர்.
பிறருடைய செல்வத்தை அபகரிக்க நினைக்காத நல்ல மனம் எனக்குத் தருவாய்.
பிறரைப் பார்த்து, ''சீயென்றும், பேயென்றும், நாயென்றும்'' இகழ்ந்து சொல்லாத அன்பு மனம்!
உறுதியுடைய வாய்மை! நெறி பிறழாத வாய்மை! உள்ளத் தூய்மை!
இதற்கும் மேல் இறைவனுடைய நினைவை விட்டு நீங்காத உள்ளம்.
இன்னும் ஒன்றே ஒன்று உள்ளது!
தாயாய் தந்தையாய், சற்குருவாய், நண்பனாய் விளங்குபவனே! கந்தகோட்டத்து மாமணியே! மயிலேறிய மாணிக்கமே! நீ என்றைக்கும், எப்போதும் என்னைக் கைவிடாது இருக்க வேண்டும்.
இதுவே நான் கேட்கும் வரம்!
இதுவே நான் கேட்கும் வரம்!
'அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கை, ஆதிகடவூரில் வாழ்பவள், அமுதீசர் ஒரு பாகம் அகலாத அபிராமி'யிடம் என்ன வேண்டுவது?
1. கலையாத கல்வி 2. குறையாத வயது 3. கபடு வாராத நட்பு 4. குறையாத வளமை 5. குன்றாத இளமை 6. பிணிகள் இல்லாத உடல் 7. சலியாத மனம் 8. அன்பு அகலாத மனைவி 9. தவறாத சந்தானம் 10. தாழாத கீர்த்தி 11. மாறாத வார்த்தை 12. தடைகள் வாராத கொடை 13. தொலையாத நிதி 14. தன் நிலை பிறழாமை15. துன்பம் இல்லாத வாழ்வு 16. இறைவியின் பாதத்தில் அன்பு.
விஜய வருடத்தில் மட்டுமன்றி எப்போதும் இந்த 16 செல்வங்களையும் எல்லோருக்கும் அன்னை அபிராமி வழங்குவாளாக!
அருமையான பதிவு. 16 செல்வங்களை உலக மக்கள் அனைவருக்கும் இறைவன் வழங்க வேண்டும்.
ReplyDelete[இந்த பதிவில் என்னுடைய முந்தைய கமெண்ட் வரவே இல்லை.:-(]