10 Mar 2013

பசிப்பிணி நீக்குக


அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

இயற்கை விளக்கமாய் அனைத்து உயிரிலும் விளங்குகின்ற இறைவன் திருவடி மலர்களுக்கு வணக்கம். இந்த மானுட உயிரை உண்டாக்கிய அந்த சக்திக்கு எத்தனை நுண்ணிய திறமை என்று வியந்து நிற்கிறது என் மனம்! இந்த உடலின் அவயவங்கள்தான் எத்தனை சிறப்புடன் அமைக்கப்பட்டுள்ளன? எண்சாண் உடல்! பிரதானமாக இருப்பது வயிறு! வண்டிகளுக்கு பெட்ரோல் போடுவதுபோல உணவினால் வாழும் உடல்!

ஒரு நாளில் காலையில் எழுந்ததும் காப்பி, பின்பு நாவுக்கு ருசியாய் சிற்றுண்டி, பகலில் அரிசிச் சோற்றுடன் அவியல், பொரியல், கூட்டு, கறி, இரவில் மீண்டும் என பசி தோன்றும் போதெல்லாம் எதையாவது நிரப்பினால்தான் சும்மா இருக்கிறது வயிறு. 
இதனை ''அவா அறுப்பு'' என்ற தலைப்பில் பதின்மூன்று பாடல்களில் அற்புதமாய்ச் சொல்லியிருக்கிறார் வள்ளலவர்கள்.

''காலையாதிய முப்போதினுஞ் சோற்றுக் கடன் முடித்திருந்தனன் எந்தாய்'' எனவும், ''சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன் துன்னுநல் தவம் எல்லாம் சுருங்கி, ஆற்றிலே கரைத்த புளியெனப்போம் என அறிஞர்கள் உரைத்திடல் சிறிதும் போற்றிலேன்'' எனவும் மனிதர்களுக்கு உணவின் மீது உள்ள ஆசையை அழகாக எடுத்துச் சொல்லியுள்ளார்.
நிறைய சாப்பிட்டாலும், ஒன்றுமே சாப்பிடாமல் இருந்தாலும் இறைவனைப் பற்றிய சிந்தனை ஒருவனுக்குத் தோன்றாது. எதற்கு இறைவனைப் பற்றிய சிந்தனை தோன்றவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். அதற்குத்தானே பிறந்திருக்கிறோம்! 

வள்ளலார் வாய்மொழியிலே கேளுங்கள்,''நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து,  நெகிழ்ந்து, நெகிழ்ந்து, அன்பே நிறைந்து நிறைந்து'' இறைவனை உணர்ந்தால் என்ன ஆகும்? கண்ணீர், ஊற்றெழும், அதனால் உடம்பெல்லாம் நனைந்து போய் நாக்குழற, ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போல, இன்னமுதே, நல்ல செல்வமே, ஆனந்த நடனமிடும் என்னுடைய அரசே என்றெல்லாம், 'வனைந்து வனைந்து' சொல்லவேண்டுமாம்! அப்போது இறையருள் சித்திக்குமாம். மரணமிலாப் பெருவாழ்வு வாழவேண்டுமானால் இறைவனை உங்களில் உணருங்கள் என அழைக்கிறார்.
ஆனால்......

இறைவன் யார், எங்கிருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது இல்லையா? துன்பம் நேர்கையில் ஐயோ, கடவுளே நீ எங்கே இருக்கிறாய் என்று புலம்புகிறோம்! கடவுள் எங்கே இருக்கிறார்?
அணுவிற்கு அணுவாய், நுணுக்கறிய நுண்ணறிவாய் எங்கும் விளங்குகிறார்.
கடவுளை எப்படி அறிந்து கொள்வது?
அதற்கு ஆன்ம அறிவு வேண்டும்.
ஆன்ம அறிவு எப்போது வெளிப்படும்?
ஜீவகாருண்யத்தால் வெளிப்படும். 
ஜீவன் என்றால் உயிர். 
கருணை என்றால் இரக்கமும், தயையும், அன்பும் கொண்டு விளங்குதல்.

உயிருள்ள அனைத்து உயிர்களும் பசியினால் வாடக்கண்டாலும், தாகத்தினால் வருந்தக்கண்டாலும், நோய்களால் துன்புறக்கண்டாலும் மனம் உருகி, அன்பு நிறைந்து அத்துன்பத்தை நீக்குவதே தெய்வ வழிபாடாகும். அதுவே ஆன்ம உருக்கம். இதனால் அறிவும் அன்பும் உடனாக நின்று உபகார சக்தி விளங்கும். 

எந்தப் பொருளாலும் மனித மனம் திருப்தி அடைவதில்லை. ஆனால் உணவு உண்ணும் போது மட்டுமே போதும் போதும் என்று சொல்ல முடிகிறது. 
சமீபத்தில் ஒரு பத்திரிகைச் செய்தி! நம் நாட்டில் உணவு உற்பத்தி பெருகி இருந்தாலும் பசியினால் வாடுகின்ற ஏழை எளியவர்கள் நிலை என்ன?

பல இடங்களிலும் பசியினால் வாடும் பச்சிளங் குழந்தைகளுக்கு தாய்ப்பால் இல்லாத நிலையில், வாங்கிக் கொடுக்க காசு இல்லாமல் புகையிலைச் சாற்றினை சிறிது கொடுப்பதாகவும், சற்றே வளர்ந்த குழந்தைகளாயின் அடித்து தூங்க வைப்பதாகவும், நன்றாக இருக்கிற உடம்பை விகாரப்படுத்தி பிச்சை எடுக்கச் செய்வதாகவும்  மனதை நெகிழச் செய்யும் செய்திகள்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆட்டோவில் பயணம் செய்ய நேர்ந்தது. போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட நிலையில் நடைபாதையிலே தள்ளாடி வந்தார் ஒருவர். தற்செயலாக விழுந்தோ, கெட்டுப் போனதால் எறியப்பட்டோ ஒரு பொட்டலம் முறுக்கு நடைபாதையில் சிதறிக்கிடக்க, வந்தவர் அதைக் குனிந்து எடுத்துத் தின்றதைப் பார்த்து என் உள்ளம் நெகிழ்ந்தது.

பசிவந்திடப் பத்தும் பறந்துபோம் என்பது பழமொழி. பசியினால் உடலுக்கு மயக்கம் உண்டாகிறது. மனம் தடுமாறிச் சிதைகின்றது. புத்தி கெடுகின்றது சித்தம் கலங்குகின்றது. இந்தத் துன்பங்கள் எல்லாம் ஆகாரம் கிடைத்தபோது உண்டு பசி நீங்க நீங்குகின்றன. உள்ளம் குளிர்ந்து அறிவு விளங்கி அகத்திலும் முகத்திலும் ஜீவகளை உண்டாகிறது.

பசியுடன் இருப்பவரின் பசி நீக்குதலாகிய புண்ணியச் செயலைச் செய்பவர்கள் கடவுள் அம்சமென்று அறிய வேண்டும் என்பது வள்ளல் பெருமான் கூற்றாகும். 
''உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'' என்கிறது மணிமேகலை.
'' தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம்' என்பது பாரதி வாக்கு.
''இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
 கெடுக உலகியற்றி யான்'' என்கிறார்  வள்ளுவர்.

''வையிற் கதிர்வேலனை வாழ்த்தி வறிஞர்க் கென்றும் 
நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள்- நுங்கட்கிங்கன்
வெய்யிற்கு ஒதுங்க உதவா வெறுநிழல் போல் 
கையிற் பொருளும் உதவாது காண் கடை வழிக்கே.'' 

''பிடி சோறு இட்டு உண்டு இருமின், வினையோம் இறந்தால் ஒரு பிடி சாம்பரும் காணாது மாய உடம்பிதுவே'' எனவும் வாழ்க்கை நிலையாமையைச் சொல்லும் அருணகிரியாரின் வாக்கினை எண்ணிப்பார்ப்போமாக.

''யாதும் கொள்வாரில்லாமையால் கொடுப்பார்களுமில்லை'' என கோசலநாட்டின் சிறப்பைப் பாடுகிறார் கம்பர். அத்தகைய வறுமையற்ற பாரத நாட்டை என்றாவது காணும் பேறு கிடைக்குமா?

எங்கே எப்போது பசியுடன் இருப்பவரைப் பார்க்க நேரினும்  அங்கேயே அப்போதே உங்களால் ஆன அளவுக்கு அவர்கள் பசியை நீக்குங்கள். அதனால் கிடைக்கும் மன அமைதியையும், ஆனந்தத்தையும் அப்போது அறிந்து கொள்ளலாம்.

 ஏழையும்  பணக்காரர்களுமில்லாத ஒரு புது உலகம்!? நம்பிக்கை வரவில்லை! ஆனால் நம்மால் முடிந்த அளவு தேவையானவர்களுக்கு உதவி செய்வோம். சிறு துளி பெரு வெள்ளம்.

இன் தொண்டர் பசியறக் கச்சூரின் மனைதொறும்
இரக்க நடை கொள்ளும் பதம்.

இளைப்புறல் அறிந்தன்பர் பொதிசோறு அருந்த முன்
இருந்துபின் நடக்கும் பதம்.

என்இருகண் மணியான பதம் என் கண் மணிகளுக்கு
இனியநல் விருந்தாம்  பதம்.

என்குரு வெனும்பதம் என் இட்ட தெய்வப்பதம்
எனது குல தெய்வப் பதம்.                 ---திருவடிப்புகழ்ச்சி

                                                          
--------

























   

No comments:

Post a Comment