1 Oct 2017

ஶ்ரீ அரவிந்தர் -18


அலிப்பூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஶ்ரீ அரவிந்தர் 1909, மே மாதம் 30 ஆம் தேதி ' உத்தரபாரா' என்னுமிடத்தில் உரையாற்றினார். அவர் மீதிருந்த அன்பாலும்மரியாதையாலும் மாலை அணிவித்து வரவேற்க சுமார் பத்தாயிரம் பேர் கூடியிருந்தனர். இங்குதான் அவர் அலிப்பூர் சிறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எடுத்துக் கூறினார்
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபடுவதற்குத் தேவையான உள்ள வலிமையை, சக்தியைப் பெறுவதற்கே நான் யோக வாழ்வைத் தேர்ந்தெடுத்தேன்!ஆனால் என்னுள் என்னை இயக்கும் தெய்வீக சக்தியை அறிந்து, உணர்ந்து அதனோடு இரண்டறக்கலந்த அனுபவம் தந்த ஆழ்ந்த அமைதியில் தெய்வ வாழ்க்கையைவிட்டு வெளியே வர இயலாதவனாய் உள்ளேன்.

 இந்தியாவிற்கு சுதந்திரம் நிச்சயமாகக்கிடைக்கும் என்ற வாக்குறுதியை இறைவன் எனக்குத் தந்தான். அதே சமயம் யோக வாழ்வைத் தொடர்ந்து புதிய  திருவுருமாற்றத்தை அடையவும், அதனை உலகிற்கு எடுத்துரைக்கவும் வேண்டிய பணியைக் கொடுத்தான், என்றார்.

அரவிந்தர் சிறையில் இருந்த ஓராண்டில் இந்திய அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. திலகர், கோகலே போன்ற தலைவர்கள்,சிறையிலிருந்தனர். சிலர் அந்தமான் தீவின் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தீவிர வாதிகள் சுதந்திரம் பெற வேண்டி பல  ரகசியசெயல்களில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை ஊக்குவிக்கும் சக்தியாக அரவிந்தரின் பேனா மாறியது.

அரவிந்தர் மீண்டும் தன் வேலைகளைத் தொடர்ந்தார், "கர்மயோகின்" என்ற ஆங்கிலப்பத்திரிகையும், "தர்மா" என்ற வங்காளப் பத்திரிகையையும் ஆரம்பித்தார். பூரண சுதந்திரமே குறிக்கோள் என்ற தாரக மந்திரத்தை உபதேசித்தார்அவரது எழுத்துகளும், உரைகளும் ஆங்கிலேயர்களுக்கு திகிலூட்டின.எனவே பல வழிகளிலும் அவரைஅடக்க முயன்றனர். எப்படியாவது மீண்டும் கைதுசெய்து நாடு கடத்திவிட வேண்டுமென எண்ணினர்

1910 ஆம் ஆண்டு ஒரு மாலை நேரத்தில் அவரைக் கைது செய்யவும், கர்மயோகின் அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தேடவும் அதிகாரிகள் வரப் போவதாக அரவிந்தருக்கு செய்தி வந்தது. அவரை வழி நடத்திய தெய்வக் குரல் அவரை பிரெஞ்சுக்காரர்கள் வசமுள்ள சந்திர நாகூருக்குச் செல்லும்படிக் கட்டளையிட்டது. அடுத்த பத்து நிமிடத்தில் அரவிந்தர் தன் நண்பர்கள் இருவருடன் கங்கைக்கரையை அடைந்து சாதாரணப் படகொன்றில் பயணம் செய்து விடியலில் சந்திர நாகூரை அடைந்தார். அரவிந்தரின் அரசியல் பணி அன்றுடன் முடிந்தது.

அங்கு சுமார் ஒன்றரை மாதங்கள் ரகசியமாக நண்பர்கள் பாதுகாப்பில் சாதனைகளில் ஆழ்ந்தவரை மீண்டும் தெய்வக் குரல்  வேதபுரி எனப்பட்ட புதுவைக்குச் செல்லும்படி ஆணையிட்டது.

புதுவையில் அவர் தங்குவதற்கான ஏற்பாடுகள் ரகசியமாகச்செய்யப்பட்டன.
1910, ஏப்ரல் 1 ஆம் தேதி அரவிந்தர் தன் நண்பரோடு 'டியூப்ளெக்ஸ்'என்ற கப்பலில் 
பயணித்தார்.
1910, ஏப்ரல் 4 ஆம் நாள். மாலை நான்கு மணிக்கு புதுவையில் இறங்கிய அரவிந்தரை சீனிவாசாச்சாரியும்,மோனியும் வரவேற்று சங்கர் செட்டியின் வீட்டிற்கு அழைத்துச்சென்றனர்.ஸ்வாமி விவேகாநந்தரும் அதே வீட்டில் அவரது தென்னிந்திய விஜயத்தின்போது  தங்கியிருந்தார் என அறிகிறோம்.

ரகசியப் போலீசாரின் பல தொந்தரவுகளுக்கு ஆளான போதிலும் அரவிந்தர் தன் யோக சாதனைகளக் கை விடவில்லை. 1914 ஆம் ஆண்டு அன்னை புதுச்சேரி வந்தார்.  
அரவிந்தர்  அன்னையின் யோகப் பயிற்சியே 'integral yoga'  எனப்படுகிறது. விழிப்புணர்வுடன், மன ஒருமைப்பாட்டுடன்  கணந்தோறும் இறைவனில் வாழ்வதுதான் அது

பின்பு அரவிந்த ஆசிரமம் தோன்றியது
 வங்கத்தில் பிறந்து, இங்கிலாந்தில் கல்வி கற்று, பரோடாவில் பணியாற்றி, வங்கத்தில் சுதந்திரத் தீயை மூட்டி,சுதந்திரம் எனது பிறப்புரிமை,அதனை அடைந்தே தீருவோம் என முழங்கி,சிறையில் இறையனுபவம் பெற்று, புதுச்சேரியில் திருவுருமாற்றம் பெற்று 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் இயற்கை எய்தினார். ஐந்து நாட்கள் அவருடைய உடல் ஒளியால் சூழப்பட்டிருந்தது.
ஶ்ரீஅரவிந்தரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்து தன்னுடைய வாக்குறுதியை வசுதேவ ஶ்ரீகிருஷ்ணன் நிறைவேற்றினார் என்பது அரவிந்த பக்தர்களின் நம்பிக்கையாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் நாள் அரவிந்தரின்  யோக வழியைப் பின்பற்றுவோர் புதுச் சேரியில் கூடி அவரது ஆசிரமத்தில் அவரது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்வார்கள். அன்று அவர் வாழ்ந்த அறைக்குச் செல்லும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கும்.

ஓம் நமோ பகவதே ஶ்ரீ அரவிந்தாய! ஓம் நமோ பகவதே ஶ்ரீ மீராம்பிகாய!
                   வணக்கம்.












2 comments:

  1. ரொம்ப அருமையான தொடர். மிக்க நன்றி எழுதியமைக்கு.

    amas32

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சுஷிமா.

      Delete