6 Jul 2014

உறவுகள்-1

விடியற்காலையில் எழுந்திருக்கும் கெட்ட பழக்கம் போய் நாட்கள் பல ஆயின! இரவின்  அமைதியில்  தடைகள் இல்லாமல் புத்தகங்கள் வாசிப்பதும், பகலில் தூங்குவதும் காலையில் எழுவதற்குப் பகை.
இதற்குப் பரிகாரம் தேட முடியாது, வேலைக்கா போகிறோம் என்று வாழ்க்கையை சித்தம் போக்கு சிவன் போக்கு என்று விட்டாயிற்று! சுதந்திரப் பறவைக்கு எதுக்கு இந்தப் புலம்பல் என்கிறீர்களா? என் இனிய காலைத் தூக்கம் கெட்டுப் போச்சுங்க!

காலை ஏழுமணி!

ஒரே கூச்சல் சப்தம் கேட்கிறது. பக்கத்து வீட்டுப் பெரியவர்தான் சத்தம் போடுகிறார். நீ நாசமாப் போ, என்று பெற்றபிள்ளையை ஊரெல்லாம் கேட்க சபிக்கிறார். பையன் பதிலுக்குக் கத்த, இவர் மீண்டும் ஓலமிட இடையே மருமகளின் குரல் கேட்கிறது. என்னவோ ஏதோ என்று அவர்கள் வீட்டு நாய் கூட்டணியில் சேர்ந்து தன் மொத்த சக்தியுடன் 'லொள்ள', அலறி அடித்துக் கொண்டு எழுந்தேன். சூழ்நிலை புரிய சிறிது நேரமானது. இனிமேல் தூங்க முடியாது! காது கொடுக்காவிட்டாலும் சத்தம் கேட்கத்தான் செய்யும்.
நல்ல விடியல் போங்கள்!
பெரியவருக்கு சுமார் 70 வயது இருக்கும்.  தினந்தோறும் மாலையில் கொஞ்சம் தண்ணி போட்டுவிட்டு,
பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு வருவதை வாழ்க்கையின்  முக்கியமான கடமையாகக் கொண்டிருந்தார்! மனைவி பரலோகம் போய் பத்து வருடம் இருக்கும். சொந்த வீடு. ஒற்றைக்கு ஒரு பிள்ளை. அவனுக்கும் கல்யாணம் ஆகி 7 வயது மகன் இருக்கிறான். மருமகள் வீட்டைப் பார்த்துக் கொள்ள வேலையை விட்டுவிட்டு குடும்பத்தலைவி ஆகிவிட்டார்! பிறகென்ன கவலை?

மனிதர்களுக்கு ஆண்டவன் எல்லாவற்றையும் கொடுக்கத்தான் செய்கிறான். ஆனால் சந்தோஷமாக வாழத் தெரியாதவர்களை யார் என்ன செய்ய முடியும்?

பெரியவரின் பையன் பெயர் ராமன். மனைவி கல்யாணி. ராமனுக்கு  மாலை நான்கு மணிமுதல் இரவு 2 மணி வரை வேலை. வேறே வேலை கிடைத்தால்தானே?

ஒருநாள் இரவு குடி போதையில் பெரியவர் ராமனின் படுக்கை அறைக் கதவைத் தட்டி கலாட்டா செய்துவிட்டார். வரவேற்பறை முழுதும் வாந்தி, நாற்றம்! சிவந்த கண்களும், பிதற்றலும், அரைகுறை ஆடையும் கல்யாணிக்கு ஒரே அதிர்ச்சி. இனிமேல் இங்கே இருக்க முடியாது என்று சொல்லிவிட்டாள்.

கடைசிவரை பெரியவர் தான் அப்படி செய்ததாக ஒத்துக் கொள்ளவே இல்லை. பதிலுக்கு............
"நான் ஒன்றும் அப்படி செய்யவில்லை, வெட்கம் மானம் இல்லாதவனா நான்? எவ்வளவு பொய் சொல்றீங்க. இனிமேல் கல்யாணி சமைத்த உணவைக் கூட சாப்பிட மாட்டேன். நானே எனக்கு வேண்டியதை சமைத்துக் கொள்வேன். யாரை நம்பியும் நான் இல்லை. உங்களுக்கு இங்கே இருக்க இஷ்டமில்லையென்றால் 'கெட் அவுட்'.  இது என் வீடு, போடா" என்று சொல்லிவிட்டார் பெரியவர்.
அன்றிலிருந்து மருமகளுக்கும், மாமனுக்கும் பேச்சு வார்த்தை கிடையாது.

தனியே போக ராமனுக்கும் ஆசைதான். ஆனால் ஒரு கோடி பெருமானமுள்ள வீடு? அப்பா அதை விற்றுவிட்டால், அடமானம் வைத்துவிட்டால்! இன்னொரு  வீடு வாங்கவாமுடியும்? வீட்டு உரிமைப் பத்திரங்கள் எல்லாம் அப்பாவிடம்! என்ன செய்வது?
பொறுத்தார் வீடு ஆள்வார்! 

இடையில் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். பிரசவத்துக்குப் போன கல்யாணி மூன்று வருடங்கள் தாய் வீட்டிலேயே தங்கிவிட்டாள். ராமனுக்கு சாப்பாடும் அங்குதான்.
மூன்று வயது பையனை பள்ளியில் சேர்த்த போது மீண்டும் புகுந்த வீடு வந்த கல்யாணியிடம் ராமன் சொன்னார், ''இதோ பாரும்மா, காலையில் எட்டு மணிக்குள் நமக்குத் தேவையான சமையலை செய்துவிடு. எட்டு மணிக்கு மேல் அப்பா அவருக்கு வேண்டியதை செய்து கொள்ளட்டும். இன்னும் இந்தக் கிழம் மரத்திலிருந்து இறங்கல. வயதாகிவிட்டது, இன்னும் எத்தனை நாள் இருக்கப் போகிறார்? அட்ஜஸ்ட் பண்ணிக்க.  குழந்தையை ஸ்கூலில் விட்டுவிட்டு அம்மா வீட்டுக்குப் போ. திரும்ப நாலு மணிக்கு குழந்தையோடு இங்கே வா. எனக்கு வேண்டியதை செய்து கொடு. இரவு நான் வந்து விடுவேன். ப்ளீஸ்......." என்றான்!
முதியோர் இல்லத்தில் பெரியவரை கட்டாயப்படுத்தி சேர்க்கலாம்தான். காசு யார் கொடுப்பது? இன்றைய முதியோர் இல்லங்களிலும் வீட்டு வாடகை மாதிரி மாதம் பத்தாயிரம் பணம் இல்லாவிட்டால் முடியாதே!?

வேலைக்கார அம்மா மாலை வந்து பாத்திரம் கழுவி தனித்தனியே வைத்துவிடுவார். 

ஒரே சமையலறையில் இருவர் தனித்தனி சமையல். கல்யாணி இரவு உணவை அம்மாவீட்டிலிருந்து கொண்டு வந்து விடுவாள். ஏதோ ஒரு நாள் தெரியாத்தனமாக பெரியவர் சமையலறையில் காலை எட்டு மணிக்கு முன் புகுந்து விட்டால் வீடு ரெண்டுபடும்.

எத்தனை நாள் தான் அம்மாவீட்டில் எட்டு மணி நேரம், புருஷன் வீட்டில் மிச்ச நேரம் என்று கழிப்பது?கல்யாணிக்கு பிரமாதமான ஒரு ஐடியா வந்தது.
"இதோ பாருங்க, அக்கம் பக்கத்தில இருக்கிறவங்க, ஏன் உங்கள பகல் நேரத்தில பாக்க முடியறது இல்லன்னு கேட்கறாங்க. எத்தனை நாள்தான் உங்க அப்பாவுக்கு பயந்துகிட்டு என்னை அம்மாவீட்டுக்கு அலைய விடுவீங்க? என்னாலும் முடியலைங்க. நான் இந்த வீட்டு மருமக இல்லையா?  பேசாம கொஞ்சம் லோன் போட்டு மாடியில வீடு கட்டுங்க. என்னப் பெத்தவங்களும் உதவி செய்வாங்க. பையனும் வளர்ந்துட்டான். அவனுக்குன்னு ஒரு ரூம் வேணும்.  நானும் இங்கேயே இருந்துடுவேன். எங்க அம்மா அப்பாவும்  பொண்ணுக்கு விடிவு காலம் வந்துச்சுன்னு சந்தோஷப் படுவாங்க." என்றாள்

ராமனுக்கும் அது நல்லதாகப் பட்டது. முதலில் மறுத்த பெரியவரிடம், கட்டி வாடகைக்கு விட்டால் மாதம் பத்தாயிரம் வாடகை கிடைக்கும், செலவுக்கு ஆகும் என்று சொன்னதால் சரின்னுட்டார். ரகசியம் என்னவென்றால் பெரியவரிடம் ஒன்றும் அத்தனை பணம் கிடையாது. அவ்வப்போது  ராமனிடம்தான் வாங்கிக் கொள்வார்.
 வீட்டுப் பத்திரத்தைக் காட்டி 'வங்கி' லோனும் வாங்கியாயிற்று. மாடியில் இரண்டு அறைகள், வரவேற்பறை, சமையலறை. அழகான சிறுவீடு!
புதுமனை புகு விழாவன்று பெரியவர் திருப்பதியில்!வந்தவர்கள் குடிப்பழக்கத்தைப் பற்றிக் கேட்டுவிட்டால் என்ன செய்வது? முதல் நாளே போய் விட்டார். திரும்ப வந்து நான்கு நாட்களில் மகன் மாடிக்கு குடித்தனம்  போனதும் பெரியவருக்கு கோபம் வந்திருக்க வேணும். வாடகையும் வராது, வீட்டுப் பத்திரமும்  கை மாறிவிட்டது!அதுதான் காலை சுப்ரபாதம்.

வயதான காலத்தில் பெரியவர் பிள்ளை, மருமகள், பேரன் என்று சந்தோஷமாக இருக்கக்கூடாதா?
குடிப்பழக்கம் எதற்கு?
பிள்ளை ராமன்தான் அப்பாவிடம் நல்லதனமாக நாலுவார்த்தை பேசக் கூடாதா?
மருமகள் பெற்ற தகப்பனைப் போல நினைத்து மரியாதையாக நடத்தக்கூடாதா?
முதுமையில் தனிமை கொடுமை!

இப்போதெல்லம் பேரன் அடிக்கடி சத்தம் போட்டுக் கத்துகிறான். அம்மாவிடம் வாதாடுகிறான்.  எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இக்குடும்பம் ஒரு முன்னுதாரணம். பல குடும்பங்களில் மாமியார் இல்லையென்றால் நல்லதாயிற்று என்று கல்யாணம் செய்துவிடுகிறார்கள்! அங்கும் ப்ரச்சினைகள்தான்.

ஒரு வாரமாக வீடு அமைதியாக இருந்தது. முக்கியமாக என் காலைத் தூக்கம் கெடவில்லை.

இன்று காலை ஒரு பத்து மணி இருக்கும். இரண்டு டாக்சிகள் வாசலில் வந்து நிற்கும் சப்தம்! யார் வருகிறார்கள் நம் வீட்டிற்கு என்று வாசலுக்குப் போனேன். இடது பக்கமாக இறங்கிய பெரியவர் வலது பக்கம் வந்து பின் கதவைத் திறந்தார். மெதுவாக இறங்கினார் ஒரு மூதாட்டி. வயது சுமார் அறுபது இருந்தாலும் ஆரோக்யமாகத்தான் தெரிந்தார். புதுச் சேலை, கழுத்தில் கருமணிச் சரம், தலையில் பூ, நெற்றியில் பொட்டு! டிரைவர் ஒரு பெட்டியை இறக்கி கீழே வைத்தார். இன்னொரு டாக்சியில் நண்பர்கள் போலும்!  அப்போ நாங்க வருகிறோம் என்று விடை பெற்றுக் கொண்டனர்.

பெரியவர் முகத்தில் புன்னகை. வீட்டு சாவி ஒருகையிலும், பெட்டி மறு கையிலும்!
தயங்கித் தயங்கி உள்ளே வந்த அந்த அம்மாள் திகைத்து நிற்கும் ராமனையும், கல்யாணியையும் பார்த்து கை குவிக்கிறார்.
இனிமேலாவது குடிக்காமல் இருந்தால் சரி!
இந்த வயதில் என்ன வேண்டிக்கிடக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்! பாவம் அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்து சொல்வதைக் கேட்கவாவது துணை வேண்டும் என்று தோன்றியிருக்கும் போல!

நாளைக் காலை அகர்பத்தி வாசனையோடு  வெங்கடேச சுப்ரபாதம் கேட்கும் என்று நம்புகிறேன்!


Courtesy: Google images


















5 comments:

  1. எவ்வளவு நிதர்சனமா எழுதியிருக்கீங்க.இதை அந்தப் பெரியவர் 10வருடம் முன்னாடியே செய்திருக்கலாம்.

    ReplyDelete
  2. இது உண்மைக் கதை என்றால் truth is definitely stranger than fiction :-)
    அல்லவென்றால் இந்தத் திருமணத்தை அந்த முதியவர் முன்னமே செய்திருக்க வேண்டும். பல பிரச்சினைகள் வராமல் போயிருக்கலாம். ஆனால் சொல்ல முடியாது, புதுப் பிரச்சினைகளும் வந்திருக்கலாம். ஏனென்றால் உறவுகளின் புரிந்துகொள்ளும் தன்மை இல்லாமையே அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம்.

    ஆனால் ஒன்று மட்டும் உண்மை. மூத்தத் தலைமுறையினர் வழிகாட்டிகளாக விளங்கவேண்டும். அது இல்லாக் குடும்பங்கள் இப்பாடி பல பிரச்சனைகளை சந்திப்பதைக் கண் கூடாகப் பார்க்கிறேன்.

    மேலும் குடி பல குடிகளைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன.

    amas32

    ReplyDelete
  3. முடிவைத் தவிர எல்லாம் உண்மைதான். நீங்கள் சொல்லியிருப்பது போல் ''மூத்த தலைமுறையினர் வழிகாட்டிகளாக விளங்க வேண்டும். அது இல்லாக் குடும்பங்கள் இப்படி பல பிரச்சினைகளை சந்திப்பதைக் கண் கூடாகப் பார்க்கிறேன்'' - அருமையாக விமர்சித்ததற்கு நன்றி

    ReplyDelete
  4. Very well written. The younger generation fail to understand the fact that they too will go through old age. Their mental capacity to accept the elderly as they are and bring harmony, serve them is clouded with various thoughts which are higher in their priority list. sad but true.

    Siru kathaigal, periya karuthukal.

    well written Amma.

    ReplyDelete
  5. இந்த முடிவ அந்தப் பெரிசு அப்பவே எடுத்திருக்கலாம். அப்ப எடுத்தாலும் இப்ப எடுத்தாலும் குடியை விடாதவரை பெரிசைச் சுற்றியுள்ள அம்புட்டுபேரும் பாவம்.

    ReplyDelete