3 Apr 2017

ஶ்ரீஅரவிந்தர்-4



அரவிந்தருக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கும் என்ன தொடர்பு?

அரவிந்தர் பதினான்கு ஆண்டுகள் இங்கிலாந்தில் வசித்தபோதிலும்  அவருக்கு அந்த நாட்டின் மீது பற்றுதல் ஏதும் இருக்கவில்லை. மாறாக அவருக்கு இந்திய நாட்டின் மீது தனியானதொரு பாசம் இருந்தது. அவர் இந்தியாவை வெறும் பூமியாக நினைக்கவில்லை. உயிருள்ள தாயாகவே கருதினார். சிறுவயதிலிருந்தே தாயன்பைப் பெறாத அரவிந்தர் தான்பிறந்த நாட்டை தன் தாயாகக் கருதியதில் வியப்பில்லை.

 அவருடைய தந்தையார் கிருஷ்ணாதன்தாஸ்  தன் பிள்ளைகளுக்குப் பண உதவி செய்யவில்லை என்றாலும் இந்திய நாட்டில் ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியைப் பற்றிய செய்திகளை, செய்தித்தாள்களின் வெட்டப்பட்ட பகுதிகளை அனுப்பி தெரிவித்து வந்தார்.எனவே தன்னுடைய கடமை ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டியதுதான் என்று எண்ணியதால்தான்  அரசாங்கப் பதவி வகிக்க அவர் விரும்பவில்லை.

அரவிந்தர் லண்டனில் படித்துவந்த காலத்தில் 'மஜ்லிஸ்' என்ற மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவராக விளங்கி பல உணர்ச்சிகரமான சொற்பொழிவுகளை ஆற்றினார்.
ஆங்கில ஆட்சியை எதிர்த்த இந்திய மாணவர்களின்  ரகசியக்குழு ஒன்று இருந்தது.
 அதற்கு " தாமரையும் குத்துவாளும்" என்று பெயரிட்டிருந்தனர்.  அதன் ஒவ்வொரு அங்கத்தினரும் இந்தியாவின்  விடுதலைக்கு தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிப்பதாக சத்யப்பிரமாணம் செய்ய வேண்டும்.  அரவிந்தர் லண்டனை விட்டுக் கிளம்புவதற்குமுன் ஒரே ஒரு கூட்டம் மட்டுமே கூட்டப்பட்டது.


அரவிந்தர் ஐசிஎஸ்  தேர்வில் வெற்றி பெற்றாலும், பட்டம் பெறத் தேவையான குதிரை ஏற்றத் தேர்வுக்குச் செல்லாததால் ஐசிஎஸ் பட்டம் அவருக்குக் கிடைக்கவில்லை. பின் என்ன செய்வது என்று எண்ணிய தருணத்தில் அரவிந்தரின் தந்தையின் சினேகிதர் ஜேம்ஸ் காட்டனின் உதவி மீண்டும் கிடைத்தது.
அந்த நேரத்தில் லண்டன் வந்திருந்தார் பரோடா மஹாராஜா, சர் சாயாஜிராவ் கெய்க்வாட்.  அவர் பல இடங்களுக்கும் பயணம் செய்தவராகவும், சிறந்தவற்றைத் தேர்ந்தெடுக்கும் திறமை வாய்ந்தவராகவும் விளங்கினார். அரவிந்தர் மகாராஜாவைச் சந்தித்தார். 200 ரூபாய் சம்பளத்தில்  அவரது உதவியாளர் பணியைப்பெற்றார்.

பதினான்கு ஆண்டுகள் இங்கிலாந்தின் தவவாழ்வை முடித்துக்கொண்டு 1893 ஆம் ஆண்டு, பிப்ரவரி 6ஆம் தேதி, தனது 21 ஆம் வயதில் பம்பாயின் அப்பலோ பந்தர் துறைமுகத்தில் S.S. Carthage என்ற பெயருடைய கப்பலில் பயணித்த அரவிந்தர் இறங்கினார்.

இந்தியத்தாயின் வரவேற்பு எப்படி இருந்தது? இதுநாள்வரை இல்லாத ஒரு
மிகப்பரந்த அமைதியைத் தன் மகனுக்கு அளித்து அரவிந்தரை அணைத்துக் கொண்டாள் அன்னை பவானி. அதுவே அவருடைய லட்சியத்திற்கு அவள் அளித்த அனுமதியாகும்!
"A vast calm descended upon him with his first step on Apollo Bunder."

அதே நேரத்தில் அவர் தன் தந்தையின் மரணச் செய்தியை அறிந்து துயரம் கொண்டார்.
ஆம், தனது ஐ சி எஸ் பாஸ் செய்த அருமை மகன் வரும் நாளுக்காகக் காத்திருந்த கிருஷ்ணதான்தாஸின் தலையில் பேரிடியாக விழுந்தது அவர் பயணம் செய்த கப்பல், போர்ச்சுகல் நாட்டினருகே முழுகிப் போயிற்று என்ற தவறான செய்தி.

ஏற்கெனவே அவரது மனைவியார் குழந்தைகளைப் பிரிந்த ஏக்கத்தினால் மனப்பிறழ்வு நோய்க்கு ஆளாகியிருந்தார்.எந்த வைத்தியத்தாலும் அவரை குணப்படுத்த முடியவில்லை. அதிர்ச்சிக்கு ஆளான கிருஷ்ணதான் தாஸ் மனமுடைந்து அரவிந்தரின் பெயரைக் கூறியவாறு உயிர் நீத்தார்.

விதியின் விளையாட்டை யாரே அறியமுடியும்?ஏழு வயதில் பெற்றோர்களைப் பிரிந்த சகோதரர்கள் திரும்பி வந்த போது தந்தை உயிருடன் இல்லை! தாயோ மக்களை அடையாளம் காணும் நிலையில் இல்லை!!!

( ஶ்ரீ அரவிந்தர், இந்தியா திரும்புதல், தந்தை  உயிரிழத்தல், ஆழ்ந்த அமைதியின் வரவேற்பு)

26 Mar 2017

ஶ்ரீஅரவிந்தர் 3




அரவிந்தாவையும்,சகோதரர்களையும் இங்கிலாந்தில் வில்லியம் ட்ரெவிட் அவர்களிடம் ஒப்படைத்த பின் கிருஷ்ணதான் கோஸ் வங்கம் திரும்பினார்.

அரவிந்தரும், சகோதரர்களும் சுமார் நான்காண்டுகள் டிரெவிட் குடும்பத்தாருடன் வசித்தார்கள். டிரெவிட்டும், அவர் மனைவியும் ஆஸ்திரேலியா சென்றதால் சகோதரர்கள், டிரெவிட்டின் தாயுடன் லண்டன் மாநகரில் வசிக்கவேண்டி வந்தது.
அங்கு செயிண்ட் பால் பள்ளியில்1884 ஆம் ஆண்டு அரவிந்தர் சேர்க்கப்பட்டார். அப்பள்ளியின் தலைமை ஆசிரியராய் இருந்த டாக்டர். வாக்கர்(walker) அரவிந்தரின் நற்குணத்தையும், திறமையையும், லத்தீன் மொழியில் அவருக்கு இருந்த ஆழ்ந்த அறிவையும் உணர்ந்து கிரேக்க மொழியை அவருக்குப் பயில்விக்க முன்வந்தார்.

கிறித்துவ மதத்தில் ஆழ்ந்த பற்றுடையவரான திருமதி. டிரெவிட் தினமும் பிரார்த்தனை நேரத்தில் பைபிளிலிருந்து சில பகுதிகளைப் படிக்க வேண்டும் என்ற வழக்கத்தை மேற்கொண்டிருந்தார்.சகோதரர்கள் மூவரும் அதில் கட்டாயமாகக் கலந்து கொள்ளவேண்டும். பினாய் பூஷனே அதைப் பெரும்பாலும் முன்னின்று நடத்தினார்.  ஒரு நாள்  மன்மோகன் சொன்ன ஒரு அபிப்ராயத்தால் திருமதி டிரெவிட்,  கோபமடைந்தார்.கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுடன் தன்னால்  வாழமுடியாது என வருந்தினார். அது அவர்களுடைய வாழ்வில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது.அதுவரையிலும் வாழ இடம் இருந்தது. உணவுக்குப் பஞ்சம் இருக்கவில்லை. பாதுகாப்பான கூட்டை விட்டுப்பறந்து செல்லும்  சிறகு முளைத்த பறவைகளைப் போல அவர்கள் ட்ரெவிட் அவர்களின் தாய் வீட்டை விட்டு வெளியேறினர்.



நல்ல வேளையாக அது விடுமுறைக்காலமானதால் மூவரும் 'Lake district' என அழைக்கப்பட்ட ஏரிகள் நிறைந்த ஊருக்குச் சென்றனர்.  அந்த ஊர் நம் நாட்டின் காஷ்மிரைப் போல இயற்கைக் காட்சிகள் நிறைந்த ஊர். 'டேஃபடில்ஸ்' என்ற பெயருடைய மலர்கள் பூத்துக்குலுங்கும், சிறு குன்றுகளும், சிற்றோடையும்,மரம்,செடி கொடிகளும் கண்களுக்கு விருந்தளிக்கும் ஊர். மேலும் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் 'வேர்ட்ஸ்வொர்த்' (Wordsworth) பிறந்த ஊர்.

அங்குள்ள புறநகர்ப் பகுதியில்  விளைநிலங்களுக்கு அருகாமையில்  வீடுகள் இருந்தன.குறைந்த வாடகையில் அங்கே பயணிகள் தங்க முடியும்.எனவே அவர்கள் மூவரும் அத்தகைய ஒரு வீட்டில் தங்கினார்கள். காலைச் சிற்றுண்டிக்குப்பின் மூவரும் வனப்பகுதிகளில் சுற்றி இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிப்பார்கள். இரண்டாவது சகோதரரான மன்மோகன் தன்னை மறந்து கவிதைகள் புனைவார். அரவிந்தரும் அதில் பங்கேற்பதுண்டு.

விடுமுறைக்காலம் முடிந்ததும் மூவரும் கிருஷ்ணதான் கோசின் நண்பரின் சகோதரரைச் சென்று சந்தித்தார்கள். அவர் பெயர் ஜேம்ஸ்காட்டன் என்பதாகும்.இவர்களுடைய இக்கட்டான சூழ்நிலையை அறிந்த அவர் கிருஷ்ணதான் கோசிடமிருந்து பண உதவி வரும்வரை அவருக்குச் சொந்தமான 'க்ளப்' எனப்படும் பொழுது போக்கு மனையில் வசிக்க இடம் அளித்தார். மூத்தவரான பினாய்பூஷனுக்கு தனக்கு வேலைகளில் உதவி  வாரம் ஐந்து ஷில்லிங் சம்பளமாகப் பணமும் கொடுக்க முன் வந்தார்.

ஒரு வயதுக்கு மேல் ஒவ்வொருவரும்  சுதந்திரமாக தனக்கு வேண்டிய பொருளைத் தானே தேடிக்கொள்ள வேண்டும். இடர்களையும், வறுமையையும், துன்பங்களையும் சந்தித்தால்தான் வாழ்க்கையை அறிந்து கொள்ளவும் முன்னேறவும் முடியும். அனுபவங்களே வாழ்க்கை என்பது ஐரோப்பியர்களுடைய வாழ்க்கைத் தத்துவமாகும். எனவே ஜேம்ஸ்காட்டன் 'பினாய் 'வேலை செய்து பணம் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறியதில் வியப்பில்லை.

'க்ளப் ஹவுஸ்'லண்டனின் மிக நாகரிகமான சவுத் கென்சிங்டன் என்ற பகுதியில் இருந்தது. மாலை நேரங்களில் பல பெரிய மனிதர்கள் வரும் சப்தம் மிகுந்த இடமாக இருந்தாலும் அங்குள்ள நூலகம் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.


சுமார் ஐந்தாண்டுகாலம் அரவிந்தரும் சகோதரர்களும் மிகுந்த வறுமையில் வாழவேண்டி வந்தது. அவர்களுடைய தந்தை கிருஷ்ணதான் கோஸ் பண உதவி எதுவும் அவர்களுக்கு செய்யாததால்  பள்ளியில் கிடைத்த (ஸ்காலர்ஷிப்) நிதிஉதவி
யில் எளிமையாக அவர்களுடைய வாழ்வு நகர்ந்தது.

இங்கிலாந்தின் கடுமையான குளிரில் போர்வைகளும்,குளிர் தாங்கும் கம்பளி ஆடைகளும் அவர்களிடம் இருக்கவில்லை!காலையில் வெறும் இரண்டு ரொட்டி சாண்ட்விச்சுகளும் ஒரு கோப்பைத் தேனீர் மட்டுமே உணவு! மதிய உணவும், இரவு உணவும் வாங்க பணம் இல்லையாதலால் மாலையில் குறைந்த விலையில் கிடைத்த  சூப், ரொட்டித்துண்டுகள் ஆகாரம்.

எல்லாத் துன்பங்களுக்கிடையிலும் அரவிந்தர் தொடர்ந்து பிரெஞ்ச் இலக்கியம், இத்தாலி, ஜெர்மன், ஸ்பானிஷ் சரித்திரங்களைக் கற்றார். சகோதரர்களுக்கு கவிதைகள் எழுதுவதிலும், படிப்பதிலும் பொழுது போயிற்று.

1890 ஆம் ஆண்டு  அரவிந்தர்  மிக உயர்ந்த, கடினமான ஐ சிஎஸ் தேர்வில் 11ஆம் இடத்தில் தேர்வுபெற்றார். இளம்வயதில் யாருடைய வழிகாட்டலும், உதவியும் இன்றி அவர் பெற்ற வெற்றியால் அவருக்கு சிறிது அதிகமான நிதிஉதவி கிடைத்தது. ஆனால் பட்டம் பெறத் தேவையான குதிரை ஏற்றத் தேர்வுக்கு நான்கு முறை அனுமதி கிடைத்தும் அவர் செல்லவில்லை.

 முதலில் குதிரை ஏற்றத் தேர்வுக்குத் தேவையான பயிற்சியை எடுத்துக் கொள்ளத் தேவையான பணம் அவரிடம் இருக்கவில்லை. ஆங்கிலேயர்களின் கீழ் ஒரு அலுவலராகப் பணியாற்ற அவர்  விரும்பவும் இல்லை. அதையே தனக்குக்  கிடைத்த அங்கீகாரமாக எண்ணி வாய்ப்புகளையெல்லாம் தவறவிட்டார்.

1879ஆம் ஆண்டு தொடங்கி  1893ஆம் ஆண்டு வரை 14 ஆண்டுகள் அரவிந்தரும், சகோதரர்களும் மிகுந்த துன்பங்களுக்கு இடையே கல்வி கற்றார்கள். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் இல்லாவிடினும் இலக்கியங்களே அவர்களுக்கு ஆறுதலாகவும், உற்ற துணையாகவும் இருந்தது.
அறிவிற்சிறந்தவராகவும், ஆங்கிலத்தில் மிகுந்த புலமை பெற்றவராகவும்,மிகக்கடினமான ஐசிஎஸ் தேர்வில் தன்னுடைய திறமையால் சிறப்பிடம் பெற்றவராகவும் விளங்கிய அரவிந்தருக்கும், இந்திய அரசியலுக்கும் என்ன தொடர்பு என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

(அரவிந்தர், வாழ்க்கை வரலாறு, இங்கிலாந்துக் கல்வி (1879 -1893 )


20 Mar 2017

ஶ்ரீஅரவிந்தரின் வாழ்க்கை வரலாறு -2


1872, ஆகஸ்ட் 15
அற்புதமான அந்த விடியலில் இந்திய நாட்டின் மானசரோவரில் பூத்தது அரவிந்த வெண்தாமரை. வங்கத்தில் பிறந்து, லண்டனில் கல்வி பயின்று, குஜராத் மாநிலம், பரோடாவில் பணியாற்றி,சுதந்திரப் போராட்ட வீரர்களை வங்கத்தில் உருவாக்கி, ஶ்ரீகிருஷ்ணவாசுதேவரின் பாதுகாப்பில் பாண்டிச்சேரியை அடைந்து அதனைத் தன் யோகசாதனைக் களமாக்கிக் கொண்டவர் ஶ்ரீஅரவிந்தர்.

கிருஷ்ணாதன் தன் மகனுக்கு அரவிந்தா அக்ராய்ட் கோஸ் என்ற பெயரைச் சூட்டினார். ஐரோப்பிய ஆங்கில மோகம் கொண்டு ஆங்கிலேய நாகரிகத்தைக் கற்றுக் கொடுக்க விரும்பினார். குழந்தைகள் ஆங்கிலம் கற்க ஒரு ஆங்கில செவிலியை நியமித்தார். வங்க மொழியை வீட்டில் பேசுவதற்கும் தடை விதித்தார்.இந்திய கலாசாரத்ததையும், வாழ்க்கை முறைகளையும் வெறுத்தார்.

1877 ஆம் ஆண்டு, அரவிந்தரின் ஐந்தாம் வயதில்  டார்ஜிலிங் என்ற  இடத்தில் ஐரிஷ்காரர்களால் நடத்தப்பட்ட 'லோரெட்டோ' கான்வெண்ட் பள்ளிக்கு சகோதரர்களோடு அனுப்பினார். 
டார்ஜிலிங், வங்கத்தில் உள்ள தேயிலை உற்பத்தி செய்யும் மலைப்பிரதேசமாகும். அங்கு ஆங்கிலக் கல்விபயில்விக்கும் கான்வெண்ட் பள்ளிகள் நிறைய உண்டு.

வெண்பனிப்படலம் போர்த்திய 'கஞ்சன் ஜங்கா' மலைத்தொடரின் அற்புத இயற் கைக்காட்சிகள் சகோதரர்களுடைய உள்ளத்தை அந்த இளம் வயதிலேயே கொள்ளை கொண்டன.
இரண்டு ஆண்டுகள்! 
தாய் தந்தையரின் அன்பும் கவனிப்பும் இல்லாத ஹாஸ்டல் வாழ்க்கை.

1879 ஆம் ஆண்டு கிருஷ்ணதான் தன் மூன்று மகன்களுடனும், மகள் சரோஜினியுடனும் இங்கிலாந்து சென்றார். அங்கு ஆங்கில கனவான், வில்லியம் டிரெவிட் என்பவரின் குடும்பத்தாரிடம் தன் மூன்று மகன்களையும் ஒப்படைத்தார்.
ரங்கபூரின் மாஜிஸ்ட்ரேட் 'டிரெவிடின்' உறவினர்தான் இந்த ஆங்கிலேயர்.இந்திய கலாசாரத்தின் தாக்குதல் தன் மகன்களுக்கு எந்தவிதத்திலு ஏற்படக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். 

ஆங்கில கலாசாரம் மட்டுமே அவர்களை கனவான்களாக்கக்கூடும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. இங்கிலாந்தில் அவர் இருந்தபோது அவர் மனைவி தன் ஐந்தாவது குழந்தையான பாரிந்த்ர குமாரை பெற்றெடுத்தார்.

மான்செஸ்டரின் இலக்கணப்பள்ளியில் பினாய் கோஸும், மன்மோகனும் சேர்க்கப்பட்டார்கள். உயர் கல்வி பயின்றவரும் அறிவிற்சிறந்தவருமான திரு. ட்ரெவிட்  அரவிந்தரின் முதல் ஆசிரியரானார். வீட்டிலேயே லத்தீன், ஆங்கில மொழிகளைக் கற்பித்தார். இவரது மனைவி பிரெஞ்ச், பூகோளம், கணக்குப் பாடங்களைப் பயில்வித்தார். ஆங்கிலக் கவிஞர்களான கீட்ஸ், ஷெல்லி,  இவர்களின் ஆங்கிலக் கவிதைகளையும் எழுத்துகளையும்,ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும், கிறித்துவ வேதமான பைபிளையும் அந்த இளம் வயதிலேயே பயில அரவிந்தருக்கு நிறைய நேரம் கிடைத்தது.

(ஶ்ரீஅரவிந்தர், பெற்றோர், இங்கிலாந்தில் கல்வி)

14 Mar 2017

ஶ்ரீஅரவிந்தரின் வாழ்க்கை வரலாறு --1



இந்தியாவின் வடகிழக்கே  வங்கமா நிலத்திலுள்ள  ஹூக்ளி மாவட்டத்தில் பாய்கிறது பாகீரதி நதி. அந்நதியின் மேற்குக் கரையில் ஜனத் தொகை மிகுதியான கொன்னகர் எனப்படும் ஊர்- கல்கத்தாவின் வடக்கே 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. வங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள  பெருமை வாய்ந்த ஊர் அது.

இந்த கொன்னகரில் 'ஆப்கானிஸ்தான் எல்லையிலுள்ள பஞ்சாப் என்னும் ஊரிலிருந்து வந்து குடியேறிய 'கோஸ்' என்ற குடும்பப் பெயருள்ள பலகுடும்பங்கள் வாழ்ந்து வந்தன.  கோஸ் என்ற பெயருக்கு 'புகழ் பெற்ற' என்று பொருள். 

கொன்னகரில் வாழ்ந்துவந்த காளிப்பிரசாத் கோஸுக்கும், கைலாஸபாஸினி தேவிக்கும் 1845 ல் மகனாகப் பிறந்தவர் கிருஷ்ணதான் கோஸ். பரம்பரைப் பணக்காரர்களான இவர்கள் கிருஷ்ணதான் தாஸ் பிறந்த வேளையில்  மிகவும் ஏழ்மையான நிலையிலேயே இருந்தனர். எனவே உதார குணமுடையவர்களின் உதவியினால் இவர் பள்ளி,கல்லூரி படிப்பை முடித்தார்.

1858 -ல் கல்கத்தா பல்கலைக் கழக நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார். நான்காம் ஆண்டு படிக்கும் போது  ரிஷி இராஜநாராயணபோஸின் முதல் மகளான பன்னிரண்டு வயது ஸ்வர்ணலதா தேவியை பிரம்மசமாஜ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

1869 ஆம் ஆண்டு மேற்படிப்புக்காக லண்டன் சென்றார் கிருஷ்ணதான்கோஸ். ஆங்கிலேயர்களுடைய நடை, உடை, பாவனைகளில் மோகம் உடையவராகவும்,கடவுள்நம்பிக்கை இல்லாதவராகவும் இருந்தார். மிகச்சிறப்பாக மருத்துவத்தில் தேர்வு பெற்று 1871 ல் இந்தியா திரும்பினார்.   அந்தக்காலத்தில் கடல் கடந்து சென்றவர்கள் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று ஒரு வழக்கம் இருந்தது. அதை செய்ய மறுத்த கிருஷ்ணதான் கோஸ், கொன்னகரில் தனக்குச் சொந்தமான பரம்பரைச் சொத்தான வீட்டை குறைந்த விலைக்கு விற்றுவிட்டு அரசாங்க மருத்துவராக பல மாநிலங்களிலும் பணியாற்றினார்.

வங்காளத்தின் பாகல்பூர், ரங்பூர், குல்னா போன்ற ஊர்களில் அவர் பிரபலமானவராக விளங்கினார். அறிவிற்சிறந்தவர், தாராளமனப்பான்மையும், மென்மையான இதயமும் உடையவர், தன்னுடைய நலனைவிட மற்றவர்களின் துன்பத்தைப் போக்குவதில் நாட்டமுடையவர் என்றெல்லாம் போற்றப்பட்டவர் கிருஷ்ணாதான் கோஸ்

ரங்கப்பூரின் ரோஜா, எனப்புகழப்பட்டவர் இவர் மனைவியார் ஸ்வர்ணலதா தேவி. இவர்களுக்கு ஐந்து குழந்தைகள். மூத்தவர் பினாய் பூஷன், அடுத்தது மன்மோகன். மூன்றாவது மகனாக 1872 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள், விடியற்காலை 5 மணியளவில்  பிறந்தவர் மகாயோகியாகவும், இந்தியாவின் இளைஞர்களுக்கு சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியவராகவும் விளங்கிய ஶ்ரீஅரவிந்தர்.

குறிப்பு;
(பிரம்ம சமாஜம் - 1774 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் பிறந்தவர் தலை சிறந்த சீர்திருத்தவாதியான இராசாராம் மோகன் ராய். தன்னுடைய புரட்சிகரமான கருத்துகளைப் பரப்புவதற்காக ஆன்மிகசபை என்ற அமைப்பினை ஏற்படுத்தி, பின்னர் பிரம்மசமாஜம் என்று அதன் பெயரை மாற்றினார்.
 1.உருவ வழிபாட்டை எதிர்த்தார்.
 2. மூட நம்பிக்கைகளை அழித்தொழிக்கப் பாடுபட்டார்.
3.ஆணுக்குப் பெண் சமம் என்ற நீதியைப் பரப்பினார். பெண்கள் உடன்கட்டை ஏறுவதைத் தடுத்தார்.
பெண்கள் கல்வி கற்க வேண்டும் என வலியுறுத்தினார் )

 (ஶ்ரீஅரவிந்தர், வங்கம், பெற்றோர், பிறப்பு, பிரம்மசமாஜம்)                          -இன்னும் வரும்









3 Jan 2017

காது காது என்றால் ..........!

அந்த ஊரின் மிகப்பெரிய மளிகைக்கடை அது. அங்கு கிடைக்காத
பொருளே இல்லை எனலாம். ஒரு மாலைப் பொழுதில் வியாபாரம் கனஜோராக நடந்துகொண்டிருந்தது. அந்த நேரத்தில் விஜயா அந்தக் கடையில் நுழைந்தார்.
ஊருக்குப் புதிதாக வேலை நிமித்தம் வந்தவர் அவர்.

சாமான்கள்  பட்டியலைக் கொடுத்துவிட்டுக் கடை ஊழியரிடம் பேசிக்கொண்டிருந்தார். பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டே பதிலளித்த
ஊழியர் அவரிடம், 'இரண்டு வாரத்துக்கு முன்னால வந்ததுங்க. அப்புறமா காணும். இனிமே அடுத்த வருடம் வந்தாதான் உண்டு' என்றான்.

கடை முதலாளியின் காதில் பணியாள் சொன்னது விழுந்தது. அடடா,இந்தப் பையனுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா! ஒரு சாமான் கேட்டால், இல்லையென்று சொன்னால் இந்தக்கடையைப் பற்றி என்ன நினைப்பார்கள்? அடுத்த கடைக்குப் போய்விடுவார்கள். நம் வியாபாரம் அல்லவா படுத்துவிடும் என்று பதறினார். உடனே
எழுந்து விறுவிறுவென்று விஜயாவிடம் போய்,' அம்மா,நீங்க கேட்ட பொருள் வேகமாக விற்பனையாகிற ஒன்று.அதனால் விற்றுத் தீர்ந்துவிட்டது. இன்னும் இரண்டு மூன்று நாளில் வந்துவிடும்.நீங்கள் உங்கள் செல் பேசி எண்ணை கொடுத்துவிட்டுப் போங்கள். வந்ததும் சொல்கிறேன் என்றார்.

விஜயாவுக்கு சிரிப்பு தாங்கவில்லை. ஆனாலும் சாமான்களை வாங்கிக் கொண்டு முதலாளியை முறைத்துப் பார்த்துவிட்டுப் போனார்.

கடை முதலாளி ஊழியரிடம்,' நீ பேசினது போலப் பேசினால் இந்தக்கடையை இழுத்து மூடிவிட்டுப் போய்விட வேண்டியதுதான். யார் என்ன பொருள் கேட்டலும் இல்லையென்று சொல்லக்கூடாது..நான் பார் எப்படிப் பேசினேன். அதேமாதிரி  சாமர்த்யமாகப் பேசணும்,தெரிந்ததா?
அந்த அம்மா என்ன கேட்டாங்க, எந்த சாமான்  அடுத்தவருடம்தான் வரும் என்றாய்?,' என்றார்.
ஊழியர் சொன்னார்,' ஐயா அவங்க இந்த ஊருக்கு புதுசு போல! மழையெல்லாம் நல்லா பெய்யுதான்னு கேட்டாங்க! நான் அடுத்தவருடம்தான் இனிமே,என்று சொன்னேன். அவ்வளவுதான்,' என்றார்.😂

இது மாதிரிதான்  சிலபல சமயங்களில் நாம் சொல்வது பிறருக்குப் புரிவதில்லை. நமக்கும்தான், பிறர் சொல்வதன் பொருள் புரிவதில்லை. 😇

7 Dec 2016

தேங்காயும்,சோசியமும்!

வயதில் பெரியவர்களையும், குழந்தைகளையும் பார்க்கப் போகும் போது வெறும் கையோடு போகக்கூடாது என்பது நம்முடைய பண்பாடு. அதேபோல வந்தவர்களை நன்கு உபசரித்து விடை பெறும்போது ஒரு பழமாவது கொடுப்பதும்தான். ஆ அதுதான், என் பேரப்பையனைப் பார்க்க ஏதாவது வாங்கிச் செல்ல வேண்டி காந்திபஜார் சென்று  திரும்பிவர ஆட்டோவில் ஏறினேன்.

ஆட்டோ ஓட்டுனர்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒரு விதம்! சிலர் சகஜமாகப் பேசுவார்கள். சிலர்பேச மாட்டார்கள். நேற்று நான் ஏறிய ஆட்டோக்காரர் கொஞ்சமாகப் பேசுபவர். போகவேண்டிய இடம் சொன்னதும் ஓ, எனக்குத் தெரியுமே என்றார். அப்பாடா வழி சொல்ல வேண்டாம் என்று நினைத்தவுடனே எதிர்பாராத தலைப்பில் பேச ஆரம்பித்தார்.

ஓ அந்தக்கோயில் பக்கத்திலா வீடு, நீங்க அப்படின்னா தினம் போவீங்களா என்றார்.
ஒரு அடையாளத்துக்குதான் சொன்னேன், நான் அந்த இடத்துக்குப் பக்கத்தில் இருக்கிறேனே தவிர தினம் தினம் எல்லாம் போகமாட்டேன் ஐயா என்றேன்.
உங்களுக்கு இந்த தேங்காய்  கட்டினால் காரியம் வெற்றி பெறும் என்பதில் நம்பிக்கை இருக்கிறதா?  சிலர் ரொம்பப் பெருமையா பேசறாங்க என்றார்.

எனக்கு அந்த நம்பிக்கையெல்லாம் கிடையாது. நடக்கப்போவதை,காணாமல் போனதை கண்டுபிடித்துக் கொடுப்பதை, மற்றும் இன்னபிற மனிதனுடைய வேண்டுகோளுக்கெல்லாம் வழி சொல்லுகிற சக்தி, தேங்காயைக் கட்டினால்தான் வரும் என்றால் பொய்! நடப்பது எதுவென்றாலும் அதை ஏற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனதையும், தாங்குகிற சக்தியையும் கொடு என்றுதான் நான் கடவுளிடம் வேண்டுவேன் என்றேன்.

நீங்க சொல்வதுதான் சரி. அப்படிதான் இருக்கவேண்டும்.
ஏன் கேட்டேன் என்றால் நான்கூட ஒருமுறை தேங்காய் கட்டினேன். ஒன்றும் நடக்கவில்லை.உங்களுக்கு நல்லது நடந்துதா என்று தெரிந்து கொள்ள்வே விரும்பினேன் என்றார்.

வீடு வந்துவிட்டது.இறங்கினேன். ஆனால் பாருங்கள் இப்போதெல்லாம் ஆசிரமத்து மூன்று தெருக்களிலும் சோழி ஜோசியம் பார்க்கிறவர்கள் இரண்டு மூன்று பேர் இங்கே செவ்வாய், சனிக்கிழமைகளில் ஆஜர்! நல்ல ஆஜானுபாகுவாக இருக்கிறார்கள். நெற்றியில், விபூதி,சந்தனப் பொட்டு,பாய் விரித்து உட்கார்ந்துகொண்டு சோழிகளைப் பரப்பி வைத்து, பக்கத்திலேயே ஒரு சில சிறு அட்டைகள்! ஏதாவது எழுதியிருக்கும் என்று நினைக்கிறேன்!
அவர்கள் முன்னால் கையை நீட்டிக்கொண்டு இள வட்டங்கள் ஜோடியாக  அமர்ந்து சோதிடம் கேட்கிறார்கள்! கடவுளைவிட சோசியக்காரனிடம் அதிக நம்பிக்கை உள்ளவர்கள் போலும்!

என்றைக்காவது ஒருநாள் நானும் சோதிடம் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்!

வேடிக்கையான உலகம்! வினோதமான சிந்தனைகள்!

30 Nov 2016

புதிய பார்வை



அமைதி தவழும் உச்சி வெயில் பொழுது. வேப்பம் பூக்கள் நறுமணம் பரப்பும் பங்குனி மாதத்து, மென்குளிர் காற்றில் ஆங்காங்கே காகங்கள் கரைய, அணில்கள் ஓடிவிளையாட சிறிய ஊஞ்சலில்  அந்த இல்லத்து விளையாட்டு மைதானத்தில் வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்கள் சங்கரியும் சாந்தாவும். மதிய உணவுக்குப் பின் அங்கே அமர்ந்து பேசுவது அவர்களுக்கு வாடிக்கைதான்.

அந்த நேரத்தில் இல்லத்தின் வேலையாள் சுரேஷ் அங்கேவந்து, அம்மா உங்க இரண்டு பேரையும்  ஐயா ஆபீஸ் ரூமுக்கு வரச்சொன்னாங்க, என்றான்.
என்ன சுரேஷ், என்ன சமாச்சாரம்? ஐயா எப்பவும் கூப்பிட்டு அனுப்பமாட்டாரே என்றார் சங்கரி
அது என்னவோ தெரியலைங்க. இந்த இல்லத்தப் பார்க்க யாரோ வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன் என்றான் சுரேஷ்.

அலுவலக அறையின் வாசலிலே நின்றிருந்தார் அந்த இல்லத்தின் உரிமையாளர் மாதவன். வாங்கம்மா, என்றவர் அவர்களை சுரபிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.  இவங்க பிரபலமான தமிழ் மாத இதழ் , "செங்கமலம்" பத்திரிகையின் உதவி ஆசிரியர். சுற்றுவட்டாரத்தில் உள்ள முதியோர் இல்லங்களைச்சுற்றிப் பார்த்து ஒவ்வொரு இல்லத்தின் சிறப்பம்சங்களைப்பற்றியும், சுகாதாரம், உணவின் தரம், மருத்துவ வசதிகள் ஆகியவற்றைத் தரவரிசைப்படி மதிப்பீடு செய்து தங்கள் பத்திரிகையில் வெளியிடப் போகிறார்களாம்.

நான்கு பேரை பேட்டி எடுக்க வேண்டுமென்றார்கள். அதற்குதான் உங்களைக் கூப்பிட்டேன். மங்களம்மாவையும், சேதுப்பாட்டியையும் வரச் சொல்லியிருக் கிறேன். புகைப்படம் வேண்டாமென்றால் சொல்லிவிடுங்கள். உங்கள் மனதில் இருப்பதை நீங்கள் தாராளமாகச் சொல்லலாம். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது என்று சொல்லி எழுந்து போனார் மாதவன்.

மாதவன் தாயை நேசித்தவர். வேலை நிமித்தம் வெளிநாட்டில் வாழ்ந்த பொழுது, அவருடைய மனைவியின் அலட்சியம், கவனிப்பின்மை காரணமாகத் தாயை இழந்தவர். அதனாலேயே ஆதரவற்ற முதியோர்களைப் பார்த்துக் கொள்ளும் கடமை தனக்கு இருக்கிறது என்று தன் மனைவியை விவாகரத்து செய்து தனியொருவராக, நிலம் வாங்கி சகல வசதிகளுடன் கூடிய அந்த முதியோர் இல்லத்தைத் தன் தாயின் பெயரால் நடத்தி வருகிறார். தன் தாய் கடைசி காலத்தில் யாருமில்லாதவராக இறந்ததைப் போல குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் தவிக்கக்கூடாது. அவர்களுக்கு உறு துணையாக இருக்கவேண்டும் என்பதே அவர் லட்சியமாக இருந்தது.

வணக்கம் அம்மா! சார் சொன்னது போல நான் செங்கமலம் பத்திரிகையிலிருந்து  வந்திருக்கிறேன். இந்தக் காலத்தில் நிறைய முதியோர் இல்லங்கள் பற்றிய விளம்பரங்களைப் பார்க்கிறோம். இந்த இல்லத்தைப் பற்றி நிறைய கேள்விப்பட்டதால் நேரில் வந்தோம். சொல்லுங்கள், இந்த இல்லத்தில் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? ஏன் இங்கு வந்தீர்கள். உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா? உங்களுடைய அனுபவங்களை எங்கள் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சங்கரி சொன்னார். வணக்கம் சுரபி அவர்களே. இந்த இல்லத்தில் அயல் நாடுகளில் வசிக்கும் பிள்ளைகளுடைய பெற்றோர், உள்நாட்டிலேயே இருந்து கொண்டு பராமரிக்க முடியாத குழந்தைகளின் தாய், தந்தையர், தாங்களாகவே விரும்பி வந்தவர்கள், குழந்தையில்லாதவர்கள், என்று பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் சொல்ல ஒரு கதை இருக்கி றது.

ஆமாம் அம்மா! கூட்டுக்குடும்பமாக வாழ்ந்துவந்த சமுதாய அமைப்பு நீங்கி இன்று பெரும்பாலும் தனித்தீவுகளாகவே இளைய தலைமுறை வாழவிரும்புகிறது இல்லையா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள் சாந்தாம்மா?

மேடம், இன்றைக்கு பெரும்பாலும் பிள்ளைங்க அப்பா,அம்மாவை முதியோர் இல்லத்தில் தள்ளிவிடுகிறார்கள், என்ற தவறான அபிப்ராயம் இருக்கிறது. என்னைப் பாருங்கள். நான் ஆசைப்பட்டுதான் இங்கே வந்தேன். எங்கள் வீட்டில் அனுப்பவே விரும்பவில்லை. குடும்ப வாழ்க்கைப் பொதியை எல்லாம் சுமந்துட்டேன். எல்லாக் கடமைகளையும் முடித்தும் விட்டேன்.
எனக்காக நான் வாழ விரும்புகிறேன். அதற்கு ஏற்ற இடம் இதுதான் என்று நான் எண்ணினேன்.

அப்படியா, ஆச்சர்யமாயிருக்கிறது! உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?
எனக்கு ஒரு மகனும்,மகளும் இருக்கிறார்கள். இருவருக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள்.

அப்படியா! பேரன் பேத்திகளோடு ஜாலியாக விளையாடி, மகிழ்ச்சியாக இருப்பதற்கு பதில் இங்கே ஏன் வந்தீர்கள்?
 நான் மகிழ்ச்சியாக இல்லை என்று யார் சொன்னது? எல்லாதாய்மார்களும் பையனுக்குத் திருமணம் ஆனாலும் தான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தானே சமைப்பது, எல்லாவற்றிலும் தலையிடுவது, மருமகளுக்கு அறிவுரைகள் சொல்வது, பேரக் குழந்தைகளை வளர்ப்பதில் ஆளுமை செய்வது என செயல்படுகிறார்கள்.

திருமணம் என்று ஆனால் அவர்களுடைய வாழ்க்கையை அவர்கள் வாழ நாம் அனுமதிக்க வேண்டும்.  குடும்பம், சாப்பாடு, தூக்கம் இவை எல்லாவற்றுக்கும் மேலே ஒரு வாழ்க்கை இருக்கிறது

நீங்கள் என்னை ஆச்ச ர்யப்படுத்துகிறீர்கள்.

 கடவுளைக் காண வேண்டும், அதற்கான முயற்ச்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டு. தியானம் செய்து தவ வாழ்க்கை மேற்கொள்ளவும், பெரிய மகான்களுடைய வாழ்க்கை வரலாறுகள், அறிவுரைகள் ஆகியவற்றைப் படித்து உணரவும் ஆசைப்பட்டேன். அதற்கான சகல வசதிகளும் இங்கே உள்ளன.

நல்லா இருக்கே நீங்க சொல்வது! எல்லோரும் இந்தக்காலத்தில் எல்லோரும் காசி, கைலாச, மானசரோவர் யாத்திரைகள் போகிறார்கள். வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்கிறார்கள். நீங்க என்னவோ முதியோர் இல்லத்தில் கடவுளைப் பார்க்கணும் என்று சொல்கிறீர்களே.

ஆமாம், கடவுளை வெளியே தேடுபவர்கள் யாத்திரை போகிறார்கள். "உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்" என்ற தெளிவு இருப்பதால் என்னுள்ளே
இருக்கும் ஆண்டவனைத் தேடி எனக்குள் நானே யாத்திரை செய்கிறேன்!



ஓ, இங்கே எங்களுக்கு வேளைக்கு உணவு, படிக்க நூலகம், விளையாட உடற்பயிற்சி செய்ய வசதிகள், அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவ மனை எல்லாம் உள்ளது. ஓய்வு நேரத்தில் சத்சங்கம் நடத்துகிறோம், ஞானிகளுடைய அறிவுரைகளையும், வாழ்க்கை வரலாறுகளையும் வாசிக்கிறோம்.உடல் நலமில்லாதவர்களுக்கு அனுசரணையாக, ஒருவர்க்கு ஒருவர் உதவியாக ஒரு குடும்பமாக இருக்கிறோம்.

சுரபி, சாந்தா அவர்கள்தான் இங்கே வருகிறவர்களுக்கெல்லாம் கவுன்சிலிங் கொடுப்பார்கள். வந்தவுடன் அழுகையும், துக்கமுமாய் வருபவர்கள் பிறகு வீட்டிற்கு போகவே விரும்புவதில்லை தெரியுமா? எல்லாவற்றுக்கும் மேலாக மாதவன் எங்கள் எல்லோருக்கும் பிள்ளையாக இருக்கிறார்.

கேட்கவே நன்றாக இருக்கிறது. கடைசியாக ஒரே ஒரு கேள்வி. நீங்கள் கடவுளைக் கண்டுபிடித்து விட்டீர்களா?

ஆம் சுரபி! சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட தன்னலமற்ற அன்புதான் கடவுள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உள்ளத்திலிருந்து பொங்கிப் பெருகும் உணர்வுதான் கடவுள். அதில் அமைதியும் ஆனந்தமும் இருக்கிறது மகளே.

புதியதோர் பார்வையில் முதியவர்களின் முதிர்ச்சி நிறைந்த எண்ணங்களை அறிந்து கொண்டேன்.
அந்த ஆனந்தத்தை, அமைதியை நான் என்னுடன் அடுத்துச் செல்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் சாந்தா, சங்கரி அவர்களே! நன்றி வணக்கம்.