தென்னாற்காடு மாவட்டத்தின் கடலூர், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மிகச்சிறிய ஊர். கழிவு நீர்ச் சாக்கடைகள் எதுவும் கட்டப்படாத நிலையில் நாற்றமடிக்கும் தொட்டிகளும், கொசுக்களும் நிறைந்த ஊர்தான் என் நினைவில் நிற்கிறது. கெடிலம் நதி, அதிகம் தண்ணீர் பாயாதது. சிவபெருமான் பாடலீஸ்வரர் என்ற பெயரில் கோயில் கொண்டு அருள் பாலித்து வரும் தலம்.
தூய்மையான காற்றும், இயற்கையின் இனிமையும் நிறைந்த குன்னூருக்கும் கடலூருக்கும் எத்தனை வித்தியாசம்?ரோடோரத்து வீடு; வசதி குறைவானது. மாடியில் இரண்டும், கீழே ஒன்று என மூன்று படுக்கை அறைகள். ஒரு முற்றம். சமையலறை. அகலம் அதிகம் இல்லாத, நீளமான வீடு.,
St.Anne’s பள்ளியில் பத்தாம் வகுப்பு! ‘நுணலும் தன் வாயால் கெடும்,’ என்ற பொன்மொழிக்கேற்ப என் விளையாட்டுத் திறமையை காண்பிக்கப் போய், P.T. ஆசிரியையிடம் அகப்பட்டுக் கொண்டேன். மானில விளையாட்டுப் போட்டிகளில் உயரம் தாண்டுதல், 200.மீட்டர் ஓட்டம், 400 மீட்டர், ‘ரிலே,’ என எல்லவற்றிலும் என்னை வற்புறுத்திச் சேர வைத்தது மட்டுமன்றி, வகுப்பு நேரங்களில் பயிற்சிக்கு எப்போது கூப்பிட்டாலும் அனுப்ப வேண்டுமென்று ஆசிரியைகளுக்கும், போகவேண்டுமென்று எனக்கும் உத்தரவாயிற்று. ஏன் சேர்ந்தாய் என வீட்டிலும், விளையாடினால் போதுமா, படிக்க வேண்டாமா என ஆங்கிலம், கணக்கு, சைன்ஸ் டீச்சர்களும் கேட்பார்கள். படிப்பிலே நான் சுமார் தான். காலை 10 மணிக்கு பொது மைதானத்தில் ஓட்டப் பயிற்சி ஆரம்பித்தால், பன்னிரண்டு மணிவரை பயிற்சி. மதிய உணவிற்கு வீட்டிற்குப் போய்விடுவேன். மதியம் கடைசி வகுப்பில் ஆரம்பித்து, 5 மணி வரை மீண்டும் மைதானம்.
அது ஒரு புது அனுபவம் மட்டுமன்றி மற்ற மாணவியரின் நடுவே ஒரு மதிப்பும், பள்ளிக்காக பெருமை தேடித் தருவதில் ஒரு தற்பெருமையும் இருந்தது. ஆனால் அப்பாவோ அப்படியா என்று சொன்னதோடு சரி. அம்மாவுக்கு இதற்கெல்லாம் நேரம் கிடையாது. எப்படியோ, வெற்றியும், பதக்கமும் பெற்று ஒரு வழியாக எல்லாம் முடிந்தது. ஓராண்டு ஓடியே போயிற்று. பரிட்சையும் முடிந்தது. பொழுது போவதற்காக தையல் வகுப்பில் சேர்ந்தேன். பிரேமா ஒன்றாம் வகுப்பு அதே பள்ளியில்தான் படித்தாள். ஸ்கூலுக்கு வரவே அழுவாள் பாவம், பூஞ்சை உடம்பு.
இதனிடையே என் பெரிய மாமா மகனுடைய பூணூல் பழனியில். அழைப்பிதழும் வந்தது. எங்களையும் அம்மாவையும், முதலிலேயே ஒற்றைப் பாலத்திற்கு அனுப்பிவிட்டார் அப்பா. அம்மாவிற்கு உடன் பிறந்த சகோதரிகள் ஆறு பேர், மூன்று சகோதரர்கள். ஜே ஜே என்று தாத்தா வீடு நிரம்பி வழிந்தது. ஒற்றைப்பாலத்திலிருந்து பழனிக்கு ரயில் பயணம். இறங்கும் முன்பே எனக்கு ஜுரம் வந்து விட்டது. மறு நாள் அப்பா வந்தார். உடனேயே டாக்டரிடம் அழைத்துப் போனார். மதியமே புறப்பட்டு இரவு ஹோட்டலில் தங்கி, மறு நாள் கடலூர் வந்து சேர்ந்தோம். சுமார் ஒரு வாரம் பிடித்தது உடம்பு சரியாக; அது ஒரு தனி அனுபவம். பாவம் அம்மா, அவளால் தான் பிறந்தவீட்டின் உடன் பிறப்புகளுடன் சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை.
கடலூர் வாசத்தின் போதுதான் அப்பா எங்களை வடலூர், சிதம்பரம், சீர்காழி
வைத்தீஸ்வரன் கோயில், திருக்கோயிலூர் ஆகிய கோயில்களுக்கு அழைத்துச்சென்றார்.
ஒருமுறை பாலன் அண்ணா லீவில் வந்தபோது நாங்கள் இருவரும் கடலூர் கடற்கரைக்குப் போக முடிவு செய்தோம். ஜாலியாக சிரித்துப் பேசிக்கொண்டு கடற்கரையில் பட்டாம்பூச்சிக் கிளிஞ்சல்களைப் பொறுக்கினேன். நேரம் போனது தெரியவில்லை. திரும்பி வரும் போது மழை பிடித்துக்கொள்ள, வீட்டிற்கு வந்ததும் திட்டுமழை பொழிய, கண்ணீர் மழையால் கண்மை கரைந்தது.
கடலூரில் இருந்தபோதுதான் என் தங்கை பிரேமாவுக்கு ைபாய்டு காய்ச்சல் வந்தது. மிகவும் மோசமான நிலையில் அவள் படுத்திருந்ததும் மருத்துவர் வந்து ஊசி போட்டதும், நாங்கள் எல்லோரும் கவலையுடன் சுற்றி நின்றதும், இன்னும் நினைவில் நிற்கிறது. கடவுள் கிருபையால் அவளும் பிழைத்தாள்.
1962—-1963.
ஆயிற்று பத்தாம் வகுப்பு பாஸானவுடன், திருச்சி சீதாலஷ்மி ராமஸ்வாமி கல்லூரியில் பி.யூ.சி. யில் சேர்த்துவிட்டார் அப்பா. என்னுடைய வகுப்பு மாணவிகள் குமுதா, வசந்தா, வசந்தகுமாரி எல்லோரும் அங்கேயே சேர்ந்தார்கள். கல்லூரியிலிருந்து பார்த்தால் நேரே மலைக் கோட்டை. காலை ஐந்து மணிக்கு பாட்டு போட்டுவிடுவார்கள். ஆறு மணிக்கு எழுந்து டைனிங் ஹால் போனால், முதலில் இறை வணக்கம், பின்னாலேயே ஏ ஒன் காப்பி கிடைக்கும். லேட்டானால் எட்டு மணிக்கு டிபனுடன் கிடைக்கும் காப்பி சுமார் தான். சும்மா சொல்லக்கூடாது, டிபன், சாப்பாடு எல்லாமே சுவையாக இருக்கும். மாலையில் சிறு தீனியுடன் காப்பி. இரவு சாப்பாடு. சரியான சாப்பாட்டு ராமி போல இருக்கே என்று நீங்கள் நினைக்கிரீர்களா?அட,’’ எண் சாண் உடம்புக்கு வயிறே பிரதானம் ‘‘ அல்லவா?
முதல் நாள் நான் சேர்ந்தபோது, பி.யூ.சி.ஹாஸ்டலில் இடமில்லாததால் எம்.எஸ்.சி. மாணவியர் விடுதியில் ஒரு வாரம் தங்கும்படி நேர்ந்தது. அங்குதான் சுசீலா அக்கா அறிமுகமானார். அம்மாவும் அவர்களும் சில நாட்கள் கடிதப்போக்குவரத்து கூட வைத்திருந்தனர். பின்னர் ஜூனியர் விடுதிக்கு குமுதா, வசந்தாவுடன் சேர்ந்து கொண்டேன்.
விடுதி வாழ்க்கை ஒரு தனி அனுபவம். யாருடனும் மிகவும் நெருங்கிப் பழகாமலும், அதே சமயம் ஒதுங்கி நிற்காமலும் வாழும் கலையை அங்கேதான் கற்றேன். ஒவ்வோர் நாள் ஒவ்வொருவரிடம் டூத் பேஸ்ட் கடன் வாங்கிக் காலம் தள்ளும் சாமர்த்யசாலிகளிலிருந்து, காசு கடன் வாங்கி டிமிக்கி கொடுப்பவர், சீயக்காய் தூள் கூட ஸ்வாதீனமாக எடுத்துப் போகின்றவர்வரை எல்லா குணாதிசயங்களையும் அங்கே பார்க்கலாம். நல்லவர்களைக் கூட கெட்டவர்களாக மாற்றும் சக்திவாய்ந்த கெட்டிக்காரிகள் அங்கே உண்டு. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தால் பிழைத்தோம்.
விடுதியின் இரு பக்கத்திலும் வேப்பமரங்கள் அணி வகுத்து நிற்கும். வெயில் காலத்தில் வேப்பம் பூ மணமும், மென்மையான காற்றின் தழுவலும், சுகமான தூக்கத்தை வரவழைக்கும் மதியப் பொழுதுகளில் தேர்வுக்காக மரத்தடிகளில் படித்த நேரங்கள் நினைவில் வலம் வருகிறது.
ஒரு நாள் எங்கள் அறை ஜன்னலை மூடாமல் போய்விட்டோம். மதிய உணவுக்கு வந்தவர்கள் கதவைத் திறந்தால் எல்லா சாமான்களும் தரையில். குரங்குகள் கைவண்ணம்! அதிலிருந்து கதவை மூடாமல் போனதேயில்லை. எல்லாவற்றையும் சரி செய்ய மூன்று மணி நேரம் பிடித்தது.
கல்லூரி ஆசிரியர்கள் எல்லோருமே நல்லவர்கள். எங்களுக்குதான் தமிழ் மீடியம் படிப்பிலிருந்து தாவி, ஆங்கிலத்தில் எல்லாம் படிக்க கஷ்டப்பட்டோம். எங்கள் வேதியல் ஆசிரியை குள்ளம்; டேபிள் பின்னால் நின்றால் தலை மட்டும் தான் தெரியும். ஜன்னல் வழியாக காவிரியின் குறுக்கே உள்ள பாலத்தில் போகும் ரயில்களை வேடிக்கை பார்ப்போம். இயற்பியல் பாட ஆசிரியை போர்டை விட்டுத் தலையைத் தூக்கவே மாட்டார். விலங்கியல் ஆசிரியை நன்றாக பாடம் சொல்லித்தருவார். அதிலே செயல் முறைப்பாடம் தான் பயமுறுத்தும். அடடா, கரப்பான் பூச்சியைக் கண்டாலே ஓடிப்போய் ஒளிந்து கொள்ளும் எங்களை அதன் வாயின் பாகங்களை வெட்டிக்காண்பியுங்கள் என்றால் எப்படி? ஏதோ நல்லகாலம், என்னுடன் பயப்படாத ஒரு மாணவி இருந்ததால் நான் பிழைத்தேன்.
என்.சி.சி ஆசிரியைதான் லாஜிக் பாடம் எடுப்பார். நல்ல வாட்ட சாட்டமாய், பெரிய கண்ணாடி அணிந்திருப்பார். கண்ணாடிக்குப் பின்னால் கண்ணை உருட்டி முழித்துப் பார்த்தாலே பயமாயிருக்கும். மதியம் முதல் வகுப்பு லாஜிக், சாப்பாட்டுக்குப்பின் நல்லா தூக்கம் வரும். தூங்கி மாட்டிக்கொண்டிருக்கிறேன்!
மலைக்கோட்டை பிள்ளையார் கோயிலிலிருந்து ஒலி பரப்பாகும் திருப்பாவை, திருவெம்பாவை, சுப்ரபாதப் பாடல்கள் மனப்பாடமாயிற்று. மலைக்கோட்டைப் பிள்ளையார் மானசீக நண்பர் ஆனார். அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளும் நேரமும் வந்தது. ஓராண்டு முடிந்து, தேர்வுகள் வந்தன. பிள்ளையார் ஆசீர்வாதம் பரிட்சையில் தேர்ச்சியும் பெற்றேன்.
திருச்சி வாழ்க்கையும் நன்றாகத்தான் இருந்தது. சேலத்தில் உடன் படித்த பவானியை இங்கே சந்தித்தேன். பேட்மிண்டன் விளையாட்டில் நல்ல பயிற்சி கிடைத்தது இங்குதான். பிற்காலத்தில் சாரதா கல்லூரி பேட்மிண்ட்ன் டீமின் கேப்டனாக இது மிகவும் உதவியது.
இங்கே கற்றுக்கொண்ட சந்திரசேகராஷ்டகம் அம்மாவுக்குப் பிடித்த ஸ்லோகம். அடிக்கடி சொல்லச்சொல்வாள். எப்படியோ, கால நதி யாருக்காகவும் நிற்பதில்லையே? 1963 ஆம் ஆண்டு என் தந்தையார் மீண்டும் பதவி உயர்வுடன் சென்னைப் பட்டிணத்திற்கு மாற்றப்பட்டார். குடும்பத்துடன் சென்னை வாழ்க்கை சரிப்படாது என்றும், மீண்டும் சேலம் போவது எனவும் தீர்மானம் செய்து எங்களை சேலம் அழைத்துச்சென்றார்.
No comments:
Post a Comment