18 Jan 2012

மீண்டும் தாய் மடியில், சேலம்.

                                                          சேலம் -சாரதா கல்லூரி.             
                             
                                                     சிவகாமி, சரோஜினியுடன் நான்.
                        
நான்கு ஆண்டுகளுக்குப் பின் பார்த்தபோது சேலம் வீடு மிகவும் அழகாக இருந்தது. மரங்களெல்லாம் வளர்ந்திருந்தன. ஒரு இனிய சங்கீதத்தை அனுபவிப்பதைப் போல்  மொட்டை மாடியும், தோட்டமும், பூக்களும்  என் இதயத்தைக் கொள்ளை கொண்டன. பூக்களுக்கு தான் எத்தனை சக்தி? வார்த்தைகளே இல்லாமல் பேசும் திறமையை அவற்றுக்கு யார் கொடுத்தார்கள்?

கடலூர், பெட்டி வீட்டில் அடைபட்டுக்கிடந்தபின், தோட்டமும் மொட்டை மாடியும், பெரிய வீடும் சந்தோஷத்தை தந்ததில் வியப்பில்லை அல்லவா?அதுவும் ஓராண்டு விடுதி வாழ்க்கைக்குப்பிறகு ....அட, எதுவும் ஸ்திரமானது அல்ல, வாழ்வு குறுகிய வட்டத்துள் வீழ்ந்து கிடப்பது அன்று என்பது ஒவ்வொறு கட்டமாகத்தானே மனிதனுக்குப் புரிகிறது!  ஆம், பிறந்ததிலிருந்து மெதுவாக வாழ்வைப் புரிந்து கொள்வதற்குள் முதுமை வந்துவிடும். மீண்டும் பழைய இடத்திற்கே குறுகிய கட்டத்திற்குள் பரமபத விளையாட்டுப் போல திரும்பி விடுவோம். அது போல நான்கு ஆண்டுகளில் மூன்று இடங்களைப் பார்த்தாகிவிட்டது! மீண்டும் யதாஸ்தானம். வாழ்க்கை ஒரு நதியைப்போன்றதுதானே. நான் ஶ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் பொருளாதாரம் முதல் ஆண்டில் சேர்ந்தேன். தம்பியர் இருவரும் லிட்டில் ஃப்ளவர் பள்ளியிலும், தங்கை கலைமகள் பள்ளியிலும் சேர்ந்தனர். அப்பா சென்னையில் வேலைக்கு சேர்ந்தார். அவ்வப்போது லீவுக்கு வருவார்.

சாரதா கல்லூரி முதலில் பள்ளியின் ஒரு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. நான் இரண்டாவது பேட்ச். நாற்பத்து ஐந்து பேர் எங்கள் வகுப்பில். இந்தப் பொருளாதாரம் பாடம் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது முதலில். ஷேக்ஸ்பியர் வகுப்பு பிரின்சிபால். மதிய உணவை வீட்டிற்குப்போய் சாப்பிட்டு வந்தவுடன் அவர்களுக்கு தூக்கமாக வரும். தூங்கிக் கொண்டே பாடம் நடத்துவார். பொங்கிவரும் சிரிப்பை அடக்கமுடியாமல் நாங்கள் பேப்்பர் காமெண்டரி நடத்துவோம். லலிதா அவர்கள் சரித்திரம், காவேரி மிஸ் வகுப்புகள் நன்றாகவே இருக்கும். தங்கம் சேஷனின் ஒவ்வொரு விரலிலிருந்தும் ஒவ்வொரு முக்கியமான குறிப்பு விழும். அவர்கள் வகுப்பு எடுப்பதே ஒரு அழகு! ஆழ்ந்த கவனத்துடன், தன்னம்பிக்கை துணைவர எடுத்த பாடத்தலைப்பில் யாருக்கும் எந்த சந்தேகம் வந்தாலும் தீர்க்கக்கூடிய அறிவு மிக்கவர்கள் என்று சொன்னால் மிகையாகாது.

இது தவிர தமிழ், ஆங்கில ஆசிரியைகள் நன்றாக எடுப்பார்கள். பேட்மிண்டன் விளையாட்டுப் பயிற்சி மாலை வேளைகளில் நடக்கும். ஆசிரியைகளுக்கு எதிராக விளையாடுவோம். தவிர கலைநிகழ்ச்சிகள் வேறு!

ஆனால் அடிக்கடி ராமகிருஷ்ணா மடத்தினரின் பிரசங்கங்கள் வைத்துவிடுவார்கள். ரொம்பவும் சலிப்புத்தட்டிவிடும். சில சமயங்களில் நானும் பிரேமாவும் டிமிக்கி கொடுத்துவிட்டு ஓடியிருக்கிறோம். இந்தப் பிரசங்கங்கள் பயன் மிக்கவைதான், ஆனால் அந்த வயதுக்கு அதைக் கேட்கப் பொறுமை இல்லைதான்.

கேட்கப் பொறுமை இல்லையே தவிர, ஶ்ரீ ராமகிருஷ்ணபரமஹம்சரின் வாழ்க்கை வரலாறும், ஶ்ரீ சாரதாமணி தேவியாரின் வரலாற்றையும் படித்திருக்கிறேன். அன்னையுடைய பதி பக்தியும், பரமஹம்சரின், காளியின் மீதான அளப்பரிய சரணாகதியும், உலகம் அனைத்தையும் அன்னை வடிவாகக் கண்ட அவருடைய தெய்வீகமும் என்னை மெய்சிலிர்க்க வைத்திருக்கின்றன. கல்கத்தா சென்று அன்னை காளியின் தரிசனமும் பரமஹம்சர் தோற்றுவித்த பஞ்சவடியையும் தரிசிக்க வேண்டும் என்ற என் ஆசை இது வரை நிறைவேற வில்லை. எத்துணை முறை படித்தாலும் திகட்டாத வாழ்க்கை வரலாறு பரமஹம்சருடையது. ஆன்மீக மணம் கமழ்ந்த ஶ்ரீ சாரதா கல்லூரியின் மாணவி என்பதில் இன்றும் நான் பெருமை கொள்கிறேன்.

வடலூர், நெய்வேலி, திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு மாணவியர் அனைவரும் சுற்றுலா சென்று வந்ததும், கல்லூரிகளுக்கு இடையேயான பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொள்ள கும்பகோணம், கோயமுத்தூரிலுள்ள பீளைமேடு சென்று வந்ததும் மறக்கமுடியாத அனுபவங்கள்.

மூன்று ஆண்டுகள் கல்லூரி வாழ்க்கையில் என் நெருங்கிய தோழிகள் சிலருடன் இன்றும் தொடர்பு இருந்தாலும், எல்லோரையும் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. வாழ்க்கைப் பயணத்தில் தான் எத்தனை மேடு பள்ளங்கள், நெளிவு, சுளிவுகள், காதலும், கண்ணீரும், ஆசாபாசங்களும் ஏற்படுத்தும் சுழல்கள்! இந்த அனுபவங்கள் அனைத்துமே ஒரு மனிதன் தன்னைத் தானே அறிந்து கொள்வதற்கான படிகள் என்கிறது ஆன்மிகம். விடை தெரியாத கேள்விகள் மனிதனிடம் நிறையவே இருக்கின்றன!


குடும்ப வாழ்க்கையில் என் சகோதரன் பாலன், நான் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது வரங்காவ் என்ற மத்தியப்பிரதேசத்திலுள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் வேலைக்குச் சென்றான். பெரிய அண்ணாவுக்கு திருவனந்தபுரத்தில் கல்யாணமும் சென்னை ஏ.ஜி.எஸ்.ஆபீஸுக்கு மாற்றலும் ஆயிற்று. மூன்றாம் ஆண்டு படிக்கும் போது என் தந்தையார் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சேலம் வந்து தனிப்பட்ட முறையில் வணிகர்களுக்கான வழக்குகளை நடத்தும் தொழிலை செய்யலானார். பல சமயங்களிலும் எனக்கு சில வேலைகளைத் தருவார். அப்பாவுடன் சேர்ந்து நானும் அந்தத் துறையில் தேர்ச்சி பெறவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. ஏனோ அப்பாவும் அதைப் பற்றி எண்ணவில்லை. வேலைக்கு அனுப்பும் எண்ணமும் அவருக்கு இருந்ததில்லை!

நான் சாரதா கல்லூரியில் படித்த காலத்தில் தான் பண்டிட் ஜவஹர்லால் நேரு காலமானார். ஓராண்டு காலம் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ரோஜா மலர்களை தலையில் சூட்டிக்கொள்ளாமல் இருந்திருக்கிறேன். பைத்தியக்காரத்தனமோ?

இது மட்டுமா? தேசிய கீதம் ரேடியோவில் ஒலித்தாலும் எழுந்து நிற்கும் பழக்கம் எனக்கு இருந்தது. தேசிய கீதத்தைப் பாடினாலே உணர்ச்சி வசப்படுவேன். என் தொண்டை தழு தழுக்க கண்களில் நீர் கசியும்! போன ஜன்மத்தில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பேனோ என்று நானே வியந்ததுண்டு!

1963, 64 ஆண்டுகளில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பித்த காலகட்டம்!கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுத்து விட்டார்கள். தமிழகமெங்கும் ஹிந்தி பாஷையை கற்றுக் கொள்ள கடும் எதிர்ப்பு. அதனால் தானோ என்னவோ நானும் சரி என் குழந்தைகளும் சரி ஹிந்தி கற்றுக் கொள்ளவில்லை. அதனால் பிற்காலத்தில் கஷ்டப்பட்டிருக்கிறோம்.

பசுமையான வயல் வெளிக்கு நடுவே அமைந்த ஒற்றையடிப் பாதையில் சுகமான தென்றல் காற்றை அனுபவித்தபடி, தோழிகளுடன் சிரித்துப் பேசியவாறு கல்லூரிக்குச் சென்று வந்த மூன்றாண்டுகள் முடிய ஒரு பட்டதாரியானேன். பெற்றோர்களுக்கு ஒரே சந்தோஷம். எனக்கும் பெருமையாகதான் இருந்தது.

12 Jan 2012

காவிரி நதியுடன் கை கோர்த்து....கடலூர், திருச்சி.


கடலூர்  ////   திருச்சி. 
தென்னாற்காடு மாவட்டத்தின் கடலூர், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மிகச்சிறிய ஊர். கழிவு நீர்ச் சாக்கடைகள் எதுவும் கட்டப்படாத நிலையில் நாற்றமடிக்கும் தொட்டிகளும், கொசுக்களும் நிறைந்த ஊர்தான் என் நினைவில் நிற்கிறது. கெடிலம் நதி, அதிகம் தண்ணீர் பாயாதது. சிவபெருமான் பாடலீஸ்வரர் என்ற பெயரில் கோயில் கொண்டு அருள் பாலித்து வரும் தலம்.

தூய்மையான காற்றும், இயற்கையின் இனிமையும் நிறைந்த குன்னூருக்கும்  கடலூருக்கும் எத்தனை வித்தியாசம்?ரோடோரத்து வீடு; வசதி குறைவானது. மாடியில் இரண்டும், கீழே ஒன்று என மூன்று படுக்கை அறைகள். ஒரு முற்றம். சமையலறை. அகலம் அதிகம் இல்லாத, நீளமான வீடு.,

St.Anne’s பள்ளியில் பத்தாம் வகுப்பு! ‘நுணலும் தன் வாயால் கெடும்,’ என்ற பொன்மொழிக்கேற்ப என் விளையாட்டுத் திறமையை காண்பிக்கப் போய், P.T. ஆசிரியையிடம் அகப்பட்டுக் கொண்டேன். மானில விளையாட்டுப் போட்டிகளில் உயரம் தாண்டுதல், 200.மீட்டர் ஓட்டம், 400 மீட்டர், ‘ரிலே,’ என எல்லவற்றிலும்  என்னை வற்புறுத்திச் சேர வைத்தது மட்டுமன்றி, வகுப்பு நேரங்களில் பயிற்சிக்கு எப்போது கூப்பிட்டாலும்  அனுப்ப வேண்டுமென்று  ஆசிரியைகளுக்கும், போகவேண்டுமென்று எனக்கும் உத்தரவாயிற்று. ஏன் சேர்ந்தாய் என வீட்டிலும்,  விளையாடினால் போதுமா, படிக்க வேண்டாமா என  ஆங்கிலம், கணக்கு, சைன்ஸ்  டீச்சர்களும் கேட்பார்கள். படிப்பிலே நான் சுமார் தான். காலை 10 மணிக்கு பொது மைதானத்தில் ஓட்டப் பயிற்சி ஆரம்பித்தால், பன்னிரண்டு மணிவரை பயிற்சி. மதிய உணவிற்கு வீட்டிற்குப் போய்விடுவேன்.  மதியம் கடைசி வகுப்பில் ஆரம்பித்து, 5 மணி வரை மீண்டும் மைதானம்.

அது ஒரு புது அனுபவம் மட்டுமன்றி மற்ற மாணவியரின் நடுவே ஒரு மதிப்பும், பள்ளிக்காக பெருமை தேடித் தருவதில் ஒரு தற்பெருமையும் இருந்தது. ஆனால் அப்பாவோ அப்படியா என்று சொன்னதோடு சரி. அம்மாவுக்கு  இதற்கெல்லாம் நேரம் கிடையாது. எப்படியோ, வெற்றியும், பதக்கமும் பெற்று ஒரு வழியாக எல்லாம் முடிந்தது. ஓராண்டு ஓடியே போயிற்று. பரிட்சையும் முடிந்தது. பொழுது போவதற்காக தையல் வகுப்பில் சேர்ந்தேன். பிரேமா ஒன்றாம் வகுப்பு அதே பள்ளியில்தான் படித்தாள். ஸ்கூலுக்கு வரவே அழுவாள் பாவம், பூஞ்சை உடம்பு.

 இதனிடையே என் பெரிய மாமா மகனுடைய பூணூல் பழனியில். அழைப்பிதழும்  வந்தது. எங்களையும் அம்மாவையும், முதலிலேயே ஒற்றைப் பாலத்திற்கு அனுப்பிவிட்டார் அப்பா. அம்மாவிற்கு உடன் பிறந்த சகோதரிகள் ஆறு பேர், மூன்று சகோதரர்கள். ஜே ஜே என்று தாத்தா வீடு நிரம்பி வழிந்தது. ஒற்றைப்பாலத்திலிருந்து பழனிக்கு ரயில் பயணம். இறங்கும் முன்பே எனக்கு ஜுரம் வந்து விட்டது. மறு நாள் அப்பா வந்தார். உடனேயே டாக்டரிடம் அழைத்துப் போனார். மதியமே புறப்பட்டு இரவு ஹோட்டலில் தங்கி, மறு நாள் கடலூர் வந்து சேர்ந்தோம். சுமார் ஒரு வாரம் பிடித்தது உடம்பு சரியாக; அது ஒரு தனி அனுபவம். பாவம் அம்மா, அவளால் தான் பிறந்தவீட்டின் உடன் பிறப்புகளுடன் சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை.

கடலூர் வாசத்தின் போதுதான் அப்பா எங்களை வடலூர், சிதம்பரம், சீர்காழி      
வைத்தீஸ்வரன் கோயில், திருக்கோயிலூர் ஆகிய கோயில்களுக்கு அழைத்துச்சென்றார்.

ஒருமுறை பாலன் அண்ணா லீவில் வந்தபோது நாங்கள் இருவரும் கடலூர் கடற்கரைக்குப் போக முடிவு செய்தோம். ஜாலியாக சிரித்துப் பேசிக்கொண்டு கடற்கரையில் பட்டாம்பூச்சிக் கிளிஞ்சல்களைப் பொறுக்கினேன். நேரம் போனது தெரியவில்லை. திரும்பி  வரும் போது மழை பிடித்துக்கொள்ள, வீட்டிற்கு வந்ததும் திட்டுமழை பொழிய, கண்ணீர் மழையால் கண்மை கரைந்தது.

கடலூரில் இருந்தபோதுதான் என் தங்கை பிரேமாவுக்கு  ைபாய்டு காய்ச்சல் வந்தது. மிகவும் மோசமான நிலையில் அவள் படுத்திருந்ததும்  மருத்துவர் வந்து ஊசி போட்டதும், நாங்கள் எல்லோரும் கவலையுடன் சுற்றி நின்றதும், இன்னும் நினைவில் நிற்கிறது. கடவுள் கிருபையால் அவளும் பிழைத்தாள்.
                             
1962—-1963.

ஆயிற்று பத்தாம் வகுப்பு பாஸானவுடன், திருச்சி சீதாலஷ்மி ராமஸ்வாமி கல்லூரியில் பி.யூ.சி. யில்  சேர்த்துவிட்டார் அப்பா. என்னுடைய வகுப்பு மாணவிகள் குமுதா, வசந்தா, வசந்தகுமாரி எல்லோரும் அங்கேயே சேர்ந்தார்கள். கல்லூரியிலிருந்து பார்த்தால் நேரே மலைக் கோட்டை. காலை ஐந்து மணிக்கு பாட்டு போட்டுவிடுவார்கள். ஆறு மணிக்கு எழுந்து டைனிங் ஹால் போனால், முதலில் இறை வணக்கம், பின்னாலேயே ஏ ஒன் காப்பி கிடைக்கும். லேட்டானால் எட்டு மணிக்கு டிபனுடன் கிடைக்கும் காப்பி சுமார் தான். சும்மா சொல்லக்கூடாது, டிபன், சாப்பாடு எல்லாமே சுவையாக இருக்கும். மாலையில் சிறு தீனியுடன் காப்பி. இரவு சாப்பாடு. சரியான சாப்பாட்டு ராமி போல இருக்கே என்று நீங்கள் நினைக்கிரீர்களா?அட,’’ எண் சாண் உடம்புக்கு வயிறே பிரதானம் ‘‘ அல்லவா?

முதல் நாள் நான் சேர்ந்தபோது, பி.யூ.சி.ஹாஸ்டலில் இடமில்லாததால் எம்.எஸ்.சி. மாணவியர் விடுதியில் ஒரு வாரம் தங்கும்படி நேர்ந்தது. அங்குதான் சுசீலா அக்கா அறிமுகமானார். அம்மாவும் அவர்களும் சில நாட்கள் கடிதப்போக்குவரத்து கூட வைத்திருந்தனர். பின்னர் ஜூனியர் விடுதிக்கு  குமுதா, வசந்தாவுடன் சேர்ந்து கொண்டேன்.

விடுதி வாழ்க்கை ஒரு தனி அனுபவம். யாருடனும் மிகவும் நெருங்கிப் பழகாமலும், அதே சமயம் ஒதுங்கி நிற்காமலும் வாழும் கலையை அங்கேதான் கற்றேன்.  ஒவ்வோர் நாள் ஒவ்வொருவரிடம்  டூத் பேஸ்ட் கடன் வாங்கிக் காலம் தள்ளும் சாமர்த்யசாலிகளிலிருந்து, காசு கடன் வாங்கி டிமிக்கி கொடுப்பவர், சீயக்காய் தூள் கூட ஸ்வாதீனமாக எடுத்துப் போகின்றவர்வரை எல்லா குணாதிசயங்களையும் அங்கே பார்க்கலாம். நல்லவர்களைக் கூட கெட்டவர்களாக மாற்றும் சக்திவாய்ந்த கெட்டிக்காரிகள் அங்கே உண்டு.  தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தால் பிழைத்தோம்.

                              விடுதியின் இரு பக்கத்திலும் வேப்பமரங்கள் அணி வகுத்து நிற்கும். வெயில் காலத்தில் வேப்பம் பூ மணமும், மென்மையான காற்றின் தழுவலும், சுகமான தூக்கத்தை வரவழைக்கும் மதியப் பொழுதுகளில்  தேர்வுக்காக  மரத்தடிகளில்  படித்த நேரங்கள் நினைவில் வலம் வருகிறது.

ஒரு நாள் எங்கள் அறை ஜன்னலை மூடாமல் போய்விட்டோம். மதிய உணவுக்கு வந்தவர்கள் கதவைத் திறந்தால் எல்லா சாமான்களும் தரையில்.      குரங்குகள் கைவண்ணம்! அதிலிருந்து கதவை மூடாமல் போனதேயில்லை. எல்லாவற்றையும் சரி செய்ய மூன்று மணி நேரம் பிடித்தது.

கல்லூரி ஆசிரியர்கள் எல்லோருமே நல்லவர்கள். எங்களுக்குதான் தமிழ் மீடியம் படிப்பிலிருந்து தாவி, ஆங்கிலத்தில் எல்லாம் படிக்க கஷ்டப்பட்டோம். எங்கள் வேதியல் ஆசிரியை குள்ளம்; டேபிள் பின்னால் நின்றால் தலை மட்டும் தான் தெரியும். ஜன்னல் வழியாக காவிரியின் குறுக்கே உள்ள பாலத்தில் போகும் ரயில்களை வேடிக்கை பார்ப்போம். இயற்பியல் பாட ஆசிரியை போர்டை விட்டுத் தலையைத் தூக்கவே மாட்டார். விலங்கியல் ஆசிரியை நன்றாக பாடம் சொல்லித்தருவார். அதிலே செயல் முறைப்பாடம் தான் பயமுறுத்தும். அடடா, கரப்பான் பூச்சியைக் கண்டாலே ஓடிப்போய் ஒளிந்து கொள்ளும் எங்களை அதன் வாயின் பாகங்களை வெட்டிக்காண்பியுங்கள் என்றால் எப்படி? ஏதோ நல்லகாலம், என்னுடன் பயப்படாத ஒரு மாணவி இருந்ததால் நான் பிழைத்தேன்.

என்.சி.சி ஆசிரியைதான் லாஜிக் பாடம் எடுப்பார். நல்ல வாட்ட சாட்டமாய், பெரிய கண்ணாடி அணிந்திருப்பார். கண்ணாடிக்குப் பின்னால் கண்ணை உருட்டி முழித்துப் பார்த்தாலே பயமாயிருக்கும். மதியம் முதல் வகுப்பு லாஜிக், சாப்பாட்டுக்குப்பின் நல்லா தூக்கம் வரும். தூங்கி மாட்டிக்கொண்டிருக்கிறேன்!

மலைக்கோட்டை பிள்ளையார் கோயிலிலிருந்து ஒலி பரப்பாகும் திருப்பாவை, திருவெம்பாவை, சுப்ரபாதப் பாடல்கள் மனப்பாடமாயிற்று. மலைக்கோட்டைப் பிள்ளையார் மானசீக நண்பர் ஆனார். அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளும் நேரமும் வந்தது. ஓராண்டு முடிந்து, தேர்வுகள் வந்தன. பிள்ளையார் ஆசீர்வாதம் பரிட்சையில் தேர்ச்சியும்  பெற்றேன்.

திருச்சி வாழ்க்கையும் நன்றாகத்தான் இருந்தது. சேலத்தில் உடன் படித்த பவானியை இங்கே சந்தித்தேன். பேட்மிண்டன் விளையாட்டில் நல்ல பயிற்சி கிடைத்தது இங்குதான். பிற்காலத்தில் சாரதா கல்லூரி பேட்மிண்ட்ன் டீமின் கேப்டனாக இது  மிகவும் உதவியது.

இங்கே கற்றுக்கொண்ட சந்திரசேகராஷ்டகம் அம்மாவுக்குப் பிடித்த ஸ்லோகம். அடிக்கடி சொல்லச்சொல்வாள். எப்படியோ, கால நதி யாருக்காகவும்  நிற்பதில்லையே? 1963 ஆம் ஆண்டு என் தந்தையார் மீண்டும் பதவி உயர்வுடன் சென்னைப் பட்டிணத்திற்கு  மாற்றப்பட்டார். குடும்பத்துடன் சென்னை வாழ்க்கை சரிப்படாது என்றும், மீண்டும் சேலம் போவது  எனவும் தீர்மானம் செய்து எங்களை சேலம் அழைத்துச்சென்றார்.

3 Jan 2012

நீலகிரி மாவட்டம்......குன்னூர்.

நீலகிரி மாவட்டம்......குன்னூர்.

தமிழ் நாட்டின் கோடை வாசஸ்தலம், மலைகளின் அரசி எனப் போற்றப்படும் உதகமண்டலம். நீலகிரி அதன் மற்றொரு பெயர். தொலை தூரத்தில் இருந்து பார்க்கும் போது நீலநிறமாகக் காட்சியளிப்பது, நேரில் பார்த்து அனுபவிக்க வேண்டிய ஒன்றாகும். நெடிதுயர்ந்த மரங்களும், குன்றுகளும், பனிமூட்டமும், குளிரும், பல வண்ணங்களில்  பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்களும், சாரல் மழையும், மழையூடே தவழ்ந்துவரும் யூகலிப்டஸ் மரங்களின் மணமும், அகல் விளக்கு ஏற்றினார் போலும் இரவு நேரங்களில்
ஆங்காங்கே காட்சிதரும் விளக்குகளும் காணக் காணத் தெவிட்டாதவை.

ஒவ்வொரு முறையும் புதிதாகத் தோற்றமளிக்கும் சிம்ஸ் பார்க். மிகப்  பழமையான, அரிய வகை மரங்கள் பலவும் அங்கே உண்டு. பெரிதும் சிறிதுமாய் வண்ண வண்ண ரோஜா மலர்கள், சிறிய குளம், பலவேறு வகையான பூக்கள், பறவைகள் என பொழுது போவதே தெரியாது. எங்கள் வீட்டில் இருந்து போய்வர சுமார் ஐந்து கிலோ மீட்டர்கள் இருக்கும். அண்ணா குடையும் கையுமாய் புறப்படுவது தெரிந்தால் கூடவே நானும் கிளம்பிவிடுவேன். அமைதியாய் இயற்கையை ரசித்துக் கொண்டு, நடப்பது  ஒரு சுகமான அனுபவம். சாலை வழியே நடந்து போய் ‘சிம்ஸ் பார்க்‘ அடைந்து விட்டால் அங்கிருந்து கீழே இறங்கிவர படிக்கட்டுகள் சுமார் அறுபது உண்டு. அதன் வழி இறங்கிவிடுவோம். அண்ணா தான் என்னுடைய யோகாசன குரு. எனக்கு என் ராஜப்பா அண்ணாவை ரொம்பவே பிடிக்கும்.

ஒரு மேட்டின் மேல் இருந்த சிறிய வாடகை வீட்டிற்குத்தான் முதலில் நாங்கள் சென்றோம். அங்கிருந்து பார்த்தால் கீழே குன்னூர் ரயில்வே ஸ்டேஷன் நன்றாகத் தெரியும். முதன் முதலாக மேட்டுப்பாளையம்- ஊட்டி குட்டி ரயிலில் பயணம் செய்தது நினைவில் இருக்கிறது. ஸ்டேஷனின் எதிர்ப் பக்கம் பதினைந்து மண் படிகள் ஏறினால் மைசூர் லாட்ஜ் ஹோட்டல். முதன் முதலாக எங்களுக்கு அப்பா, ஸ்வெட்டர், சாக்ஸ், ஷூ  எல்லாம் வாங்கிக் கொடுத்தார். நான் ஷாந்தி விஜயா ஜெயின் ஹைஸ்கூலில் சேர்ந்தேன். பாலன் ஊட்டி கவர்மெண்ட் காலேஜில் பி.யூ,சி. சேர்ந்தான்.

முட்டை குடிக்கும் வைபவம் இங்குதான் நடந்தது. குன்னூர் தட்பவெட்ப நிலையில் குழந்தைகள் உடம்பைத் தேற்ற வேண்டும் என்று அப்பா, பியூனிடம் கோழி முட்டை வாங்கிவரச் சொல்லி, காலை ஏழு மணிக்கு  அதை ஒவ்வொன்றாக உடைத்து ஒவ்வொருவரையும் குடிக்க வைக்கச் சொல்வார். தம்பிகள் என்ன செய்தார்களோ யான் அறியேன். எனக்குப் பார்த்தாலே குமட்டும். ‘மூக்கைப் பிடித்துக் கொண்டு குடி,’ பின் இந்த ஊறுகாயை வாயிலே போட்டுக்கோ, இல்லை சர்க்கரை வேண்டுமா,’ என்று பின்னாலேயே நிற்பாள் அம்மா. டம்ளரை வாய்ப் பக்கத்தில் கொண்டு போனாலே வாந்தி எடுப்பது போல் ஓக்காளிக்கும். கடைசியில் இது தேறாத கேஸ் என்று விட்டுவிட்டார்கள். முட்டை குடித்தால் போதுமா? அது ஜீரணமாக வேண்டாமா? அதற்காக ஒரு கிலோ மீட்டர் நடைப் பயிற்சி.   இந்தக் கூத்தெல்லாம் ஞாயிற்றுக் கிழமைக்கு! சவுக்கு மரவேலிகளில் எல்லாம் பனித்துளிகள் சூரியஒளியில் பளபளப்பதைப் பார்த்துக்கொண்டு  நடப்பது என்றால் எனக்கு ரொம்பப்பிடிக்கும். வானளாவி நிற்கும் யூகாலிப்டஸ் மரங்கள்! மஞ்சள்,காவி நிறங்களில் சண்பகங்கள் மணம் பரப்பும். இயற்கையின் மடியில், தென்றலின் தாலாட்டு! 

இந்த வீட்டின் வலதுகைப் பக்கம் ஒரு புல்சரிவு உண்டு.  அது தான் என்னுடைய சாம்ராஜ்யமாக கொஞ்ச நாள் இருந்தது. அந்தப் புல் சரிவில் படுத்துக் கொண்டு கதைப் புத்தகம் வாசித்தல், வானம் பார்த்துப் படுத்துக் கிடத்தல், நிலவை ரசித்தல் எனக்குப் பிடித்தமானவை. ஒன்பது பேருக்கு அந்த வீடு சிறியது என்பதால் ஆபீஸுக்குப் பக்கத்தில் பெரிய வீட்டிற்கு இடம் பெயர்ந்தோம். வெளிகேட்டில் இருந்து உள்ளே நுழைய, வலது பக்கச்சரிவு முழுதும் யூகாலிப்டஸ் மரங்கள்.


image

நூறு அடி நடந்தால் வீடு. விருந்தினர் அறை, ஹால், மூன்று படுக்கை அறைகள், பூஜை ரூம், நடையைக் கடந்தால் சமையலறை. நடையிலிருந்து  இடது பக்கம் இறங்கினால் பெரிய விளையாட்டு மைதானம். மைதானத்தின் நடுவிலிருந்து அப்பாவின் ஆபீஸுக்கு ஆறு படி ஏறினால் போய்விடலாம். வலது பக்கம் காப்பிக்கொட்டைச் செடியோடு கூடிய புற்சரிவு. மைதானத்திலிருந்து பார்த்தால் லோயர் குன்னூர் நன்றாகத் தெரியும். மாலை நேரங்களில் ஹாக்கி, ‘பேட்மிண்டன்’ விளையாடுவோம். அப்பாவும்  இதில் கலந்து கொள்வார். குளிர் காலங்களில் கம்பளிகளை ’டெண்ட்’ மாதிரி கட்டி பாட்டியுடன் புல் தரையில் குளிர் காய்வோம். அப்பா யூகாலிப்டஸ் மரப்பட்டைகளை லீவு நாட்களில் சேகரம் செய்யும் போது நானும் சேர்ந்து கொள்வேன்.
                                       குன்னூர் வந்தவுடன் அப்பா வாங்கி வளர்க்க ஆரம்பித்த நாய்க் குட்டிதான் டாமி. டாமி ரொம்பவே புத்திசாலி. எங்களுடன் நன்றாக விளையாடும். ‘ரிங் பாலை’ மரத்தின் கிளையில் கட்டினால் ஜம்ப் பண்ணி எடுக்கும். ஒளித்து வைத்தால் தேடிக்கண்டுபிடிக்கும். ஒரு நாள் கீழ் வீட்டில் மேய்ந்து கொண்டிருந்த கோழியைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டது. எங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பு! கீழ் வீட்டு ஆங்கிலோ இந்திய அம்மணி வந்ததும் அப்பா மன்னிப்புக்கேட்டுக் கொண்டார். நாங்கள் ஒரு நாள் சினிமாவிற்குப் போகும் போது எப்படியோ  கூடவே வந்து தியேட்டரில் கலாட்டா செய்தது. பிறகு அண்ணா அதை வீட்டிற்கு கூட்டிவந்து, கட்டியபின் வந்தார்.

தீபாவளி சமயத்தில் ஒரு நாள் சிறிய ஊசிப்பட்டாசு சரம் ஏற்றப் பட்டவுடன் எதிர் பாராமல் எங்கிருந்தோ ஓடி வந்த டாமி, டக்கென்று அதை வாயில் கவ்வி விட்டது. பட்டாசு வெடிக்க வாயெல்லாம் புண்ணாகி கஷ்டப்பட்டதைப் பார்த்து ரொம்பவே வருத்தப்பட்டோம். எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் அதற்கு ‘ரேபிஸ்’ நோய் வந்து விட்டதால் அதனைக் கருணைக் கொலை செய்யவேண்டி வந்தது. அப்பா, ரவி இருவருடைய கைகளிலும் அதன் எச்சல் பட்டதால் இருவரு ‘பாஸ்ச்சர் இன்ஸ்டிடியூட்டில்’ ஊசி போட்டுக் கொண்டார்கள். டிசம்பர் மாதம் 30ஆம் தேதி அது இறந்த நாள்! கவிமணியாரின், ‘வையகத்தில் நாய் போல் வாய்த்த துணையும் உண்டோ,’ என்றவரிகள் ஞாபகத்திற்கு வருகிறது. அதன் பின் பிராணிகளைப் பிரியப்பட்டு வளர்த்து, அதனுடைய அன்பில் திளைத்து,    எக்காரணங்கொண்டு அதனை இழந்தால் தாங்கும் மன வலிமை இன்மையால் அவற்றை வளர்ப்பதில்லை.

ஷாந்தி விஜயா பள்ளிக்கூடம் மிகச்சிறியது. ஆறாம் வகுப்பு முதல் பத்து வகுப்பு வரை, இரண்டு பிரிவுகள் A,B, என்று. என்னை எட்டாம் வகுப்பு ‘ஏ’ பிரிவிற்கு அனுப்பினார்கள். திருமதி. ஜெயலட்சுமிதான் வகுப்பு ஆசிரியை. ஒன்பதாம் வகுப்பில் சோஷியல் ஸ்டடீஸ் பாடம் தனம் டீச்சர் எடுப்பார்கள். வெள்ளிக் கிழமைதோறும் மாலை கடைசி இரண்டு பீரியட், ஒவ்வொரு  வாரம் ஒவ்வொரு வகுப்பு கலை நிகழ்சிகள் கொடுக்க வேண்டும். பிறகு பஜனை, தீப ஆராதனை. ஜைன மதத்தை சார்ந்தவர்கள் பள்ளி ஆகையால் தெய்வ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். இரண்டு ஆண்டுகள் அங்கே படித்ததும் கற்றுக் கொண்டதும் நிறைய. கலை நிகழ்ச்சிகள் தயார் செய்யவும், விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவும் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது அங்கே தான். என்னுடைய ஆசிரியை திருமதி.ஜயலஷ்மி எப்போது கடிதம் எழுதினாலும் பதில் எழுதுவார். தனம் டீச்சர் அன்பின் உறைவிடம். என் தோழி பட்டு, மனோன்மணி ஆகியோர் எங்கே இருக்கிறார்களோ?

நாங்கள் குன்னூர் சென்ற ஓராண்டில், அண்ணா  திருவனந்தபுரம் ஏ.ஜி.எஸ் ஆபீசில் வேலை கிடைத்துப் போனார். பாலன் அண்ணாவும் காரைக்குடி, செட்டினாடு பாலிடெக்னிக்கில் எல்.எம்.ஈ., படிப்பில் சேர்க்கப்பட்டான்.  பழனியில் வைத்து பாலனுக்குப் பூணூல் போட்டார்கள்.

இதமான குளிரும், இயற்கை அழகும், அற்புதமான, அன்பு நிறைந்த தோழிகளும், சண்பக மரங்களின் மணம் நிறைந்த பூங்காற்றும், இதமாக இதயத்தை மயிலிறகால் வருடினார் போலும் பொங்கிப் பெருகும் ஆனந்தமும் நிறைந்த குன்னூர் வாழ்க்கை என் தந்தையாரின் பிரமோஷனுடன் கூடிய இட மாற்றத்தால் ஒரு முடிவுக்கு வந்தது.

அதற்குப் பின் நான்கு முறை, பல்வேறு சந்தர்ப்பங்களிலும் மலையரசியின் கரம் பற்றி  நடந்திருந்தாலும், சுதந்திரப்பறவையாய், கட்டுப்பாடுகள் அற்ற காட்டாற்று வெள்ளமாய், சுற்றித் திரிந்த இளமையின் இன்பம் காணாமல் போனது உண்மைதான்.

1961 ஆம் ஆண்டு, தென்னாற்காடு மாவட்டம், கடலூர், கடற்கரை ஊர் வந்து சேர்ந்தோம். ‘’புட்டிடியாப்பே……, மல்லாட்டே,’’ என்று இரவு முழுதும் கூவும் குரல்………,கொசுக்கடிக்கும், யானைக்கால் நோய்க்கும், சாக்கடைகளுக்கும் புகழ் பெற்ற கடலூர்……….!

‘’உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்’’

30 Dec 2011

Filter Coffee


அம்மா காப்பி, சூடா! பையன்.
இதோ பார் சண்முகம் வந்திருக்கிறார், காப்பி கொண்டா! கணவர்.
ஒரே தலைவலி, ஒரு கப் காப்பி சூடா குடும்மா.பெண்.
இந்த காப்பி நம்முடைய வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருக்கும் ஒன்று.
காலையில் கையில் செய்தித்தாளுக்கு சுவை சேர்ப்பது காப்பிதானே?
காப்பியை சுவைத்துக் குடிக்கிறோம். அதை எப்படி தயாரிக்கிறார்கள் என்று என்றாவது கவலைப் பட்டிருக்கிறீர்களா? 
கொஞ்சம் காப்பி புராணம்!

எனக்கு கல்யாணம் ஆன புதிசு. ஒரு நாள் என் மாமியாருக்கு உடம்பு சரியில்லாமல்  போனது. ‘’டிகாஷன் இல்லை, கொஞ்சம் போட்டுவிடு,’’ என்றார்.பில்டரிலிருந்து டிகாஷன் எடுப்பதை பார்த்திருக்கிறேனே தவிர அது அங்கே எப்படி வருகிறது என்று எனக்குத் தெரியாது. ‘’பில்டரில் மூன்று ஸ்பூன் பொடி போட்டு, ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் விடு,’’ என்றார். ஆயிற்று, என்றேன். சொன்னபடி செய்தாயிற்று. டிகாஷன் மட்டும் இறங்கக் காணோம். ‘பில்டர் தலையில் ஒரு தட்டுத்தட்டு,’’ என்றார் மாமியார். பில்டர் தலையில் ஒரு தடவை என்ன, பலமுறை தட்டியும், ம்ஹும், டிகாஷன் மட்டும் ஒரு சொட்டு வரவில்லை. ‘’என்னகவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை,’’ என்று பாடிக்கொண்டு இருந்தார் அருணா சாயிராம்.

‘’இதோ பாரும்மா,கொஞ்சம் சூடான தண்ணீரை டபராவில் விட்டு, பில்டர் மேல் பாத்திரத்தை அதன் உள் வை,’’ என்றார். அப்பாடா என்று டிகாஷன் ஒரு மாதிரி இறங்கிற்று. 1. பில்டரின் மேல் பாத்திரத்தை கொஞ்சம் சுட வைத்து பிறகு பொடி போடவேண்டும். 2. பொடியை அடைக்கக்கூடாது.3.முதலில் தண்ணீரை ஒரு பக்கமாக விட்டுவிட்டு பிறகு முழுதும் விடவேண்டும்.4.முதல் டிகாஷன் இறங்கியவுடன் அதை வேறு பாத்திரத்தில் விட்டு  வைத்த பின் மேல் கொண்டு தண்ணீர் விட வேண்டும்.5. கூடியவரை முதல் நாள் ராத்திரியே நிதானமாக டிகாஷன் போடுவது நலம். இதெல்லாம் டிகாஷன் போடுபவர்கள் கவனிக்க. அல்லது டிரெயினிங் எடுத்துக் கொள்வது நல்லது.

இந்தப் பிரச்சினைகள் வேண்டாம் என்று தான் இன்ஸ்டண்ட் காப்பிப் பொடிகள் எல்லாம் வந்து விட்டன. ஆனாலும் சரியான விகிதத்தில் டிகாஷனும், பாலும்,சர்க்கரையும் கலந்தால்தான் டிகிரி காப்பி. புதிதாக காய்ச்சிய பாலில் சர்க்கரை சேர்த்து, இரண்டு ஆற்று ஆற்றி, முதல் டிகாஷன் அளவாய் சேர்த்தால் ஏ ஒன் காப்பி கிடைக்கும்!

இன்றைய காலகட்டத்தில் காப்பிப் பொடிகள் கஷ்டமில்லாமல் கிடைக்கிறது. எழுபதுகளில் ‘’காப்பி போர்டில்’’ அரசாங்க விலையில் காப்பிக் கொட்டை கிடைக்கும். பீபரி, ரோபஸ்டா, கொட்டைகளை வாங்கிக் கொண்டு, காப்பிக்கொட்டை வறுத்து அரைக்கும் கடைக்குப் போய், அவர்கள் வறுத்து அரைக்கும் வரை கதைப் புஸ்தகம் படித்து பொடியை வாங்கி வருவதர்க்குள் காப்பி குடிக்கும் ஆசையே போய் விடும். 15 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக இந்தக் கதைதான்.

60 களில் இன்னும் கஷ்டம். என்னுடைய தாயார் பெரிய இரும்பு வாணலியில் காப்பிக் கொட்டையை வறுப்பார். ஆறியபின் ஆட்டுக்கல்லில் போட்டு இரும்பு உலக்கையால் இடித்து, சலித்து எடுத்து வைப்பதற்குள் உன் பாடு என் பாடு ஆகிவிடும். சரியான பதத்தில் வறுக்காவிட்டால் கரிந்து போய் விடும். கொஞ்சம் முன்னே எடுத்து விட்டால் இடிக்கவராது. பாவம் மனைவி கஷ்டப்படுகிறாளே என்று அப்பா வறுக்கவும், பொடிக்கவும் மிஷின் வாங்கி வந்தார்.

image

ஒரு இரும்பு அடுப்பு, சற்றே நீள் வடிவில். அதன் மேல் வைக்கும்படியான உருளை வடிவில் மேல் பாத்திரம், கைப்பிடியுடன். முதலில் நெய்வேலி நிலக்கரி போட்டு அடுப்பை பற்றவைத்து விடவேண்டும். பின்னர் உருளை வடிவப் பாத்திரத்தில் {இரும்புதான்) ஒரு டம்ளர் கொட்டையைப் போட்டு சுற்ற வேண்டும். நான் கூட ஆசையாகச் சுற்றியிருக்கிறேன். வாசனை வந்தவுடன் மூடியைத் திறந்து கொட்டையை எடுத்துவிட்டு அடுத்த ரவுண்ட். அட, சூடான மூடி, திறக்க வராமல் வம்பு பண்ணும். இடுக்கியால் ஒன்று வைத்தால் தான் திறக்கும்.இப்படியாக ஒரு மூன்று டம்ளர் வறுப்பதற்குள் அடுப்புக் கனல் கம்மியாகிவிடும்! மீண்டும் கரியைப் போட்டு அது எரிந்து மீண்டும்……….மீண்டும்………மகா மகா பொறுமை …..பொறுமை…………. !

சரிதான், எப்படியோ வறுத்துவிட்டோம்! பொடிக்க வேண்டுமே! பொடிக்கும் மிஷினை மேசை மேலே பொருத்தி விட்டு கரண்டி கரண்டியாய் கொட்டையைப் போட்டு சுற்ற வேண்டும். ரொம்ப நைசாக பொடிக்க ஆரம்பித்தால் ஈஷிக் கொண்டு மிஷின் சுற்ற வராது. சரிதான் கொஞ்சம் கர கரப் பொடி என்றால் டிகாஷன் சொய்ங் என்று இறங்கிவிடும். சும்மாவா பாடினாள் அவ்வைப் பாட்டி, ‘’பொறுமை என்னும் நகை அணிந்து பெருமை கொள்ள வேண்டும் பெண்கள்,’’ என்று!

இத்தனை பாடு பட்டு கடைசியில் காப்பி நல்லா இல்லை என்றால் எப்படி இருக்கும்? நல்ல வேளையாக இப்போது காப்பிப் பொடிகள் கிடைக்கின்றன. காப்பி மேக்கர் வந்து விட்டதால் டிகாஷன் போடுவது ஒருவாறு சுலபமாகதான் இருக்கிறது.  காப்பி என்று ஒன்று கிடைத்தால் போதும் என்று ஆகிவிட்டதால் இப்போதெல்லாம் யாரும் ரொம்ப குற்றம் சொல்வதில்லை என்று நினைக்கிறேன். அப்படியும் நல்ல காப்பி தான் வேண்டுமென்றால் சிரமம் பார்க்காமல் ‘மையாஸ்’ ஹோட்டல் க்யூ வில் போய் நிற்பீர்களாக.

27 Dec 2011

ஏங்கும் விழிகள்-இராம. இராமநாதன்


பல ஆண்டுகளுக்கு முன்பு திரு.இராம. இராமநாதன் அவர்கள் எழுதி வெளியிட்ட கவிதை இது. எனக்குப் பிடித்த வரிகள், கவிதைகளை எழுதி வைத்துக்கொள்ளும் பழக்கம் எனக்கு உண்டு. இக் கவிதையை இங்கு எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சின்ன விழி மலரில் உறவு கண்டேன்-அவன்
சிரிப்பில் மயங்கிய நான் கனவு கண்டேன்,
பொன்னிப் புதை மணலில் பிரிவு கண்டேன்-அவன்
போன இடம் தேடிப் புலம்புகின்றேன்.

அணைத்து மகிழ்வதர்கோர் அன்னையானான்
அடித்துத் திருத்துதர்க்கோர் தந்தையானான்,
நினைத்து வணங்குதற்கோர் தெய்வமானான்-அவன்
நின்ற இடந்தேடி நினைவிழந்தேன்.

மழலைச் சொல் உதிர்த்து வாய் திறக்கும்-ஒரு
வார்த்தை வந்து நின்று மயங்க வைக்கும்
நிழலை இழந்த ஒரு நெஞ்சமடா-அவன்
நிறுத்தி வழி நடந்த கோயிலடா!

கட்டுப்படுவதற்கோர் காவல் வைத்து-அதன்
கரையில் அவனிருந்து காத்து வந்தான்
சிட்டுப் பறந்தவுடன் திணறுதடா-நெஞ்சம்
தினமும் அவனையிங்கு தேடுதடா!

உயிருக்கு உயிராய் நின்றவனின் எழில்
தோய்ந்து கிடந்தவொரு திருமுகத்தை
எப்படி மறந்திருப்போம் வாழ்க்கையில்-தினம்
ஏங்கும் விழிகளிடம் என்ன சொல்வோம்!

24 Dec 2011

ஜீவகாருண்யம்.


 ஜீவன்களுக்கு கருணை காட்டுவது ஜீவகாருண்யம். உயிர் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும், பறப்பன, நடப்பன, ஊர்வன, நீர் வாழ்வன,  என எல்லா உயிர்களுக்கும் அன்பு காட்டுவது கருணை. பசித்த உயிர்களுக்கு உணவு அளிப்பது கருணை. கருணை எப்படி வரும்? அன்பு நிறைந்த உள்ளத்தில் கருணையும் நிறைந்திருக்கும்.

சில நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது ஒருவர் கேட்டார், ”காசு வாங்காமல் சாப்பாடு போட்டால் அது அன்னதானம்தானே?

ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள். புத்தர் ஒரு முறை தன் முந்தைய பிறவி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தாராம். ஒரு சக்கரவர்த்தியின் மூன்றாவது மகனாக, மகாசத்வர் என்ற பெயருடன் பிறந்த புத்தர் மிகச் சிறு வயதிலேயே எல்லா உயிர்களையும் தன் குழந்தையாக நடத்தினார்.
ஒரு நாள் சக்கரவர்த்தி தன் மூன்று மகன்களுடனும், பரிவாரங்களுடனும் வேட்டையாடச் சென்றார். வழியில் ஓர் பெண்புலி குட்டிகளை ஈன்ற அயர்ச்சியில் பசியுடன் படுத்திருந்தது. இந்தத் தாய்ப் புலிக்கு மீண்டும் உயிரளிக்க என்ன வழி என்று மஹாசத்வர் கேட்டார்.

புதிய ரத்தமும், மாமிசமும் தான் அதனை உயிர்ப்பிக்கும் என்றனர் அனைவரும்.
யார் இந்தப் புலிக்கு தன் சதையையும், இரத்தத்தையும் கொடுத்து அதன் குட்டிகளையும் காப்பாற்றுவார்கள் என்று கேட்டார் மகாசத்வர்.
யார் கொடுப்பார்கள்? என்று பதில் வந்தது.

மஹாசத்வரின் மனம் உருகியது. அவர் எண்ணினார், இது வரையும் பல பிறவிகளையும் எடுத்து, சம்சாரத்திலே உழன்று, ஆசை, கோபம்,அறியாமை காரணமாக பிறருக்கு மிகச்சிறிய அளவிலேயே உதவியிருக்கின்றேன். இப்போது எனக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவ்வாறு மகிழ்ந்த மஹாசத்வர் மற்றவர்கள் அனைவரையும் செல்லுமாறு கூறினார்.

பின்னர் அமைதியாக, சப்தமின்றி பசியோடு படுத்திருந்த புலியின் முன்பு சென்று படுத்துக்கொண்டார். புலியோ அயர்ச்சியின் காரணமாக வாயையும் திறக்கமுடியாத நிலையில் இருந்தது. இதை உணர்ந்த சத்வர் அருகிலிருந்த ஓர் கூரிய குச்சியினால் தன் உடலைக் கிழித்து புலி இரத்தத்தை உறிஞ்சும் படியாக செய்தார். புலி அவரை உண்டது.

புலிக் குட்டிகளைக் காப்பாற்ற தன்னையே  உணவாகக்  கொடுத்த இந்த செய்கையானது, மறு பிறவியில் அவர் மிக உயர்ந்த பிறவி எடுக்க காரணமாயிற்று. அவர் உடலை உண்ட புலியும், அதன் குட்டிகளும் மறு பிறவியில் அவருடைய சீடர்களாகப் பிறந்தனர். இத்தகைய கருணைச் செயலை புத்தரால் மட்டுமே செய்ய இயன்றது. தன்னையே பிறருக்காக தியாகம் செய்வதே மிகப் பெரியகருணைச் செயலாகும் என்கிறது,”The Tibetan book of living and dying.”

”கருணை எனும் ஜீவநதியின் ஊற்று பெருக்கெடுக்குமானால் அதுவே மரணத்தை வெல்லும் மிக உயர்ந்த அமிழ்தம், உலக மக்களின் வறுமையை நீக்கக் கூடிய, எடுக்க எடுக்க வற்றாத செல்வம், அனைவருடைய நோய்களையும் நீக்கக் கூடிய தெய்வீக மருந்து, பிரபஞ்சத்தோடு மானுடத்தை இணைக்கும்  பாலம்” என்று சொல்கிறது புத்தமதம்.

இதையே அருட் பிரகாச வள்ளலாரும் எடுத்துச் சொல்கிறார். ஜீவர்களுடைய பசிப் பிணியைப் போக்குவதே மிகப்பெரிய தவம். தன்னுடைய உடல் உழைப்பால் பெற்ற செல்வத்தில் சிறிதளவாவது பிறருடன் பகிர்ந்து கொள்ளுதல், உணவு அளித்தல் தவம். போதும் போதும் என்று மனிதனை சொல்லவைக்கக் கூடியது உணவு ஒன்றேயாகும்.
இதையே அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில், அட நிறையக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, “நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள்” என்கிறார். கொஞ்சம் நல்லவரா, ”பிடி சோறு இட்டு உண்மின்,” என்கிறார்.
இப்போது சொல்லுங்களேன் அன்னதானம் என்றால் என்னவென்று.

22 Dec 2011

நினைவுகள்.


ஒவ்வொரு நாளும் இரவைப் பகலும், பகலை இரவும் துரத்துகின்றன.
பருவங்கள் மாற, மணித்துளிகள் நாட்களாய், வாரமாய், மாதமாய்
மறைந்து போகின்றன.ஆனால் இந்த எண்ணங்கள் மட்டும்,  ஏன்
விட்டுப்பிரியாமல், ஓய்வே இல்லாமல், அமைதியின் மடியில்
சாயாமல், எல்லாம் போனபின்பும் என்னைச் சுற்றிச் சுற்றி
வந்து என் உறக்கத்தை கவர்ந்து போகிறது? கட்டுப்பாடற்ற
காட்டாற்று வெள்ளமாய் அடித்துச் செல்கிறது! தெரியுமா?
              ==========
மலைச் சிகரங்களைத் தழுவிச் செல்லும்
வெண்மேகங்களைப் போல -நாம்
பிரிவதற்கே சந்திக்கிறோம்!
சந்தித்த சுவடுகள் கூடத் தெரியாமல்!
              ==========
 

நீ  தொலைந்து போய் விட்டாய், நான் என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்!
                               ———-
நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னால்
உன்னை எனக்குத் தெரியாது!
இப்போதும் உன்னை எனக்குத்
தெரியவில்லை! என்ன ஆச்சரியம்!
           ————-
உன்னுடையது என்று நீ எதனை
விட்டுப் போனாய், உன் குழந்தைகளை…,
குழந்தைகள் அவரவர் வாழ்க்கைப் பாதையில்!  என்னுடையது என்று
எதுவுமேயில்லை என்னைத் தவிர