16 Jul 2017

ஶ்ரீஅரவிந்தர் -12
 இதுவரை ஶ்ரீ அரவிந்தர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்  உணர்ச்சியூட்டும் எழுத்துக்களால் கொண்டுவந்த தேசியவாதம், சுதேசி இயக்கம், பூரணசுதந்திரக் கொள்கை ஆகியவற்றைப் பார்த்தோம்

இனி அரவிந்தரின் மறுபக்கத்தைப் பார்ப்பது இங்கே அவசியமாகிறது. இவ்வளவு தீவிரமாக இந்திய தேசமே தன் தாய், தேசிய விடுதலையே தன் உயிர் மூச்சு, தனக்கென்று தனிப்பட்ட உலக வாழ்வே இல்லையென்று வாழ்ந்த அரவிந்தர் ஏன் சுதந்திரப் போராட்டக் களத்திலிருந்து திடீரென விலகினார்? ஏன் பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த புதுச்சேரிக்குத் தலைமறைவாகச் சென்றார்
அலிப்பூர் சதி வழக்கில் அரவிந்தரின் பங்கு என்ன? இவற்றை அறிந்து கொள்ளுமுன் 
நாம் மீண்டும் அவரது ஆன்மிக வாழ்வின் பல்வேறு நிலைகளைப் பார்ப்போம்

1872 ல் பிறந்த அரவிந்தர் 1877 ஆம் ஆண்டு  பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டார். 1893ஆம் ஆண்டு தாயகம் திரும்பினார். பம்பாய்த் துறைமுகத்தில் இறங்கிய அவர் உள்ளத்தில் அதுவரை இருந்த இருள்நீங்கி, பரிபூரண அமைதி நிலவிற்று. ஒரு தாயின் அன்பு நிறைந்த அணைப்பின் ஆனந்தமும், அமைதியும் அவரை ஆட்கொண்டன.

தெய்விக அனுபவங்கள் அவர் வாழ்வின் ஒரு பகுதியாயிற்று.
"தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவனின் வாழ்வில் தெய்வம் ஒரு பகுதியாகி, அவனை வழி நடத்துகிறது. " 

பரோடா வந்த அரவிந்தரும் இந்திய அரசியல், மற்றும் சமூக வாழ்வினை நன்கு புரிந்து கொண்டார். ஆகவே இரண்டு அம்சங்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாதது என உணர்ந்தார்ஒன்று தாய் நாட்டின் சுதந்திரம். இரண்டு மனித வாழ்வை பக்குவமாக்க, யோக வாழ்வை சரியான நேரத்தில் ஆரம்பித்து அதில் வெற்றியடைதல்.

முதலில் யோகா என்றால் என்ன என்பதை அறியலாம்.  'யுஜ்' என்னும் சம்ஸ்கிருதச் சொல்லிலிருந்து தோன்றியது 'யோகா' என்ற சொல். ஒவ்வொரு தனி மனிதனின் ஆன்மா, பிரபஞ்ச சக்தியுடன் ஒன்றிணைதல்  யோகம்சுமார் ஐயாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த உடல் சார்ந்த அறிவே 'யோகா'. தன்னுள் எப்படி எத்தகைய  நல் ஒழுக்கங்களைக் கடைப் பிடித்தால் பிரபஞ்ச சக்தியை அறியலாம் என்பதைக் கற்றுத் தருவத்தே யோகா

உலகம் தோன்றிய நாளிலிருந்து தன்னுடையபிறப்பையும்அதன் காரணத்தையும் அறிய முயலுகிறது மானுடம். அந்த ஆராய்ச்சியின் பயனாகத் தோன்றியதே யோகா. ஆசனங்கள் செய்வதோ, மூச்சுப் பயிற்சி செய்வதோ யோகா அன்று. அவை யோக வாழ்வின் முதல் இரண்டு படிகள் மட்டுமே

சிக்கல்கள் நிறைந்த அற்புத இயந்திரமே மனித உடல். அந்த உடலை ஆள்வது மனம். உட்சக்தியாக மறைந்து விளங்குவது ஆன்மா. ஐம்புலன்களாகிய யானையை மனமெனும் அங்குசத்தால் அடக்கி, தன்னை அறிய முயல்வதே ஆன்ம தரிசனம். அதுவே மனிதப்பிறவியின் நோக்கம்!

பரோடா சமஸ்தானத்தில் வேலைக்கு சேர்ந்த அரவிந்தருக்கு குதிரைகள் பூட்டிய வண்டி ஒன்று பயணம் செய்யக் கொடுக்கப்பட்டிருந்தது
ஒரு நாள்........
அவர் பயணம் செய்த வண்டிக்கு விபத்து நேர இருந்தது. ஆனால் அது தடுக்கப்பட்டது. எப்படியென்பதையும் தன் அனுபவத்தையும் ஒரு கவிதையில் பதிவு செய்துள்ளார் ஶ்ரீஅரவிந்தர்

"நடனமிடுவதைப்போல குதிரைகள் குளம்படிச் சப்தம் எழுப்ப
கூச்சல் நிறைந்த சாலையைத் தாண்டி,
நான் பயணித்த வண்டி ஆபத்தை எதிர் நோக்கியது.
குளிர்ச்சி பொருந்திய சோலையுள் நுழைந்தார்போலும் 
என்னைத் தழுவி அணைத்துக் கொண்டது இறைவனுடைய உடல்.

என் தலைக்குமேல் சக்தி வாய்ந்த அமைதி நிறைந்த முகம் கண்டேன்
எல்லையற்ற பெரு வெளியில் அமரத்துவம் திகழும் 
அந்த ஊடுருவும் பார்வையின் மேன்மையை உணர்ந்தேன்.

சூரிய ஒளியாய் மின்னும் குழற்கற்றைகள் மென் காற்றோடு அசைய
உலகத்தையே தன் இதயத்தில் தாங்கியவனாய் இருந்த அவனே நானாகக் கண்டேன்
அழிவற்ற தேவனின் சக்தியை
என்றென்றும் நிலைத்து நிற்கும் பூரண அமைதியை 
என் இதயக் கோயிலில் குடிவைத்தேன்.

கண நேரத்தில் எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பின.
அந்தக் கணத்தின் நினைவுகள் மட்டும் 
அழியாமல் என்னுள்ளே நிலைத்து நிற்கிறது."

இந்த நிகழ்ச்சி நடந்த போது  கடவுள் என்றால் யார்தெய்விக சக்தி என்றால் என்ன என்பதையெல்லாம் நான் அறியவில்லை. தேஷ்பாண்டே என்பவர் அந்த நாட்களில் யோகாசனங்களும், மற்றும் பல யோக சாதனைகளும் செய்து வந்தார். என்னையும் ஈடுபடச் செய்ய வேண்டும் என்று விரும்பினார், ஆனால் உலகைத் துறக்கும் யோக சாதனைகளை நான் விரும்பவில்லைஎன்னுடைய நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்ற தாகமே என் வாழ்வின் ஒரே நோக்கமாக இருந்தது.

ஆனால் இதே யோக சாதனைகள் ஒருவனின் உடலுக்கு வலிமையையும், மனதுக்கு அளப்பரிய ஆற்றல்களையும் வழங்க வல்லதென்று நான் அறிந்து கொண்ட போது
அந்த யோக சக்தியை என் நாட்டின் விடுதலைக்கு வழி வகுக்கும் கருவியாக ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது  என்று எண்ணினேன்.

ஏதோ ஒரு சக்தி என்னை யோக வாழ்வில் ஈடுபடும்படிச் செய்தது.

யோக வாழ்வில் அரவிந்தரை ஈடுபடச் செய்த நிகழ்வுகளை அடுத்த பதிவில் காணலாம்.

(ஶ்ரீஅரவிந்தர், யோகா,பெயர்க் காரணம், பரோடா அனுபவம், அறிமுகம்...)






25 Jun 2017

ஶ்ரீஅரவிந்தர்-11(அலிபூர் சதிவழக்கு)



கல்கத்தா நகரத் தலைமை நீதிபதி கிங்ஸ்போர்ட் பல தேசபக்தர்களையும், பத்திரிகையாளர்களையும் சிறையில் அடைத்தான். சுசில்சென் என்ற பள்ளி மாணவனுக்கு முச்சந்தியில் சவுக்கடி கொடுக்கச் செய்தான். அதனால் கொதித்தெழுந்த தீவிரவாதிகள் கிங்ஸ்போர்டைக் கொல்லத் திட்டமிட்டனர்.எண் 15, கோபி மோஹன் தத் குறுக்கு சாலையிலுள்ள வீட்டில் வெடி குண்டு தயாரிக்கப் பட்டது.
அவரைக் கொல்வதற்காக மிட்னபூரைச் சேர்ந்த குதிராம் போஸ், பிரபுல்லா  சந்திர சக்கி என்ற இரு இளைஞர்களும்  முசாஃபர்பூர் சென்றனர்.

30-04-1908 அன்று கிங்ஸ்போர்ட் தனது மாளிகையிலிருந்து இரண்டு கோச் வண்டிகளில்  புறப்பட்டார். காத்திருந்த இளைஞர்கள் கிங்ஸ்போர்ட் இரண்டாம் கோச் வண்டியில் இருப்பதை அறியாமல் முதல் வண்டி மீது குண்டு வீசினர்.
அந்த வண்டியில் பயணம் செய்த  திருமதி. கென்னடி என்ற பெண்மணியும், அவரது மகளும் இறந்தனர்.

பிரபுல்லா சந்திர சக்கி, தன்னைக் காவலர்  பிடிக்குமுன் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு மாண்டான். பிடிபட்ட குதிராம் தூக்கிலிடப்பட்டான்.

இதைத் தொடர்ந்து பரீந்திர கோஷின் மாணிக்டோலா தோட்ட ஆசிரமத்தை போலீசார் சோதனை இட்டனர். வெடி குண்டுகள், ஆயுதங்கள் இவற்றைக் கைப்பற்றினர். பரீந்திரரும், மற்றும் 34 பேர்களும் கைது செய்யப் பட்டனர்.
ஶ்ரீ அரவிந்தரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அரவிந்தரைக் கைது செய்த காட்சிகள் கண்முன்னே தோன்றுமாறு பலரும் பதிவிட்டுள்ளார்கள்.கல்கத்தாவின் அலிப்பூர் சிறை அரவிந்தரின் யோக பூமியாக  மாறி ஆன்மிக வாழ்வில் அவர் பூரணமாக ஈடுபடக் காரணமாயிற்று.

இதுவே அலிப்பூர் சதிவழக்கு அல்லது மாணிக் டோலா  வெடிகுண்டு வழக்கு என அந்நாளில் புகழ் பெற்றது.


( ஶ்ரீ அரவிந்தர் கைது, அலிப்பூர் சதி வழக்கு)

19 Jun 2017

ஶ்ரீ அரவிந்தர் -10

ஶ்ரீ அரவிந்தர் -10 
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி முப்பது   ஆண்டுகளும்
இருபதாம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளும் இந்திய வரலாற்றில் மறுமலர்ச்சிக் காலமாகும்.
இந்தியாவில் பல சிற்றரசர்களும், குறுநில மன்னர்களும் ஒருவருக் கொருவர் போரிட்டு வந்தனர். சுக வாழ்வு வாழ்ந்து வந்த அவர்கள் அடிமைத்தனத்தை ஆதரித்தனர்
மக்கள்மூட நம்பிக்கை உடையவர்களாக,அடிமைத்தனத்திற்கு அடிபணிபவர்களாக, சோம்பி இருந்தனர்
ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய நாட்டின் செல்வங்களைச் சூறையாடியது. சாதி வேற்றுமைகள் வளர்ந்தன. இந்தப் பின்புலத்தில்தான் சுதந்திர இயக்கம், தேசிய இயக்கமாகத் தோன்றியது.

இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர் குலைக்க 1905 ஆம் ஆண்டில் வங்கப் பிரிவினையை அமல் படுத்தியது ஆங்கில ஆட்சி எனப் பார்த்தோம்

அடிமைகளாக வாழ்ந்த மக்கள் தங்கள் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து சுதந்திர உணர்வு பெற வேண்டுமென்பதற்காகவே அரவிந்தரின் பேனா முனை பல கட்டுரைகளை எழுதியது.
சமுதாய முன்னேற்றத்திற்கு விடுதலை இன்றியமையாதது என வலியுறுத்தியது.

அரசியல், பொருளாதார சுதந்திரமே ஒரு நாட்டை வலிமையுறச் செய்யும் என எடுத்தியம்பியது.
அடக்கு முறை, இனப்பாகுபாடு, அரசியல் விடுதலை இன்மை, வறுமை இவற்றிலிருந்து மக்களை விடுவிப்பதே தன் தலையாய கடமை என்று எண்ணிய அரவிந்தர் 1906 ஆம் ஆண்டு 710 ரூபாய் சம்பளத்துடன் கூடிய பரோடா கல்லூரி வேலையை ராஜினாமா செய்துவிட்டு கல்கத்தா சென்றார். 'வங்காள நேஷனல் கல்லூரியில்' 150 ரூ சம்பள வேலையை ஏற்றுக் கொண்டார்.
அத்துடன் அரவிந்தரின் பதிமூன்று ஆண்டு கால பரோடா வாழ்வு நிறைவுற்றது.

வங்காளத்தில் அவரது சகோதரர் 'பாரின்' நடத்திவந்த "யுகாந்தர்" பத்திரிகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார்

இதே சமயம் 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்திர மல்லிக் என்பாரின் நிதி உதவியுடன்  விபின் சந்திரபால் என்பவர் நடத்திவந்த " வந்தேமாதரம்" என்ற பத்திரிகையைத் தன் புரட்சிகரமான கருத்துக்களைப் பரப்பப் பயன்படுத்திக் கொண்டார்.
அரவிந்தரே முதன் முதலாக பூரண சுதந்திரமே எங்களது நோக்கம் என வெளிப்படையாக  தைரியமாக முழங்கினார். மீண்டும் மீண்டும் 'சுதந்திரம் எங்களது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவோம்' என கோஷமிட்டார். "ஸ்வராஜ்யம்" என்ற முழக்கம் எங்கும் எதிரொலிக்கக் காரணமானவர் அரவிந்தரே!

1. ஒத்துழையாமை 2. சாத்விக எதிர்ப்பு 3.வெளிநாட்டுப் பொருட்களை ஒதுக்குதல் 4. தேசியக் கல்வி  ஆகியவை அவருடைய அரசியல் கொள்கைகளாகும்.

இதனால் ஆங்கில அரசு அவரை அரசுக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டிவிடும் பயங்கரவாதி என அறிவித்தது.' வந்தே மாதரம்' பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளால் அவரைக் கைது செய்யவும் முயன்றது. ஆனால் போதிய சாட்சியங்கள் இன்மையால் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாமல் போனது. அரவிந்தரோ வங்கத்தின் மூலை முடுக்குகளிலுள்ள கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் சென்று தன் பேச்சு வன்மையால் சுதந்திர தாகத்தை மக்களிடையே எழுப்பி வந்தார். ஆங்கிலேயர்களும் அவருடைய பேச்சுக்கும், எழுத்துகளுக்கும் மக்கள் செவி சாய்ப்பதை உணர்ந்து அவரைக் கண்டு நடுங்கினர்.
சூரத் காங்கிரஸ் மாநாடு உள்ளிட்ட பல கூட்டங்களிலும் அவர் பங்கேற்றார்.

இந்திய விடுதலை இயக்கத்தின் பின்புலத்தில் இயங்கிய மாபெரும் சக்தியாக ஶ்ரீ அரவிந்தர் இயங்கினார். அதனாலேயே அவர் தன் தாயாகவே கருதி  பூரண சுதந்திரத்திற்காக மேற்கொண்ட தவவாழ்வின் மேன்மையை யாரும் உணரவில்லை

அரவிந்தர் தன் எழுத்துக்களால் மக்களின் உணர்வுகளை தூண்டினாரே தவிர  குண்டு வெடிப்பு, கொலை இவற்றால் சுதந்திரம் பெறமுடியும் என்று நம்பவில்லை.
ஆனால் அரவிந்தரின் சகோதரர் பாரின் என்பவரும்,அவருடைய நண்பர்களும் வெடிகுண்டு தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தனர்
கல்கத்தா நகர தலைமை நீதிபதி கிங்ஸ்போர்ட் என்பவரைக் கொல்லவும் திட்டமிட்டனர்.

(அரவிந்தரின் அரசியல் கொள்கைகள், வந்தேமாதரம், யுகாந்தர்,எழுத்துகள்)