தீபத்தன்று விடியற்காலை 4 மணிக்கு பரணி தீபம். தரிசனத்திற்கு 2 மணிக்கு எழுந்து குளித்து கோவிலுக்குப் போனோம். கோபுர வாசலிலே நீண்ட வரிசையில் நின்று, உள்ளே போய் சிறு மண்டபத்தின், மேல் தளத்தில் குழுமி இருந்த ஜனங்களுடன் சேர்ந்து கொண்டோம். நல்ல குளிர் காற்று, நட்சத்திர ஒளியை மங்கச் செய்யும் மின் விளக்குகள். நாம முழக்கங்களுடன் பரணீ தீப தரிசனமும் ஆயிற்று.
சும்மா இருப்பது என்னத்துக்கு, ஒரு முறை சுவாமி தரிசனம் செய்யலாம்னு போனோம்.
ஐயா, கொஞ்சம்...... ஒரு நிமிஷம்.... தள்ளாதீங்க, நாங்க வெளியிலே போயிடரோம்!.....
எப்படிம்மா போவீங்க? அதெல்லாம் முடியாது முன்னாலே போங்க!
நெருக்கித் தள்ளுகிறது கூட்டம்! அடிதடி சண்டை! ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு, பிடித்துத் தள்ளுகிறார்கள். வழியை மறைத்துக் கொண்டு, வெறி பிடித்தார் போல் ஏதோ கைலாசத்திற்கு நேரடியாகப் போவதற்கு வானவர்கள் வாகனத்தில் ஏற அழைப்பது போல அலை மோதுகிறார்கள்.
இந்தக் கூட்ட சுழற்சியில் நம்மை உள்ளேயும் போகவிடாமல், வெளியேயும் வரவிடாமல், எந்தக் கணத்தில் கீழே விழுவோம், விழுந்தால் எழுவோமா, உயிரோடு இருப்போமோ என்றெல்லாம் தலை கிறுகிறுக்கச் செய்து விட்டது பக்திவெறியர்கள் கூட்டம். இதுதான் வாய்ப்பென்று மேலே உராய்கிற பெரிசும், சிறிசும்! அப்பாடா, பத்து நிமிடத் தலை சுற்றலுக்குப் பின் ஒரு வழியாய் வரிசையில் நாங்கள் நிறுத்தப்பட்டோம்! ஆம் நாங்களாக நிற்கவில்லை!
வரிசை நகர்ந்து ஒரு வழியாக அண்ணாமலையாரின் சந்நிதிப் பிரகாரம் சேர்ந்தவுடன் சடாரென்று மீண்டும் வரிசையிலிருந்து எல்லோரும் அடுத்த தர்மதரிசன வரிசைக்கு ஓடினார்கள்! திரும்பவும் வரிசைக்குப் போக விரும்பாமல், ஸ்பெஷல் டிக்கெட் வாங்கவேண்டுமா, வேண்டாமா, (வேண்டும் என்றால் வெளியில் போய் மற்றொரு வரிசையில் நிற்கும்படி ஆகும்) என்று திகைத்து, இவ்வளவு தூரம் வந்தும் தரிசனம் செய்ய முடியவில்லையே என்று வருந்தி நின்ற அந்த நேரத்தில் .......
சுமார் ஐம்பது வயது இருக்கும், நெற்றியில் குங்குமப் பொட்டு, தமிழ்நாட்டுக் கொசுவம் வைத்துக் கட்டிய புடவை, சாந்தமான முகம்! தனிவரிசையின் நுழை வாயிலில் நின்ற அந்த அம்மாள் எங்களைப் பார்த்து, உள்ளே போவணுங்களா? என்றார். ஆமாங்க, டிக்கட் இல்ல என்றவுடன், கையைக் காண்பித்து இருங்க என்று சொன்னார். ஒரு குழு உள்ளே புகுந்தபின் இடைப்பட்ட நேரம் அது. உள்ளே நுழைந்தால் நுழைவுச் சீட்டைக் காண்பிக்க வேண்டும்! அடுத்த குழுவினர் உள்ளே வர ஆரம்பித்தனர். ஒரு பத்துபேரின் நுழைவுக்குப் பின் அந்த அம்மா இரண்டு சீட்டுக்களைக் கையில் கொடுத்து எங்களை உள்ளே போகச்சொன்னார். நாங்களும் நுழைந்தோம். ஒரு பயம், எங்கே வெளியே போங்கள் என்று சொல்லிவிடுவார்களோ என்று!
அண்ணாமலையாரை கண் குளிர தரிசனம் செய்து கொண்டு வெளியே வந்தோம். அந்த அம்மாவுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போகலாம் என்று அம்மன் சந்நிதி மற்றும் பிற இடங்களிலும் தேடியும் அவர்கள் கண்ணில் படவில்லை. கதை விடுகிறேன் என்று நினைக்கிறீர்களா? சத்தியமாக உண்மையாக நடந்ததுதாங்க!
தங்குமிடம் சென்று ஓய்வு எடுத்துக் கொண்டு, உணவருந்தியபின் மாலை 4 மணிக்கு கோவில் வாசலுக்கு வந்து எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள், உள்ளே நடக்கும் எல்லாவற்றையும் கண்டு மகிழ்ந்து, தீபம் ஏற்றப்படுவதையும் பார்க்கலாம் என்றார் நண்பர்.அவர் கோயில் கட்டளைக்காரர்.
மாலை 4 மணிக்குத் திருவண்ணாமலை கோவில் கிழக்கு வாசலில் நின்றோம். நண்பரைக் காணவில்லை! எங்கும் ஜன சமுத்திரம்! 'எள் போட்டால் எள் விழாத அளவுக்குக் கூட்டம்,' என்பார்களே, அந்தப் பழமொழியின் பொருள் அன்றைக்குதான் எனக்குப் புரிந்தது. மெதுவாக மேற்கு வாசல் வந்தோம்! பக்தர்கள் கோவிலைச் சுற்றி அலை அலையாக, நான்கு வீதிகளிலும் வந்த வண்ணம்! வீதிவலம் வருகிறார்கள்! மரியாதையாக ஒதுங்கி மீண்டும் தங்கும் விடுதியை அடைந்து ஒரு நாற்காலியைப் போட்டுக்கொண்டு அமைதியாக அமர்ந்தோம். கோவிலிலிருந்து தீபத்தை மலைமேல் எடுத்துச் செல்வதையும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் நெய் தீபம் ஏற்றப்படுவதையும், ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் அக்னிப் பிழம்பையும் கண்டு ஆனந்தித்தோம்.
வீட்டிலே அமர்ந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலம் நாம் காண்பதும், நேரிலே காண்பதும் வெவ்வேறு அநுபவங்கள். ஆண்டவனை மறந்துவிட்டு கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்துத் திண்டாடுவதைவிட வீட்டிலே ஏற்றிய விளக்கிலே, விளக்கின் ஒளியிலே, ஒளியின் பிரகாசத்திலே ஆண்டவனை, அமைதியைக் காணும் ஆனந்தம்! 'அன்பாகிய அகல் விளக்கில், ஆர்வமாகிய நெய் நிறைத்து, எண்ணங்களாகிய திரியை நனைய வைத்து, ஆத்ம அநுபூதியாகிய சுடர் விளக்கை ஏற்றினேன் ' என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.
'நான் யார்' என்ற ஆத்மவிசாரத்தின் மூலம் இந்தப் பிரபஞ்ச சக்தியின் உண்மையை அறியலாம் என்று உணர்த்திய மகரிஷி ஶ்ரீ ரமணரின் 'அருணாசல அட்சர மண மாலை'யைப் பாடி இந்த கார்த்திகை தீபத்திருநாளில் அண்ணாமலையின் தீப ஒளி எங்கும் பிரகாசிக்க வேண்டுகிறேன்.
அருணாசல சிவ! அருணாசல சிவ! அருணாசல சிவ! அருணாசல சிவ! அருணாசல சிவ!
- 10 பேர் மட்டுமே இருந்த ஒரு கோவிலில் அனாவசியமாக சண்டை போட நேர்ந்தது, சமீபத்தில். இது போன்றவைகள் தவிர்க்க முடியாமல் போய்விட்டன.
ReplyDelete- வீட்டிற்கு வந்த நண்பர் ஒருவர் போன வாரம் சொன்னது. நண்பர் காலில் செருப்பு அணிந்து கிரிவலம் சென்றார். அப்போது காவி, தாடி சகிதம் வந்த ஒருவர் நண்பரின் கார் டிரைவரிடம் "அந்த [நண்பரின் பெயரைச் சொல்லி ] அவனை காலில் செருப்பு போடாமல் நடக்கச் சொல்லு" என்று சொல்லிவிட்டு மாயமாய் மறைந்து போனார். வியப்பாக இருந்தது.
- அருமையான பதிவிற்கு நன்றி.
experiences are always full of surprises...If introspected.
ReplyDelete