8 Oct 2016

யாசகன்

.நான் யாசகம் கேட்கப் போன நாளில்

வீடுதோறும் சென்று யாசிப்பதற்காக நான் கிராமத்துக்குச் செல்லும் பாதையில்நடந்து கொண்டிருந்தேன்.
ஒரு கனவு போல தங்கரதம் ஒன்று சற்றுத் தொலைவில்
வருவதைக் கண்டேன்.
எந்த அரசர்களுக்கெல்லாம் அரசன் இதில் தோன்றுகிறானோ என
வியந்தேன்.
என்னுடைய நம்பிக்கை சுடர் விட்டது.
ஆகா, என்னுடைய வறுமை தீரும் நாள் வந்துவிட்டது என மகிழ்ந்தேன்.
தங்கத் தேரைச் சுற்றிலும் எழுந்த தூசு முழுதும் செல்வம்
சிதறிக் கிடக்கக் கண்டேன் .
கேளாமலேயே நமக்கு பிச்சை கிடைக்கும் என நம்பினேன்.

என் நம்பிக்கை வீணாகவில்லை.
தேர் என் முன்னால் வந்து நின்றது.
தெய்விகப் புன்னகை மிளிர்ந்த முகத்தின்
பார்வை என் மேல் விழுந்தது.
தாங்கள் இரதத்திலிருந்து கீழே இறங்கினீர்கள்!
இன்றைய நாள் நல்ல நாள் என்று எண்ணினேன்.

ஆனால் எதிர்பாராத ஒன்றுதான் நிகழ்ந்தது!
என் முன்னால் நீண்ட கரங்கள்.....?
எனக்குத்தர உன்னிடம் என்ன இருக்கிறது, என்ற கேள்வி!

மாபெரும் அரசனாகிய தாங்கள்
பிச்சைக்காரனான என்னிடம்
கரங்களை விரித்து யாசிப்பதா?
ஒரு கணம் நான் குழப்பமடைந்தேன்! திகைத்தேன்!
என்ன செய்வது எனத் தெரியாமல் நின்றேன்!
பிறகு என் பையிலிருந்து ஒரு சோளத்தின் மணியை
தங்கள் கரங்களில் வைத்தேன்!

அந்த நாளின் முடிவில் என் பையைத் தரையில் கவிழ்த்தேன்!
என்ன ஆச்சர்யம்!
நான் சேகரித்த சிறுதானியக் குவியலில்
ஒளிவிடும் துண்டுத்தங்கம்.

என் கண்களிலிருந்து கண்ணீர்  பொங்கி வழிகிறது.
உள்ளம் நெகிழ
என்னிடம் உள்ள அனைத்தையும் தங்களுக்கு அர்ப்பணிக்கும்
இதயம் எனக்கு இருக்கவில்லையே என இப்போது
விம்மி விம்மி அழுகிறேன்..

               - இரவீந்திரநாத தாகூரின் கீதாஞ்சலியிலிருந்து

( இறைவன் பூமியில் இறங்கி நமக்கு உதவ வரும் நாளில் எதை அர்ப்பணிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு ஶ்ரீ அன்னையின் பதில்.
பூமிக்கு வரும்போது இறைவனும் யாசகனாகிவிடுகிறான். நாம் கொடுப்பதை
எல்லாம் வாங்கிக் கொள்கிறான்)



14 Sept 2016

உண்ணாவிரதமும் காவிரியும்

உண்ணாவிரதமும் காவிரியும்

 1993 ஆம் ஆண்டு, ஜூலை மாதம்.
இரு திருமணங்கள் நிறைவாய் நடந்த திருப்தியில் திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு நேரில்சென்று எங்கள் நன்றியைச்சொல்லி வணங்கப் புறப்பட்டோம். வழக்கம்போல் மதுரையில் இறங்கி பஸ் பயணம்.
மதுரையிலிருந்து தூத்துக்குடியின் உப்பளங்களைப் பார்த்துக் கொண்டேசெல்லும் பயணம் இனிமையானது. திருச்செந்தூரை நெருங்கநெருங்க மருக்கொழுந்தின் நறுமணம் வீசும், கடற்கரைக்காற்று நாசியை வருடும். சண்முகனின் திருவடிகளை தியானித்து இருக்கும் மனம்.

கடற்கரைக்கோயில் திருச்செந்தூர் சுமார் இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது.எப்படி அவ்வளவு அழகான கோயிலை கடற்கரையில் கட்டினார்கள் என்பது ஆச்சர்யத்திற்குரியது.  சூரனை வென்ற முருகப்பெருமான் கையில் தாமரை மலரை ஏந்தி சிவபூசை செய்யும் திருக்கோலம்.  அபிஷேக ஆராதனைகள் செய்து, கண்குளிர தரிசனம் செய்தோம்.பன்னீர் இலையில் விபூதிப்பிரசாதம் பெற்றுக்கொண்டு  விடுதிக்கு திரும்பினோம்.

பெங்களூரில் வயதான மாமியைத் தனியாக விட்டுவிட்டுச் சென்றிருந்ததால்
அன்றே மாலையில் திரும்ப முடிவுசெய்திருந்தோம்
விடுதியை ஒப்படைத்து பேருந்து நிலையம் சென்ற எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
எந்த பஸ்ஸும் ஓடாது! தமிழ்நாட்டில் ஜெயலலிதா காவிரிப் பிரச்னைக்கு தீர்வுகாண உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருக்கிறார்கள் என்றார்கள். உணவகங்களை மூடிக்கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டைத்தவிர பேருந்துகள் எல்லாவற்றையும் பணிமனைக்கு கொண்டு போய் விட்டார்கள்.

பேருந்து நிலையத்தில் என்ன செய்வது என்று திகைத்துப் போய் சுற்றிவந்த எங்களுடைய நிலையைப்பார்த்த பேருந்து நிர்வாகி, " சார், மாலை ஆறு மணிக்கு இங்கிருந்து பெங்களூருக்கு ஒரு பேருந்து செல்கிறது. எங்கும் நிற்காது. பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி இல்லை என்றாலும் உங்களுக்கு ஆட்சேபணையில்லை என்றால், உங்களை அழைத்துப் போகச் சொல்கிறேன் என்றார். சரிதான், துணிந்து போய்விடுவோம் என முடிவு செய்தோம்.

பேருந்தில் கண்டக்டர் தவிர நாங்கள் இருவர்தான் பயணிகள். மத்தியில் உள்ள சீட்டில் அமர்ந்து கொள்ளுங்கள். ஜன்னலை மூடிவிடுங்கள் என்றார் ஓட்டுனர்.
பேருந்து எங்கும் நிற்காமல் சேலம்டவுன் பேருந்து நிலையத்தில் ஓட்டுனரின் ஓய்வுக்காக, ஐந்து நிமிடங்கள் நின்றது.

சுமார் பன்னிரண்டு மணி நேரப் பயணத்துக்குப் பின் பெங்களூரை அடைந்தோம். எப்படியோ முருகப் பெருமான் காலியான ஒரு பேருந்தை எங்களுக்காக அனுப்பினான் என்று, அடுத்தவருடம் கண்டிப்பாக வந்து உன்னை தரிசனம் செய்கிறேன் என்று வேண்டிக் கொண்டேன்.

இந்தக் காவேரி நதித்தண்ணீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைதான் எத்தனை நினைவுகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது!!






1 Sept 2016

வகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை?

வகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை?: மனவளம்: வாழ்வென்பது எது வரை? சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்.......!!! வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!! தேவைக்கு செலவி...

29 May 2016

Important days in June 2016

June 1 - World Milk Day
   "    5 - World Environment Day
   "    8 - World Oceans Day
   "  12 - World day against child labour
   "  14 - World Blood donor Day
   "  15 - Elder abuse Awareness Day
   "  20 - World Refugee Day
   "  21 - International day of Yoga
   "  23 - United Nations Public Service Day
   "  26 - International day Against Drug Abuse
   "  29 - National Statistic Day.

காத்திருத்தல்.......!

 சூரிய ஒளியில் பளபளக்கும் இளந்தளிர்களோடு கம்பீரமாய்க் காட்சி அளிக்கும் மரங்கள். இளவேனிற்கால வரவை பறைசாற்றும் வேப்பமலர்களின் நறுமணம். அணில்களின் கொக்கரிப்பு, காக்கைகளின் கட்டைக் குரலொலி! அமைதியில் ஆழ்ந்து உறங்கும் இருப்பிடங்கள்.

அங்கே ஒரு மருத்துவமனை!
மருத்துவமனையின் நுழைவாயிலில் போடப்பட்டுள்ள நாற்காலிகள்! 
அதில் உலகத்துச் சோகங்களையெல்லாம் ஒன்றாய்த் திரட்டி உண்டதுபோல் காட்சியளிக்கும் முதியோர்கள்.
குட்டையாய் வெட்டப்பட்ட தலைமுடி, இரவு உடை எனப்படும் நீளஅங்கி.  
சிறிதளவு ஒப்பனை செய்யப்பட்ட முகமலர்கள். அதில் பிரதிபலிக்கும் துயரம். அம்மாவென்று அழைத்து ஒரு நிமிடமாவது நம்முடன் பேசமாட்டார்களா, நம்மைப் பார்த்து அதிக பட்சம் ஒரு புன்னகை செய்யமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு! ஏக்கம்! அன்பின் ஆதரவு தேடி நீளும் கரங்கள். கலங்கும் கண்கள்!படிக்கவே வருத்தமாக உள்ளது அல்லவா? 

அமைதியின் சன்னிதியில், புற உலகத்தாக்கங்கள், உணவு, உடை, உறைவிடம் ஆகிய எதற்கும் கவலை கொள்ளத்தேவையற்ற ஒரு வாழ்வு ! ஆனால் மனிதமனமோ அன்புக்கு ஏங்கி, அலைபாய்கிறது! 

மரணத்தின் தலைவாயிலில், பிறருடைய உதவியை எல்லாவற்றுக்கும் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் நிலைமை கொடுமையானது. 
அது மரணத்தை யாசிக்கும் நேரம்! 
மனித வாழ்வின் இறுதிக்கட்டத்தில் மிச்சம் இருப்பது மரணத்தின் மீது மானுடம் செலுத்தும் அன்பு!
என்ன வேடிக்கை, காலனின் கரங்களைப் பற்றிக் கொள்ள விரும்பும் நேரம்.......ம்....!

எனது குடும்பத் தோப்பின் மரம் ஒன்று சாய்ந்துகொண்டிருக்கிறது!
  






2 Apr 2016

குழம்புக்கூழ்

அவசரத்தில் கை கொடுக்கும் குழம்புக் கூழ், வேலைக்குச் செல்லும், தனியே சமையல் செய்து சாப்பிடும் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம்!
தேவையான பொருட்கள்:
1.சாம்பார் பொடி(நான் எம்.டி.ஆர்)பொடி பயன்படுத்துகிறேன்
2.ஓடு,கொட்டை இல்லாத சுத்தப்படுத்திய புளி
3.உப்பு
4.தாளிக்க எண்ணை
5.கடுகு
6.வெந்தயம்
7.பெருங்காயக்கட்டி சிறிது
8.மஞ்சள் தூள்

15 நாட்களுக்கு வேண்டிய கூழ் செய்ய எப்படி அளப்பது? பிரமாதமாக ஒன்றும் இல்லை!
தினப்படி குழம்பு செய்ய எவ்வளவு புளி எடுப்பீர்கள்? அதே போல் 15 உருண்டை புளி! அதேபோல பொடி, உப்பு!
அடுத்ததாக இந்தப் புளியை ஒருமுறை தண்ணீரில் கழுவி நன்றாக வடித்துவிடுங்கள்.
இதை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் குக்கரில் ஒரு விசிலுக்கு வைத்து எடுங்கள்! நன்கு ஆற விடுங்கள்.
மிக்சியில் வேகவைத்து ஆறிய புளியை மிருதுவாக ஆகும் வரை அரையுங்கள்.
ஒரு கடாயில் எண்ணை விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள், கருவேப்பிலை சேர்த்து
கடைசியில் சாம்பார்த்தூள் சேர்க்கவும். வாசனை நாசிக்கு வரும் போது அரைத்து வைத்துள்ள புளிக் கூழை சேர்த்து நன்றாகக் கிளறி, உப்பு சேர்க்கவும். ஆறியதும் பாட்டிலில்போட்டு வைக்கவும்.
குக்கரில் பருப்பும், காயும் சேர்த்து வேக வைத்து அதில் இந்தக் கூழை தேவையான அளவு சேர்த்தால் குழம்பு ரெடி.
என்னம்மா இன்னைக்கு ஒரே உப்பு, புளித்து வழியுது, காரம் தூக்குது என்று யாரும் சொல்ல முடியாது! அதிகப்படியாக,

வற்றல் வறுத்து புளிக்கூழ் சேர்த்தால் வற்றல் குழம்பு.
கொஞ்சம் தனியா, தேங்காய் அரைத்துச் சேர்த்தால் சாம்பார்.
வெண்டை, கத்தரி வதக்கிஒரு மூடித் தேங்காய் அரைத்துச்சேர்த்து கூழையும் சேர்த்தால்  சரவணபவன் ஸ்பெஷல்.ட்
நிலக்கடலையை வறுத்துக் கொண்டு கூழோடு சேர்த்து, சிறிது தனியாப்பொடியோடு கலந்தால் புளியோதரை.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு வேளைக்குத் தேவையான அளவு சமைத்துக் கொள்ளலாம்.

நான் என் கணவருடன் இரண்டு ஆண்டு காலம் அரவிந்தர் தியானமையத்தில் நடந்த காலை நேர வகுப்புகளுக்கு சென்றுவந்தேன். 9.30க்கு வேன் வந்துவிடும். பருப்பும், காயும் குக்கரில் வைத்துச் சென்று விடுவேன். திரும்ப வந்ததும் ஒரு மணிக்கு சுடச் சுட கூழ் சேர்த்து குழம்பு.

ஒரு வாரத்துக்கு செய்து பாருங்கள்!
நீங்களே தயாரிக்கும் சாம்பார் பொடியையும் உபயோகிக்கலாம்.
பெரும்பாலும் சமையல் செய்வதில் அளவுதான் காலை வாரும்.
ஒருநாள் தயாரிப்பின் அளவு, எத்தனை மடங்கு வேண்டுமானாலும் அதிகரித்துச் செய்து கொள்ளலாம்.

அதிக நாள் தயாரிப்பாயின் எண்ணை அளவு கூடுதல் வேண்டும். தக்காளி, வெங்காயம் சேர்த்து  மணக்க மணக்க திடீர் சாம்பார் ! சுவைத்து மகிழுங்கள்!

4 Jan 2016

அண்ணா அண்ணா!



கடை வீதிக்குப் போய் சாமான்கள் வாங்கிக் கொண்டு வருகிறேன் எதிரிலே கையில் சூட் கேசுடன் அண்ணா! இந்த நேரத்தில் எங்கே கிளம்பி விட்டீர்கள் என்கிறேன். சென்னைக்குதான் என்று என்னை அணைத்துக் கொள்கிறார்! என் கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது. எதற்கு அழுகிறாய், கண்களைத் துடைத்துக் கொள், என்கிறார்.

அண்ணா, எனக்கு மிகவும் பிரியமானவர். சின்னவயதில் அண்ணாவுடன் சைக்கிள் வாகனத்தில் நிறைய சுற்றியிருக்கிறேன். சைக்கிளில் ஹேண்டில்பாரைப் பிடித்துக் கொள்ளாமல் கையை இரண்டுபக்கமும் நீட்டிக்கொண்டு சைக்கிள் மிதிப்பார். வெகு வேகமாகப் பறக்கும் சைக்கிளின் பின் சீட்டில் பயமும், சிரிப்பும், பெருமிதமுமாக உட்கார்ந்து செல்வது ஒரு அனுபவம்! குழந்தைகள் படத்திற்கு என்னைமட்டும் ஸ்பெஷலாக அழைத்துப் போயிருக்கிறார். பெரும்பாலும் பள்ளிக்கூடத்தில் என்னை விட்டுவிட்டுதான் கல்லூரிக்குப் போவார்.

பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.  அண்ணாவுக்கு வேண்டிய பஸ் இன்னும் வரவில்லை. எங்கும் இருள் சூழ்ந்திருக்கிறது! அடடா அண்ணா பஸ் ஏறிவிட்டால் இந்த இருட்டில் எப்படி தனியே வீட்டுக்குப் போவது என்று யோசிக்கிறேன். அதற்குள் அண்ணா சொல்கிறார், 'வா போய் ஒரு காப்பி குடித்துவிட்டு வருவோம். பஸ் எப்போது வரும் என்று தெரியவில்லை.' அண்ணாவுக்கு அடிக்கடி காப்பி குடிக்கவேண்டும். ஒரு அரை டம்ளர் காப்பி என்று அரைமணிக்கு ஒருமுறை சமையலறையில் குரல் கேட்கும்..... பக்கத்தில் இருக்கும் டீக்கடைக்குள் நுழைகிறோம்.

காப்பி குடித்து வரும் போது அண்ணா சொல்கிறார் போய் அந்த ஆனந்தவிகடனை வாங்கிவாயேன். நான் பஸ் வருகிறதா என்று பார்க்கிறேன்.
நான் போய் விகடனை வாங்கி வருவதற்குள் கனவு கலைந்துவிட்டது!ஆனால் கனவு போலவே இல்லாத இதய நிறைவு!

 நீலகிரியில், குன்னூரில் நாங்கள் வாழ்ந்த காலத்தில் அண்ணா பிஏ, படித்து முடித்திருந்தார். நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சனி, ஞாயிறுகளில் விடியற்காலையில் இருவருமாய் நடக்கப் போய்விடுவோம். மெல்லிய பனித் திரை போர்த்த இயற்கையையும், பறவை ஒலிகளையும், மெளனத்தின் ஆனந்தத்தையும் ரசிக்க எனக்குக் கற்றுக் கொடுத்தது அண்ணாதான்.  நடைப் பழக்கம் எனக்கு அவரால்தான் வந்தது.
தமிழ் வாணனின் கல்கண்டு பத்திரிகையை தவறாமல் வாங்கி வருவார். இயற்கை உணவுப் பழக்கங்கள் அந்தக்காலத்திலேயே அவரிடம் ஏற்பட்டதற்கு காரணம் கல்கண்டு பத்திரிகைதான்.
தினமும் காலையில் ஆசனங்கள் செய்வார். அதைப் பார்த்து பத்மாசனம் உள்ளிட்ட யோகாசனங்களை அவரிடம் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

''மேல் குன்னூரில்" சிறிது காலம் கணக்கு வாத்யாராகப் பணிபுரிந்த போது தான் வாங்கிய முதல் சம்பளத்தை என்னிடம்தான் கொடுத்தார். புதிய உறவுகளை உயிர்ப்பிக்கும்  திருமணங்கள்   பழைய உறவுகளை வெட்டி விடுகின்றன என்பதில் சந்தேகமில்லை. பாதைகள் மாறினாலும், இதயத்தின் அன்பு மாறுவதில்லை.

அண்ணா எப்போதுமே அதிகம் பேசமாட்டார். நான்கு வயதில் தாயை இழந்தவர்.  இன்னும் ஓராண்டில் எண்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடவேண்டும் என்று எண்ணிய வேளையில் மருத்துவ மனையில், நண்டின் பிடியில்! மனம் வருந்துகிறது!

பச்சை இலைகள் முதிர்ந்து சுருங்கி கீழே வீழ்ந்து மண்ணோடு மண்ணானாலும் தாய்மரத்தின் முத்திரை எப்போதும் நீங்காதிருக்கும் அல்லவா?

  அண்ணனிடம் கொண்ட அன்பின் நினைவலைகளில்  குளிர் காய்கிறது மனம்.