எப்படியோ படிப்பு முடிந்தது. மேற்கொண்டு படிக்கவேண்டும் என்பது என் ஆசை. ஆனால் தகுதியான மாப்பிள்ளை தேடுவது கஷ்டம் என்று மறுத்துவிட்டார் அப்பா. சரிதான் என் தோழிகள் சரோஜினி,சிவகாமி ,பிரேமா மூவரும் ஆசிரியப் பயிற்சிக்கு போகிறார்கள் என்ற செய்தி தெரியவர அப்பாவிடம் அனுமதி கேட்டேன். மயிலாப்பூர் சாந்தோம் கடற்கரைக்கு மிக அருகே உள்ள ஸ்டெல்லா மேட்டிடூனா ஆசிரியப்பயிற்சி கல்லூரியில் இடம் கிடைக்க சேர்ந்தேன். சிவகாமியும், சரோஜினியும் ஏற்கெனவே சேர்ந்து இருந்தார்கள். தோழி பிரேமா நேஷனல் கல்லூரியில் சேர்ந்தாள்.
எங்கள் கல்லூரியிலிருந்து இடது பக்கம் திரும்பி சாலையைத் தாண்டினால் சாந்தோம் சர்ச். கீழே இறங்கினால் கடற்கரை. தினமும் மாலைச் சிற்றுண்டி லஸ் கார்னர் உடுப்பி ஹோட்டலில். லஸ் கார்னரிலிருந்து பொடி நடையாக கடற்கரை சேர்ந்தால்
ஊட்டியில் ஆசிரியப் பயிற்ச்சி முகாம். |
ஆசிரியப் பயிற்சியின் ஓர் பகுதியாக ஊட்டிக்கு பத்து நாட்கள் கேம்ப் அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்து குன்னூர் சுற்றிப் பார்த்தபின் மைசூர் வந்து, மகாராஜாவின் அரண்மனை, காவிரி சங்கமம் பார்த்தபின் வீட்டிற்குப் போக அனுமதி அளித்தார்கள். எங்கு சேலம் பஸ்ஸில் ஏற்றி விட்டார்கள் என நினைவில்லை. சேலம் வந்ததும் கல்லூரி வேலைகளை செய்ததும் நினைவிருக்கிறது. அப்போதே என் பாட்டியார் உடல் நலம் குன்றி இருந்தார். டிசம்பர் மாதம் அவரும் காலமானார்.
ஆயிற்று, ஓடுகின்ற கதிரவனின் பின்னால் ஓடின நாட்கள். ஹாஸ்டல் உணவும் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. மலையாளிகளே அங்கு சமையல் செய்து வந்தார்கள். காப்பி, துணியில் வடிகட்டிய டிகாஷனில் தயரிக்கப்பட்டதாலும், பால் குறைவாக சேர்ப்பதாலும் சுமாராக இருக்கும். காலையில் ரொட்டி, ஒரு மாதிரி வாசனை வரும் வெண்ணை! மதிய உணவில் பூண்டு சேர்த்த ரசம் அல்லது குழம்பு. மோரில் கடலைமாவை கரைத்துவிட்டு அதில் வேகவைத்து சேர்க்கப்பட்ட வாழைக்காய், அதாவது மோர்க்குழம்பு. மாலையில் அதே காப்பி, கருப்பு எள்ளைப் பொடித்து வெல்லம் சேர்த்த எள் உருண்டை, டென்னிஸ் பால் அளவு பெரியது! இரவு புழுங்கலரிசி சாதம், ரசம் அல்லது குழம்பு. புளி சாதம் என்ற பெயரில், சாதத்தின் மேல் புளியைக் கரைத்துவிட்டு தாளித்துக் கொட்டியிருப்பார்கள்.
‘‘கீழ் நோக்கி ஓடும் நதியின் மேலே, துடுப்பைப் போட்டு படகைச் செலுத்து,
மென்மையாக படகைச் செலுத்து! உல்லாசமாக, உல்லாசமான வாழ்க்கை ஒரு கனவு, கனவு, கனவு!’’ ஆம் எல்லாம் கனவு போல்தான் இருக்கிறது. படகிலே பயணம் இன்பம் தான். தரையிறங்கினால் நடந்துதான் ஆகவேண்டும்.
ஒரு மரத்தில், அலைந்து திரிந்து குச்சிகளைப் பொறுக்கிக் கொண்டு வந்து, கீழே விழாதவாறு கவனத்துடன் கூடு கட்டியது தாய்ப் பறவை. முட்டையிட்டு குஞ்சு பொரித்தது. பறந்து பறந்து போய் ஆகாரத்தை தேடிக் கொண்டுவந்து குஞ்சுகளுக்கு ஊட்டியது. மழையோ, வெயிலோ அதற்கு ஒரு பொருட்டில்லை. குஞ்சுகள் வளர்ந்தன. தாய்ப் பறவையைப் பார்த்து, ‘அம்மா நானும் பறக்கவேண்டும்,’ என்றன. அம்மா சொன்னது, ‘உங்கள் இறக்கைகள் இன்னும் பலமடையவில்லை, பலம் வந்ததும் பறக்கலாம்,’ என்றது. நாட்கள் சென்றன. தன் குஞ்சுகளுக்கு பறக்கப் பழக்கியது தாய். ஒரு நாள் குஞ்சுகள் பறந்து போயின. தாய் தன் வழியில்! கூட்டுக்குள்ளேயே குழந்தைகளால் இருக்கமுடியுமா?
வாழ்க்கையும் அவ்வாறுதானே? இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்குத் தெரியும்? தேர்வுகள் முடிய மீண்டும் சேலம் வந்து சேர்ந்தேன். 21 வயது வாழ்க்கையில் கற்றதும் பெற்றதும் என்ன? தன்னம்பிக்கை. எந்தக் காரியம் ஆனாலும் யாருடைய உதவியும் இன்றி செய்ய முடியும் என்ற துணிவு. பிறர் மனதை எக்காரணம் கொண்டும் புண்படுத்தலாகாது என்ற ஆசை. மனித நேயம், கருணை, அன்பு, தேசபக்தி.
ஸ்வர்ணபுரியில் ஒரு நூலகம் ஆரம்பித்தார்கள். அதிலுள்ள பெரும்பாலான புத்தகங்களை நான் படித்திருக்கிறேன். தினமும் மாலையில் கோவிலுக்குப் போவதும், நூலக காப்பாளருடன் பேசுவதும் வழக்கம். பக்கத்தில் அம்மா செய்து தரும் வெங்காய பக்கோடாவை வைத்துக்கொண்டு கதைப் புத்தகம் படிப்பதில் தான் எத்தனை சுவாரஸ்யம்! அதுவும் கல்கியின் தொடர் கதைகளை பரிட்சைக்குப் படிப்பது போல் எத்தனையோ தடவை படித்திருக்கிறேன்.
வாழ்க்கை நாடகத்தில் அவரவர் கதாபாத்திரங்களை அனைவரும் செய்து வருகிறோம். என் பெற்றோருடைய கதாபாத்திரம், அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வது. என் தந்தை வழிப் பாட்டியார், என் தாயாரைப் பற்றி எப்போதும் புகார் செய்வார். என் தந்தைக்கோ தன் தாயிடம் அபரிமிதமான பக்தி, பாசம், அன்பு. தன் தாயாரைப் பற்றி ஒரு வார்த்தை பேசினாலும் கோபம் வந்து விடும். அடிக்கடி வாக்குவாதங்கள் நடக்கும். அம்மாவின் முகம் செவ செவ என்று கோபமாக இருந்தால் வானிலை அறிக்கை போல் நிச்சயமாக சண்டை காத்துக்கொண்டு இருக்கிறது என்று அறிவிப்புக் கொடுத்துவிடலாம்! இயலாமையின் காரணமாக வந்த கோபம் அம்மாவுடையது. ஆண்மையின் கோபம் அப்பாவுடையது. அந்த வயதில் இவற்றை புரிந்து கொள்ளும் பக்குவம், வயது இருக்கவில்லை. அதனால் சப்தம் போட்டுப் பேசினாலே பயமாக இருக்கும். அந்த பயத்தின் தாக்கம் இன்றும் என்னிடம் இருக்கிறது.
இந்தக்கால குழந்தைகளைப் போல் அம்மாவுடன் நெருங்கிப் பழகவில்லை. ரொம்பவும் உதவி செய்ததில்லை என்ற வருத்தம் இருக்கிறது. காலம் கடந்து வருத்தப்படுவதில் என்ன பயன்? குழந்தையாகவே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! சுகதுக்கங்களைப் பற்றிக் கவலைப் படாமல் நினைத்தபோது உண்டு, உறங்கி அந்தந்த வினாடிகளை அவ்வப்போதே மறந்து போகும் குழந்தைப் பருவத்தை மிகக் குறைவாக அல்லவா இறைவன் அளித்துள்ளான்!
வாழ்வு ஒரு நதி போன்றது. ஒரு நதிக்குத் தெரியுமா தன்னுடைய பாதை எது என்று! இரு கரைகளையும் அணைத்துக் கொண்டு,கரையோர மரங்களுக்கு சுகம் தந்து, மனிதனுக்கு வாழ்வின் ஆதாரமாய், சக்தியாய் விளங்கி,பல ஜீவராசிகளையும் தன்னுள்ளே அடக்கிக்கொண்டு, தன் பெருமை அறியாமல் மனிதன் செய்யும் சிறுமைச் செயல்களால் மாசுண்டாலும் தன் கடமையினின்று வழுவாமல் பாய்ந்து செல்லும் புனித நதிகளையும், இதே புனிதத் தன்மைகளோடு வாழும் பெண்மையையும் வணங்கி வாழ்த்துகிறேன்.
இந்தக்கால கட்டத்தில் ஒன்று, இரண்டு குழந்தைகள் மட்டுமே இருப்பதால் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எங்களை யாரும் படி,படி என்று சொன்னதில்லை. தானாகவே படிக்கவேண்டும் என்ற உந்துதல் இருந்தது. அவரவர் வேலையை யாரும் சொல்லாமலே செய்துவந்தோம். வெளிப்படையாய் காண்பிக்காத பாச, நேசங்கள். மணியிடை பவளம் போல் உள்ளத்தில் ஊற்றெனப்பெருகும் அன்பு! விழாக்களும், பரிசளிப்புகளும் இல்லாத ஆத்மார்த்தமான பரிவு. எந்தத் துன்பம் வந்தாலும் சாய்த்துக் கொள்ளும் தோள்கள். வாய்திறந்து தற்பெருமை பேசாத சுமைதாங்கிகளாய், சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் சமுதாயம். வாழ்க்கை நதி புனிதமாய்!
காலம் மாறி விட்டது. அதற்கேற்றார் போல் வாழ்க்கையும்.................