21 Apr 2015

அட்சயதிரிதியை

இன்றைக்கு அட்சய த்ரிதியை, என்ன நகைக்கடைக்குப் போகலியா, என்றாள் தோழி.
அட்சயம் என்றால் எடுக்க எடுக்க குறையாதது என்று அர்த்தம்.வங்கியிலிருந்து எடுக்க எடுக்க எப்படி பேங்க் பேலன்ஸ் குறையாம இருக்கும்? என்றேன். 

அதுதான் நகையா வளரும் என்கிறாள்! நகை தானாக வளருமா என்றேன். 

நகைக்கின்றாள்!

தங்கக் கனிமத்தை வெட்டி எடுத்து, உருக்கி, பிரித்து அதை ஒரு வடிவில் கொண்டு வந்து சூட்சுமமாக நகாசு வேலை செய்வதால்  அது நகை.அந்த நகைக்கு சொந்தக்காரியாக ஆகும் போது மென்மையாகப் புன்னகை வருவது இயல்புதானே!

ஆமாம். ஆனால் இந்த நகை படுத்தும் பாடு, பெரும்பாடு!
 'நகையோ', நகையோ இரண்டும் பயங்கரமானவை என்றேன்.

ஆம், பெண்கள் இடம், காலம், நேரம் பார்த்துதான் நகைக்கவேண்டும். இல்லாவிடில்,'என்ன கர்வம், சிரிக்கிறாயா 'என்று அழவைத்து விடுவார்கள். 
திரெளபதி நகைத்தாள், பாரத யுத்தம் வந்தது!

தங்க நகையை வீட்டில் வைத்தால் திருடிவிடுவார்கள் என்று தினந்தோறும் பயப்பட வேண்டுமே! வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்துக்கு பணம் கட்ட வேண்டும். அதிர்ஷ்டம் செய்தவை நகைகளால் அணிபெறும் இரும்புப் பெட்டிகள்!

நகை வாங்குகிறோமோ இல்லையோ பிறர் நகைப்புக்கு ஆளாகக்கூடாதம்மா என்றேன். ஆமாம் சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்று ஒரு பாடல் கூட இருக்கிறதே என்றாள்.

அடடா, அப்பா நகை வாங்கிக் கொடுக்கும் போது, சந்தோஷம்!
கணவன் வாங்கிக் கொடுக்கும் போது பெருமை!
தன்னுடைய உழைப்பால் பெற்ற பணத்தால் வாங்கும் போது பெருமிதம்!

பட்டுப் புடவையோடு நகைகளை பொருத்தமாக அணிந்து கொண்டு,மலர் சூடி,புன்னகையோடு நிற்கும் மகளிரைப் பார்த்து மகிழாதவர் உண்டோ? 

25 Mar 2015

கூப்பிடுங்கள் "ஓ ல லா, ஃபாஸ்ட் , டாக்சி டாக்சி.......


சென்னைக்குப் போவதென்றாலே குஷிதான். முக்கால் மணிநேரத்தில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வான்வெளிப் பயணம்! ஆகாயப் பஞ்சுப் பொதிகளைக் கொஞ்சுவதற்குள் பொட்டி பொட்டியாய் கட்டடங்கள் காட்சியளிக்கும்.  அந்த முக்கால் மணிதான் ஜாலி....! 

விமானநிலையத்தில் இறங்கியதும் கதிரவனின் தழுவலில் நனைந்து, வேர்வையில் குளிக்க ஆரம்பித்துவிடுவோம். சொந்தக்காரர்கள் காரில் போனால் பரவாயில்லை. இல்லையென்றால்.............லொங்கு லொங்கென்று பேருந்து நிற்குமிடம் நடந்து, நொந்து நூலாகி பஸ் பிடித்து வீடு போய் சேர்வதற்குள் இனிமேல் கடவுள் சாட்சியாக எந்த ஊருக்கும் போவதில்லை என்று பிரசவ வைராக்யம் வந்துவிடும்! ( வந்திருக்கிறது)

இந்த முறை சென்னையில் ஒரு திருமணம்! கிழக்குக் கடற்கரைச் சாலையில்...!பல ஆண்டுகளுக்குப் பின் உறவினர்களை சந்திக்க வேண்டும், தம்பி, தங்கையோடு சில நாட்கள் பேசி மகிழவேண்டும் என்ற ஆவல் காரணமாக ''லேண்டட்"

சென்னையில் மட்டுமல்ல பெங்களூரில் கூட 'கால் டாக்சி' கலாசாரம் அதிகமாகிவிட்டது. எல்லோருக்கும் எல்லா டாக்சிகளையும் அழைப்புவிடுக்கும் நம்பர்கள் தெரிந்திருக்கிறது! போனால் வந்தால் கூப்பிடு டாக்சியைதான்.
நான் மட்டும் அதற்கு விதிவிலக்கா? ஓ.எம்.ஆர் சாலையில் பயணிக்க வேண்டுமென்றால் என்னத்தை செய்வது? டாக்சி டாக்சி......

பூந்தமல்லி சாலையிலிருந்து, சிறுசேரி செல்ல வேண்டியிருந்தது. வேகத் தேடுதலில் (ஃபாஸ்ட் டிராக்) இண்டிகா காரை அனுப்பச்சொன்னால்  பிரம்மாண்டமான பெரிய வேன் வந்து நிற்கிறது! பயணிப்பது நான் மட்டும். கேன்சல் செய்ய முடியாது. எனவே சரிதான் என்று ஏறிவிட்டேன். எப்படிப் போக வேண்டும் என்று தெரியாதாம்! நீங்க சொல்ற வழியில போறேன், கரக்டா சொல்லுங்க, நான் ஊட்டிக்குப் போனப்போ வாடிக்கையாளர் செல் வழிகாட்டியால் சரியான இடத்துக்கு வழிசொல்லிட்டாரு, என்று நமக்கு வழி தெரியுமா என்ற கொஞ்சம் நோண்டல்!  (மகன் வழி சொல்லிவிட்டார்)

டிரைவர் சரியான "ஜொள்ளுப் பார்ட்டி.'' மவுண்ட் ரோடு போவதற்குள் பத்து தடவை திரும்பித் திரும்பி பின்னால் பார்க்கிறார். கண்களை நேருக்கு நேர் பார்த்து பேச முயல்கிறார். லட்சக் கணக்கில் வண்டி வாங்கி லாபம் இல்லையாம்! இன்னும் என்னவோ........ 

ஜி. பி. எஸ் சிஸ்டம் என்ற 'சாலை வழிகாட்டி'யை என் அலை பேசியில் உயிர்ப்பித்தேன்! அடக் கடவுளே! சார்ஜ் ரொம்ப கம்மியாகி இருந்தது. என் மகளுக்கு ஒரு குறுஞ் செய்தி..... அவளோடு கன்னடத்தில் பேச ஆரம்பித்தேன். ஓ, ஒரு வழியாக சாலையைப் பார்த்து வண்டியை ஓட்டி, என்னை சிறு சேரியில் இறக்கிவிட்டார் கேரளத்து மேனன்.

அதற்குப் பின் எட்டு நாளில் ஓ ஒலா, அழுக்குக் கார், தூங்குமூஞ்சி டிரைவர், அது என்ன, சுங்கச் சாவடி காசை நீங்கதான் கொடுக்க வேண்டும், போக வர 44 ரூபாய் இந்த அம்மாவுக்கு கொஞ்சம் சொல்லுங்க என்று வம்புக்கார டிரைவர்கள்!

ஒருகாலத்தில் நடக்க முடிகிறதூரம், அதாவது ஒரு கிலோ மீட்டர் என்றால் நடந்தே போய் விடுவோம். அத்ற்கும் மேலே எனில் பேருந்துக்காக எவ்வளவு நேரமானாலும் காத்திருந்து பயணிப்போம். ஆட்டோ ஊருக்குப் போகும் போது மட்டுமே! எங்க சேலத்தில் குதிரை வண்டி ரொம்ப பிரசித்தம்! வண்டிக்குள்ளே பரப்பியிருக்கும் புல்லின் வாசனை நாசியை நிரப்பும். ஆளைப் பார்த்து வண்டிக்குள்ளே உட்கார வைக்கும் வண்டிக்காரன் காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார விடமாட்டான். அவனைப் பார்த்தால் தெனாலிராமனும் குதிரையும் கதை ஞாபகம் வரும்.

இருந்த எட்டு நாளில் ஏழு நாட்கள் 'ஓலாவிலும், ஃபாஸ்ட் டிராக்கிலும்' சென்னையின் சாலைகளில்.  டாக்சிக்காக 5000 ரூபாய்  செலவாயிற்று!.......பரவாயில்லை...! 

எப்படியிருந்தாலும் பிறந்த வீட்டின் பாசமும், நேசமும் மறக்கப் போமோ! சென்னையின் கடற்கரைக் காற்றும், வெயிலும்,  மறக்கமுடியுமா என்ன? 

சென்னை சென்னைதான்! 


8 Mar 2015

ஒளிப் பெண்

மத்ர தேச அரசன் அஸ்வபதி. அவரின் மனைவி மாலவி. ஒரு பேரரசனுக்கு உரிய அத்தனை நற்குணங்களும் உடைய அஸ்வபதி ராஜனுக்கு மகப் பேறில்லை. எனவே அவன் குழந்தைப் பேறு வேண்டி தியானம் செய்தான். அவன் வேண்டுகோளுக்கு இரங்கி இறையருளால் பிறந்த தெய்வக் குழந்தையே சாவித்ரி. 

அவள் பிறந்த அந்த நாளில், எங்கும் மென்மையான இசை ஒலித்தது. வெண்மையான  மல்லிகையின் நறுமணம் வீசிற்று. மாமரங்களின் மலர்மணம் நாசியை நிரப்பிற்று. தேனுண்ணும் வண்டுகள் ரீங்கரித்து ரகசியமாய் மலர்களுக்கு சேதி சொல்லியது. சூரிய ஒளி இறைவனின் புன்னகையைச் சுமந்து வந்தது. இயற்கை ஆராதனை செய்ய அழகுக் கோலம் பூண்டது .

இறைவனையும் மனித மனதையும் இணைக்கும் பாலமாய் தெய்வத்தன்மை வாய்ந்த அழகுக் குழந்தையாய்த் தோன்றினாள் சாவித்ரி. அவள் பிரபஞ்ச ஒளிச் சக்தியின் மகள். பேரழகும், அறிவும், கலைகளில் ஆர்வமும், தேர்ச்சியும் நிறைந்து சகலகலாவல்லியாய், அரண்மனையின் ஒளிவிளக்காய், மரியாதைக்குரியவளாய் தன் தெய்வத்தன்மை வெளியே புலப்படாவண்ணம் வளர்ந்த சாவித்திரிக்கு உரிய பருவம் வந்தும் ஏற்ற கணவன் கிடைக்கவில்லை. அதனால் தந்தையான அசுவபதி அவளை பயணம் மேற்கொண்டு அவளுக்கு ஏற்ற மணாளனைத் தேடிக்கண்டு வருமாறு கூறுகிறார்.

ரதத்தில் ஏறிய இளவரசி நெடிய பரந்த சாலைகளையும்,, நகரங்களையம், சிறு கிராமங்களையும், சமவெளிகளையும், நதிகளையும், காடுகளையும் கடந்து செல்கிறாள். வானத்து விண்மீன்கள் அவளுடைய நண்பர்களாகின்றனர். இரண்டு ஆண்டு பயணத்தின் பின் அழகியதோர் காட்டின் விளிம்பில் பகைவர்களால் காட்டிற்குத் துரத்தப்பட்ட சால்வ தேச அரசன் த்யுமத்சேனனின் மகன்  சத்யவானைக் காண்கிறாள். அவனே தன் 'ஆன்மாவின்சினேகிதன்' துணை என்பதை அறிகிறாள். மயில்கள் ஆட, குயில்கள் கீதமிசைக்க, காட்டுமரங்கள் தலையசைத்து ஆசிவழங்க தென்றல் மந்திரம் மொழிய காட்டுப் பூக்களால் ஆன மாலையை சத்யவானுக்கு அணிவிக்க அவர்களுடைய திருமணம் வானமும் பூமியும் சாட்சியாக நடக்கிறது. மனங்கள் ஒன்று படுவதே மணம் அல்லவா?

தந்தையின் அரண்மனைக்குத் திரும்பிய சாவித்ரியின் முடிவைக்கேட்டு அசுவபதி மகிழ்கிறார். ஆனால் அங்கே அந்த சமயம் வந்த நாரதர் சத்யவான் ஒரே ஆண்டில் மரணமடைவான் என்பது விதி என்கிறார். தன்முடிவை மாற்றிக் கொள்ள விரும்பாத சாவித்ரி தன் தாய் தந்தையர் ஆசிகளுடன் சத்யவான் வசிக்கும் கானகத்தை அடைகிறாள். 

அரசகுமாரி, கானகத்தில், குடிசையில் தன் திருமணவாழ்வைத் தொடங்குகிறாள். சத்யவானின் தாயும் தந்தையும் அவனுடன் வசிக்கின்றனர். அவர்களுடைய தேவைகளை அறிந்து பணிவிடை செய்யும் சாவித்ரி என்ற மங்கையர் திலகம் வீட்டுவேலைகள் அனைத்தையும் செய்கிறாள். கணவனுடைய காதலில் மெய்மறந்து வாழும் அவளுக்கு சத்யவான் அந்த ஆண்டு முடிவில் இறந்துபோவான் என்ற உண்மை தெரிந்தும் அதை வெளியே காண்பித்துக் கொள்ள முடியாமல், அதே நேரத்தில் தனக்குள்ளே அந்த ரகசியத்தைப் பாது காக்கவேண்டிய கட்டாயத்தில் கடமைகளைச் செய்கிறாள். 

வாழ்க்கையின் இக்கட்டான தருணங்களில் ஏதோ ஒரு சக்தி நம்மை வழிநடத்துகிறது.  தன் கணவனின் மரணம் நிகழப் போவதை அறிந்து கொண்டு,தன் துயரத்தை வெளிக்காட்டாது வாழ்வது என்பது எத்தனை கடினமான செயல்! மானுடம் மரணத்திற்கு அடிமைப்பட்டக் கிடக்கிறது. மரணமில்லாப் பெருவாழ்வு வாழும் வழியைக் காண்பதற்கே நீ பிறந்தாய்! எல்லோரையும் போல துயரத்தை ஏற்றுக் கொள்வதற்காகப் பிறக்கவில்லை. மானுடத்தின் விதியாகிய மரணத்தை எதிர்த்து நிற்கும் வழியை உனது ஆத்மசக்தியால் காண்பாயாக என்ற குரல் அவள் உள்ளத்தில் ஒலிக்கிறது.

பகல் வேளைகளில் பணிவிடையும்,இரவு நேரத்தில் கணவன் உறங்கியபின் சத்யவானை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்கான யோகத்தை ஆரம்பிக்கிறாள். அதுதான் ஆன்மாவின் யோகம்! அது என்ன யோகம்? நம்முடைய தினசரி வாழ்வில் நாம் உண்கிறோம், உறங்குகிறோம்.வேலை செய்கிறோம்! ஆனால் உண்மையில் நம்முடைய உடலாகிய அதிசயத்தைப் பற்றி சிந்திப்பதில்லை. நோய் வந்தால் ஒழிய நம் உடலில் என்ன நடக்கிறது என்பதை அறிய முயற்சிப்பதில்லை!

நம் உடலின் முக்கிய செயலான மூச்சை உள் வாங்கி வெளிவிடும் பிராணமய உறுப்புகளை, உண்பவற்றை சீரணித்து சமநிலைப் படுத்தும் அன்னமய தேகத்தை, சிந்தித்துச் செயல்பட உதவும் மூளையின் அறிவு சார்ந்த செயல்களை நடத்தும் மனமய உறுப்புகளை, நரம்பு மண்டலத்தை இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் சக்தியை, அதற்கு பக்கபலமாக இருக்கும் ஆன்மாவை நாம் எண்ணிப்பார்ப்பதில்லை.



சாவித்ரி ஒருமைப்பட்ட மனதுடன் தன்னுள்ளே ஆழ்ந்து நோக்குகிறாள். முதன் முதலில் மிகமிகப் பெரிய வெறுமையிலிருந்து தோன்றிய ஏதோ ஒன்று மெல்லமெல்ல ‘நான்’ எனும் முனைப்பை ஏற்படுத்துகிறது. “நான்” என்ற முனைப்பைச்சுற்றி எண்ணங்கள், உணர்ச்சிகள், பழக்கவழக்கங்கள் உருவாகின்றது. இதற்குப் பின்னால் ஆன்மா உள்ளது! ஐம்புலன்களின் வசப்படும் மனது காலமெனும் அலைகடலால் அமைதி இழக்கிறது. அதனால் தன் ஆழ்மனதின் தனிமையில் இறைவனின் ஒரு பகுதியாகிய விளங்கும் ஆன்மாவைக் கண்டறிய மனிதனால் முடிவதில்லை. ஆயின் ஆன்மாவைக் கண்டவனால் மரணத்தை வெல்லமுடியும் என்பதை சாவித்ரி உணர்கிறாள்.  அளப்பறிய அமைதியும், ஆனந்தமும், வலிமையும் பெறுகிறாள்.அவள் முகத்தில்  அமைதி பிரதிபலிக்கிறது.

மறுநாள் சத்யவான் இறக்கவேண்டிய தினம். என்றுமில்லாத அதிசயமாக சத்யவானுடன் அனுமதி பெற்றுச் செல்கிறாள் அவள். காட்டின் அதிசயங்களையெல்லாம் அவளுக்குக் காண்பித்துக் கொண்டே செல்கிறான் சத்யவான். மரம் வெட்டுகையில் கீழே சாய்கிறான்.உலகத்தில் மிகப்பெரிய சக்திவாய்ந்தவன் மரணதேவன்தான். பிறவி எடுத்தவர்கள் அனைவருமே அவனுக்குக் கட்டுப்பட்டவர்கள். அவனுடைய பாசக் கயிற்றிலிருந்து யாருமே தப்பமுடியாது.

மரணதேவன் அவனுடைய ஆன்மாவைக் கவர்கிறான். பெரியதோர் மரத்தின் கீழ் கணவனுடைய உடலை மடிமீது தாங்கிய சாவித்ரி, உயிரற்ற சத்யவான்! சத்யவானின் ஒளிஉடலாகிய ஆன்மாவை கவர்ந்து செல்லும் எமனின் பின் தன்னுடைய *“உட்சோதியில் கலந்து உலகத்தை மறந்து, ஒருமையுற்று” பயணிக்கிறாள் சாவித்ரி. 

மகாவிஷ்ணுவின் விஸ்வரூப தரிசனத்தை பகவத்கீதை காட்டுகிறது. ஆனால் உலக மாதாவாகிய அதிதி என்னும் ஆதிபராசக்தியின் தரிசனத்தை ஶ்ரீ அரவிந்தர் தன் “சாவித்ரி” மகாகாவியத்தில் அற்புதமாகக் காண்பிக்கிறார். 

 சாவித்ரியின் இதயக் கோயிலில் குடிகொண்டிருக்கும் அன்னை அவளுடைய யோகத்தால் எமனுக்கு தரிசனம் தருகிறாள். எப்படி?மரண தேவன் திகைத்து நிற்குமாறு, ஒளிமயமாக காட்சியளித்துத் தன் முகத்திரையை நீக்குகிறாள். நட்சத்திரங்களாக ஜொலிக்கும் கண்கள், பிரபஞ்சத்தையே ஆடையாய் அணிந்த மகாசக்தி. அறிய விரும்பும் யோகியரின் மூலாதாரத்திலிருந்து, சகஸ்ரகமலத்தை அடைந்து, மூளையின் அணுக்களைத் தங்க மயமாக்கி ஆனந்த அமுதத்தைப் பொழியும் அன்னை!

*“வாலை உமாதேவி, மாகாளி, வீறுடையாள்
மூலமாசக்தி, ஒரு மூவிலைவேல் கையேற்றாள்,
மாயை தொலைக்கும் மகாமாயை தானாவாள்
பேயைக் கொலையைப் பிணக்குவையைக் கண்டுவப்பாள்
சிங்கத்தி லேறிச் சிரிப்பால் உலகழிப்பாள்
சிங்கத்தி லேறிச் சிரித்தெவையுங் காத்திடுவாள்.
கடாவெருமை ஏறுங் கருநிறத்துக் காலனார்
இடாது பணிசெய்ய இலங்கு மகா ராணி.
மங்களம் செல்வம் வளர்வாழ்நாள் நற்கீர்த்தி
துங்கமுறு கல்வியெனச் சூழும் பலகணத்தாள்,
ஆதி பராசக்தி -"

 மரணமற்றவன், பிறத்தலும் இறத்தலும் இல்லாத அதிதி தேவியின் தரிசனத்தை சாவித் ரியிடம் பெறுகிறான். மனிதனால் மரணமில்லாப் பெருவாழ்வு வாழமுடியும் என்பதற்கு முதற்படியாக சத்யவானின் ஆன்மாவைக் கொடுக்கும்படி ஆணையிட சாவித்ரி சத்யவானுடைய உயிருடன் பூமிக்கு வருகிறாள்.

சாவித்ரி தன் கணவனின் உயிரை மீட்டு வந்த நாளாகக் கருதப்படும் மாசி- பங்குனி மாதங்கள் சேரும் நல்ல நேரத்தில் தமிழ்நாட்டுப் பெண்டிர் காரடையான் நோன்பு மேற்கொள்கிறார்கள்.

யமனோடு சாமர்த்யமாகப் பேசிய பெண் என்ற வகையில் சாவித் ரி பேசப்படுகிறாள். அதே போல நோன்பு நாளில் விரதம் இருந்து, அரிசிமாவினால் செய்த அடையை நிவேதனம் செய்து நோன்புக் கயிறு அணிந்து கொள்வதுதான் சாவித்ரி விரதம் என நம்பப்படுகிறது. உண்மையில் பார்க்கப் போனால் பெண்கள் இயற்கையிலேயே  தன்னுடைய குடும்பத்திற்காக திருமணமானபின் பிறந்த வீட்டையும் வாழ்ந்த வாழ்வையும் துறந்தவர்கள். பின் பெற்ற குழந்தைகளுக்காகவும் கணவனுக்காகவும் வாழ்பவர்கள்! அதுவே தவம்.  

ஆன்மாவை அறிய, ஒருமையோடு தூய்மையான வழிபாடு செய்யும் சக்தியுடையவர்கள் பெண்கள். ஆண் பெண் இருவரிடமும் சக்தியாய் அன்னை விளங்குகிறாள். அவளை வழிபடுவோம். ஆணின்றிப் பெண்மை முழுமையடைவதில்லை. பெண்மையின் அன்பு இன்றி ஆணின் வாழ்வு ஒளி பெறுவதில்லை!

இந்தக் கதை மகாபாரதத்தில் வருவதாகும். மகாபாரதத்தின் திரெளபதி, இராமாயணத்து சீதை, அகலிகை, மண்டோதரி, தாரை ஆகிய அனைத்து மாந்தரையும் விட மிக உன்னதமானவளாக, யோக வாழ்வினால், தன் தவத்தால் கணவனின் உயிரை மீட்டு வந்த சாவித்ரி பெருமைக்கு உரியவள்.

(மகான் மகாயோகி ஶ்ரீஅரவிந்தரின் மந்திரச் சொற்களால், படைக்கப்பட்ட காவியம் “சாவித்ரி”. அவருடைய கருத்துக்களை இங்கே சேர்த்திருக்கிறேன்.)

  • பாரதியாரின் பாஞ்சாலி சபதம்




25 Jan 2015

புதுவருடமும் நானும்



எப்போதுமே புத்தாண்டு என்றால் தியான மையம் சென்று அமைதியாக கூட்டுத் தியானத்தில் பங்கேற்று மனநிறைவுடன் திரும்புவது வழக்கம். இந்த ஆண்டு இரவு முழுதும் மழையானதால் காலையில் போக முடியவில்லை.  மாலையில் சென்றேன்.
தியான மையத்தில் அமைதிக்கும், ஆழ்ந்த தெய்விக சூழ்நிலைக்கும் என்றும் குறைவே இல்லை. இதயமெங்கும் பரவி, உள்ளத்தை நிரப்பும் அன்னை, அரவிந்தரின் புன்னகை! ஒரு தாயின் தோளில் சாய்ந்து கொண்ட இனிய அனுபவம்.

ஒரு மேகப் பொதிபோல் வானில் பறக்கும் உணர்வோடு கீழே இறங்கி வந்தேன். நான் விட்டுவந்த இடத்தில் என் காலணிகளைக் காணவில்லை. ஆனால் அதே நிறத்தில் சற்றே உயரமான 'ஹீல்ஸ்'
உடைய ஒரு ஜதை பக்கத்தில். காலணிகள் மாறிப் போச்சு! 
அங்கே மேற்பார்வையாளர் வேலை செய்யும் சகோதரி சொன்னார், 'சில்க் போர்ட்' பக்கத்திலிருந்து வந்த அந்த அம்மாதான் உங்களுடைய காலணிகளைப் போட்டுக்கொண்டு போயிருக்க வேணும். இங்கே இருப்பது அவர்களுடையதுதான். என்ன செய்வது? காலணியில்லாமல் வீட்டுக்குள்ளேயே என்னால் நடக்க முடியாது. காலண்டர் கூட மாட்ட முடியாத "காலாணி"களைக் கொண்ட கால் என்னுடையது!

தியானமையத்திற்கு எதிரே பெருமாள் கோயில்......

புத்தாண்டு தினத்தன்று வைகுண்ட ஏகாதசி. எனவே பெருமாள் கோயில் தரிசனத்திற்காக நீண்ட நெடும் வரிசையில் மக்கள் கூட்டம். ஒரு புறம் டிக்கட் தரிசனம், மறுபுறம் இலவசம்.  ஆட்டோக்காரர்களுக்கு அன்று பெருமாள் ஆசியால் லாப தினம். ஜெயநகர் போக எவரும் வரமாட்டார்களாம்! ஐம்பது ரூபாய் கொடுத்தால்  சரி. இல்லாவிட்டால்  வர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். எதற்கு ஜெய நகர்?

என்காலுக்கு ஏற்ற "சாஃப்ட்" காலணி அங்கேயுள்ள கடை ஒன்றில் மட்டுமே கிடைக்கும். சரி, முப்பது தருகிறேன் என்று சொல்லி ஒரு ஆட்டோவில் ஏறிவிட்டேன். இருள் கவிகிற நேரம், சரியான போக்குவரத்து நெரிசல். ஒரு போக்குவரத்துப் போலிசையும் காணவில்லை. ஆட்டோக்காரரோ முழு போதையில் வளைத்து, குறுக்கே புகுந்து, இப்படியா, அப்படியா என்று குழறிக் குழறி கண்டபடி ஓட்டுகிறார்....! என் மனமோ ''எங்குறு தீமையும் எனைத் தொடராவகை கங்குலும் பகலும் மெய்க்காவல் செய் துணையே" என்று அகவலை விடாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இன்னொரு தப்பு என்னவென்றால் ஏறியவுடனே மீட்டரைப் போடச் சொல்லாதது. அது ஏற்கெனவே 200 ரூபாய் காட்டிக் கொண்டிருந்தது. நாம்தான் முப்பது ரூபாய் என்று சொல்லிவிட்டோமே என்று நானும் அதை கண்டுகொள்ளவில்லை. அந்த ஆட்டோவில் ஓட்டுனர் விவரம் அடங்கிய அட்டையும் இருக்கவில்லை. 

ஒரு வழியாக கடை வாசலை அடைந்தவுடனே தயாராக வைத்திருந்த மூன்று பத்து ரூபாய்த் தாள்களை ஆட்டோக்காரர் கையில் திணித்துவிட்டு ஒரே ஓட்டம் கடையை நோக்கி!

 அன்று என்னை மிகவும் சந்தோஷப் படுத்திய இரண்டாவது விஷயம் என்னவென்றால், பெருமாள் கோயில் வரிசையைப் படம் பிடித்த போது இரு இளம் பெண்கள் என்னைப் பார்த்து சிரித்து, ''ஹை ஆண்ட்டி'' என்று சொன்னது மட்டுமல்லாமல் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ள என்னை அணைத்துக் கொண்டதுதான்! அந்த நாளை அது இனியதாக்கியது.

புத்தாண்டு தினத்தன்று இப்படியான ஒரு அனுபவம் எல்லோருக்கும் கிடைக்குமா என்ன? 

( புத்தாண்டு பிறந்து இத்தனை நாட்களுக்குப் பிறகு எதற்கு இதை பதிவு செய்கிறேன் என்கிறீர்களா? ஆரம்பித்தேன்.......நடுவே கொஞ்சம் ....நாட்கள் ...காணாமல் போய்விட்டது.  ஒவ்வொரு நாளும் புதிய நாள்தானே?  எல்லோரும், எல்லா நலன்களையும், எப்போதும் பெற்று இனிது வாழ வேண்டுமென்று
ஆண்டவனை வாழ்த்தி வணங்குகிறேன்)










  

27 Dec 2014

Let go.....


(This is a poem written by Karen Balmer in veneration of Thich Nhat Hanh, the Zen master.)
Relax, Let Go
Breathe in,
Calm your feelings,
There is nothing to cling to.
Acknowledge, and let go.
Breathe out,
Calm your thoughts,
There are no expectations.
Acknowledge, and let go.
Smile,
Return to your true home.
Relax,
Set free your inner light.
Be who you are,
Right here, right now.
Experience fully this wonderful moment,
There is nothing missing.
Loving light
Resides wherever you rest,
Deep within you. Unwrap this
Treasure, and let it roam free.
Karen Balmer

24 Sept 2014

நவரத்திரி - சுஷிமா சேகரின் புத்தகம் பற்றிய ஒரு புகுந்துரையாடல்

வாசலில் காலிங் பெல் தொடர்ந்து ஒலிக்கிறது......!
தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்த பர்வதம்மா, 'யாரது,' என்று கொஞ்சமாகக் கதவைத் திறந்து எட்டிப் பார்க்கிறார்!
நாந்தான் ஆண்டி, சாரி தூங்கினவங்கள எழுப்பிட்டேனோ, என்று குதிக்கிறாள் சாருமதி!
என்ன அப்படி குஷி, உள்ள வா என்கிறார் பர்வதம்.
இல்லம்மா உங்கள எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு போகதான் வந்தேன். சூப்பரா கொலு வெச்சுட்டேன். நீங்க வந்து சரியான்னு சொல்லணும் அவ்வளவுதான்!

அதுதான் 'புக் '  குடுத்தேனே........?

ஆமாம்,  நீங்க சுஷிமா ஆண்டியோட,' நவராத்திரி ' புக் கொடுத்தீங்களே அதை வெச்சுதான் கொலு வெச்சேன்! எங்க மாமியார் பாட்டுக்கு திருநெல்வேலில உக்கந்துட்டு கொலு வெச்சுதான் ஆகணும்னு சொல்லிட்டாங்க. சரஸ்வதி பூஜைக்கு முதல்நாள்தான் வருவாங்களாம்! எனக்கு இந்த பண்டிகைய பத்தியெல்லாம் ஒன்னும் தெரியாது! எங்க வீட்டில அம்மா கொலு வெப்பாங்க. சுண்டல் குடுத்தா சாப்பிடுவேன் அவ்ளோதான். படிப்பு படிப்புன்னு இருந்துட்டு இப்போ என்ன செய்வது? எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லிக்க வெட்கம்!

ரொம்ப சந்தோஷம்மா!
அந்த புக் உனக்கு எப்படியெல்லாம் உபயோகமாயிருந்ததுன்னு சொல்லு.

ஏன் கொலு வைக்கிறோம், எந்தஎந்த ஊருல எப்படி கொண்டாடுவாங்கன்னு சொல்லியிருக்காங்க.

இந்த ராமாயணத்துக்கும், மகாபாரதத்துக்கும் நவராத்திரிக்கும் என்ன தொடர்பு என்று இதுவரையிலும் எனக்கு தெரிஞ்சிருக்கல.
தேவி மஹாத்மியத்துக்கும் நவராத்திரிக்கும் என்ன சம்பந்தம்? வட இந்தியாவில ராம்லீலா, தென்னிந்தியாவில விஜய தசமி .... வினாவிடை போட்டிவச்சா நல்லா இருக்கும்! முதல் பரிசு எனக்குதான்.....

அதுக்கப்புறம் சுண்டல், புட்டு எப்படி செய்வதுன்னு சொல்லியிருக்காங்க. ஆனா இந்த பாயசம், தினம் ஒரு சித்ரான்னம் எப்படி செய்வதுன்னு சொல்லியிருக்கலாம். எங்க வீட்டில விஜய தசமிக்கு பானகம் செய்வாங்க!

அவங்க சொல்லியுள்ளபடியே அலங்காரம் செய்தேன். முக்கியமா வந்தவங்களுக்கு கொடுக்கும் மஞ்சள், குங்குமம், சந்தனம் இதெல்லாம் வாங்கிட்டு வரணும். வருகிறவங்களுக்கு பரிசுகள் எல்லாம் எங்க மாமியார் ஒத்துக்க மாட்டாங்க! 'ஆண்டி' யோட புக்க எங்க மாமியார்கிட்டயும் வாசிச்சு காட்டிவிடுவேன். அப்பதான் அவங்க நம்புவாங்க.

கடைசி நாள் ஆரத்தி எடுப்பதும், பாட்டுப் பாடுவதும் எப்படின்னு மட்டுமில்லாம பாட்டுகளையும் எழுதிட்டாங்க. மொத்தத்தில நவராத்திரி வைக்கும் என்னப் போல சின்னவயசுக்காரங்களுக்கு
சுஷிமா சேகர் அவங்களோட புத்தகம் ஒரு வரப்பிரசாதம்னுதான் சொல்லணும். 

ஆங், மறந்துட்டேனே, எனக்கு  ஒரு பத்து புத்தகம் வரவழைச்சுக் கொடுத்தீங்கன்னா எல்லோருக்கும் கொடுக்க வசதியாக இருக்கும். அவங்க புத்தகம் எங்க கிடைக்கும்?

சென்னையில ''முன்னேர் பதிப்பகம்னு'' புதுசா புத்தகங்கள் அச்சிட்டு வழங்குகிறார்கள். அவங்களுக்கு ஈமெயில் அனுப்பினா எத்தனை புக் வேணுமானாலும் வாங்கலாம். தொடர்புக்கு ;
Ph: +91-(0) 8050949676
Email : munnerpub@gmail.com













24 Aug 2014

யார் மைந்தன், யார் மகன்?( திருப்புகழ்)

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டக் கடற்கரையில் உள்ள சிற்றூர் திருச்செந்தூர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்மனுக்கு திருப்பெரு வடிவம்
காட்டி  ஆட்கொண்டு, கோயில் கொண்ட திருத்தலம்.

தமிழ் மறையாம் திருப்புகழைப் பாடிய அருணகிரிநாதர் திருச்செந்தூருக்குச் சென்ற போது, முருகப் பெருமானின் திருநடனம் காணவிரும்பி வேண்ட, பெருமானும் திருநடனம் புரிந்து அருள்செய்தார்.
''கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்றன்முன் கொஞ்சி நடனங்கொளும் கந்தவேளே''என்று
அதனைத் திருப்புகழில் ஏற்றிப் பாடுகின்றார் அருணகிரி.

திருப்புகழில் இல்லாதது எதுவுமில்லை!  வரலாறுகளை, வாழ்க்கை நிகழ்வுகளை, உறவுகளை, காதலை, காமத்தை, மனிதர்களுடைய பல மனப் பரிமாணங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது திருப்புகழ்.

இன்றைய முதியோர்களைப் பார்க்கும் போது திருப்புகழ் நினைவுக்கு வருகிறது. முதுமையின் துன்பங்களை அவர்தான் எப்படியெல்லாம் எடுத்துச் சொல்கிறார்!  முதுமை வருகிறது.  கூடவே வயிறு பெருத்து, முன்னே தள்ளுகிறது. தலைமுடி வெளுத்து, வாய்ப்பல் உதிர்கிறது! முதுகு வளைய, உதடுகள் தொங்குகின்றன. மூன்றாவது காலாய் ஊன்றுகோல் முன்னேவர, இருமல் கிண்கிண் என ஒலிக்கிறதாம்.
பேசுவது யாருக்கும் புரியாதவாறு வாய் குழறுகிறது. ஒளி பொருந்திய கண்கள் தூங்குவது போலக் காணப்படுகிறது. காது கேட்கும் சக்தியை இழந்துவிடுகிறது. போதாத குறைக்கு நோய்கள், அதனால் வரும் துன்பங்கள்!
நோயைக் குணப்படுத்துகிறேன் என வரும்  வைத்தியனால் படும் துன்பம்!

ஆக இந்த துன்பங்களுக்கு சிகரம் வைத்தார் போலும், பிள்ளை என்ன செய்கிறான்! அப்பா அப்பா எவ்வளவு சொத்து வைத்திருக்கிறாய்? கடன் எவ்வளவு? மிச்சம் மீதி தேறுமா? என்றெல்லாம் கேட்கும் போது அன்பு காட்டி ஆறுதல் சொல்லாமல் சேர்த்து  வைத்திருக்கும் காசைப் பற்றிக் கவலைப்படும் மகனால் ஏற்படும் துன்பம்!
போனால் போகட்டும்!மரணம் எல்லோரையும் தழுவுவதுதானே! யமராசன் வந்து, பாசக்கயிற்றால் கட்டியிழுக்கும் வேளை! மலமொழுக, ஆவி மயங்குகிறது! அப்போது யார் துணை?

முருகப் பெருமானே, சூலாயுதம் கொண்டு எம தூதர்கள் எனைச் சூழும் போது வேலாயுதத்துடன் வேகமாக மயில்மீது அமர்ந்து வந்து என்னைக் காத்து அருள்புரிய வேண்டும்!

அது யார் மயில் மீது வந்து காப்பவன்? முருகனா? இதுவரை கேள்விப்பட்டதில்லையே! அவனைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.

அட இது கூடத் தெரியாதா?
கங்கை நதியையும், பிறைச் சந்திரனையும் சடாமுடியிலே தரித்திருக்கும் சிவபெருமானின் மைந்தன்!
கடலலைகள் முத்தமிடும் செந்திலம்பதியின் அதிபன் சண்முகன்!
அழகன் முருகன், வள்ளியம்மையின் மணவாளன்!
சூரபத்மனால் சிறைவைக்கப்பட்ட தேவர்களைப் போரிலே வென்று வெற்றிவாகை சூடியவன்!
அட இன்னும் தெரியவில்லையா?

இப்போது இன்னும் ஓர் அடையாளம் சொல்கிறேன்.
அதோ அயோத்யை மாநகரம்! தசரத மகாராஜாவின் அந்தப்புரத்திலே கோசலை தேவியார் குழந்தை ஸ்ரீராமனை அழைக்கும் குரல் கேட்கிறதா? என் அப்பனே வருக, ரகுநாயக வருக, மைந்தனே வருக, மகனே வருக, என் கண்ணே, ஆருயிரே, என்று கொஞ்சி, என் அரசே கொஞ்சம் பாலருந்த வருக, மலர்களை சூடிக்கொள்ள வருக என்றெல்லாம் அழைக்கிறாள், கேட்கிறதா?

மகாவிஷ்ணுவாகிய திருமால் ராமனாக அவதாரம் செய்த பொழுது கோசலை ராமபிரானை இவ்வாறெல்லம் அழைக்கும் பேறு பெற்றாள். அவளுக்கு அந்தப் பேற்றை வழங்கிய திருமாலின்
மருகன் முருகன். ஆம் உமையம்மையின் சகோதரன் அல்லவா இந்தத் திருமால்!

அந்தகன் வரும் போது அவனியில் உற்ற துணை முருகப் பெருமானைத் தவிர யாராக இருக்க முடியும்?
முருகப் பெருமானே உயிர் பிரியுங்காலத்தில் வந்து என்னைக் காத்து அருள் புரிவீர்!

உறவுமுறைகளை மிக மிக அழகாக சொல்வதிலே வல்லவர் அருணகிரியார். மாமன் மருகன் உறவு முறைகளைச் சொல்லியே ராமாயணக் கதையை திருப்புகழிலே இழைத்திருக்கிறார்!

திருமுருக கிருபானந்த வாரியாரின் திருப்புகழ் விளக்க உரை திருப்புகழ் கற்போருக்கு வரப் பிரசாதமாகும். ''தொந்திசரிய ''எனத் தொடங்கும் இப்பாடலில் ராமபிரானை கோசலை,'மைந்த வருக மகனே வருக ' என அழைக்கிறாள். அதற்கு வாரியார் அவர்களின் விளக்கத்தைப் பார்ப்போம்.

''மைந்தன், மகன்  என்ற இரு சொற்களும் ஒரே பொருளைக் கொடுப்பன அல்ல.

1. உரிய வயது வந்தும் தாய் தந்தையர் பாதுகாப்பிலேயே இருப்பவன் -  பாலன்.

2. வயது முதிர்ந்த தந்தை வேலை செய்ய தானும் உதவி செய்யாமல் செலவு செய்பவன்- பிள்ளை.

3. தந்தைக்கு ஞானம் உரைக்கும் அளவுக்கு உயர்ந்த அறிவு பெற்றவன் - குமாரன்.

4. தந்தைக்கு நற்கதி தருகின்றவன் - புத்திரன்.

5. தந்தைக்கு நன்மையைச் செய்கின்றவன் - புதல்வன்.

6. தான் பிறந்த குடும்பத்தைக் காத்து ஆலமரத்தின் விழுது மரத்தைத் தாங்குவது போல் நிற்பவன் - மகன்.

7. தந்தையின் குடும்பம், தாயின் குடும்பம், குருவின் குடும்பம், நண்பரின் குடும்பம் என எல்லோருடைய          குடும்பங்களைக்  காப்பாற்றுபவன் - மைந்தன்.

இராமர் ,  தன் குடும்பம், குகனுடைய குடும்பம், சுக்ரீவன், விபீஷணன், ஆகியோருடைய குடும்பங்களைக் காத்தலினால், மைந்தன் என்றும், தான் பிறந்த குடும்பத்தையும் காத்தலினால் மகன் என்றும் அழைக்கப் பெற்றார். 

எத்தனை அழகான விளக்கம் பாருங்கள். திருப்புகழ் கடலில் குதித்துக் குளித்துக் களித்து முத்தெடுங்கள்!
திருச்செந்தூர் கோயில் கோபுரம்.









நாழிக் கிணறு - திருச்செந்தூர்.