ஜோதி!
இதமான குளிர் வருடும் அந்தக் காலைப் பொழுதில்
'அம்மா, வருகிறேன்,' என்றவள், மீண்டும் அருகே சென்று
கட்டிக்கொண்டாள். ஏனோ அன்று போகத் தயக்கம்!
மதியம் சாப்பிட உனக்குப் பிடித்த உணவு வைத்தேன்,
மறக்காமல் சாப்பிடு என்ற அம்மாவுடன், அப்பாவும்
வந்தார் வழியனுப்ப!
திரும்ப வரப்போவதில்லை என்பதை அறியாதவளாக,
கண்மணியவள் கையசைத்துப் போனாள்!
மாலை வந்தது, நண்பனும் வந்தான், வேலை முடிகையில்
இரவும் வந்தது!
துஷ்டத்தனத்தின் உச்சியில் நின்று, வன்முறைசெய்யும்
பாவியரான துச்சாதனரை ஏந்தி வந்தது, பேருந்து.
வெறித்தனத்தில் அறிவிழந்து அறுவர் செய்த
ராட்சதத் தனத்தை எழுதவும் கூடுமோ?
எழுதினால் என் கணிணியும் கண்ணீர் சிந்தும்!
ஜோதி!
ஒளியிழந்து போனாள்!
ஒளிவீசும் மெழுகுவத்தியின்
சுடர்காத்துப் பரிதவிக்கும் பெண்டிர்களின் கூட்டம்!
பாரதமே விழித்தெழுந்து அவள் விழித்தெழுதல்
வேண்டி, அழுவார், ஐயோ என்பார், அவள் உயிர்
காப்பீர் தெய்வமே எனத் துடிதுடிப்பார்.
பாதுகாப்பு, பெண்களுக்கு அளிக்காத அரசு
இருந்தென்ன, போயென்ன? நீதி வேண்டும்,
வன்முறையில் பெண்டிர்தனை வீழ்த்தும்
கயவர்களைத் தண்டிக்கும் சட்டம் இங்கே
வேண்டும்!
பட்டதுயர் போதுமென்றே பரிந்தழைத்து,
பாவையவள் கரம்பிடித்து இட்டமுடன்
போனான், ஜோதியவன், ஜோதியோடு!
அவளோ பாரதத்தின் பெண்ணானாள்,
அனைவருக்கும் உறவானாள்,
வரலாற்றில் வாழ்ந்திடுவாள்!
அவள் அறியாள், அவள் மரணம் ஒரு
விழிப்புணர்வின் ஜனனம்!
a touching tearful homage to an unknown soul....
ReplyDelete