ஶ்ரீஅரவிந்தர் - 16
'தன்னை அறிதல்' என்னும் ஆத்மஞானம் பெற்ற அரவிந்தர் மீண்டும் தன்னை அரசியலில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அவருக்கு வாழ்க்கையே இறைமயமாயிற்று. இறைவனே அவருக்கு தலைவராகவும், வழிகாட்டியும் ஆனார்.
இறைவன் தன் விருப்பத்தையே, தன் மூலமாக நிறைவேற்றிக் கொள்வதாக உணர்ந்தார். தான் ஆற்றிய உரைகளெல்லாம் இறைவனுடைய உரைகள் என எண்ணினார். தன்னுடைய செயல்களையெல்லாம் செய்வது இறைவனே என அறிந்தார். ஆயினும் அரசியல் வாழ்விலிருந்து தன்னை அவர் விடுவித்துக் கொள்ள விரும்பவில்லை.
'நான் புரிவன எல்லாம்தான் புரிந்து எனக்கே
வான் பதம் அளிக்க வாய்த்த நல்நட்பே' என்பது வள்ளலார் வாக்கு.
இனி மீண்டும் அரவிந்தரின் வாழ்க்கைக்கு, வருவோம்!இறைவன் ஒருவரை ஆட்கொள்ள நினைத்தால் எந்த வழியிலாவது அதை நிறைவேற்றிக் கொள்வான். நம்முடைய வாழ்வு , வாழ்வின் நிகழ்வுகள் அனைத்துமே இறைவனின் ஆணைக்குட்பட்டே நடக்கின்றன என்பதை உணர்த்தும் நிகழ்வுகளைக் காண்போம்.
ஏற்கெனவே 11ம் எண் கட்டுரையில் அலிப்பூர் சதி வழக்கைப் பற்றிப் பார்த்தோம்.
1908, ஏப்ரல் 30 ஆம் தேதி முசாஃபர்பூர் என்னுமிடத்தில் ஜில்லா நீதிபதியின் மேல் குண்டுவீசிக் கொல்ல திட்டமிட்டனர் அரவிந்தரின் சகோதரர் பாரினும், அவரது நண்பர்களும். மே 1ஆம் தேதி பல தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர்.
1908, மே மாதம் 2ஆம் தேதி நள்ளிரவில் ஶ்ரீஅரவிந்தரை அவரது இல்லத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்தது பிரிட்டிஷ் அரசு.கைகளில் விலங்கிட்டு அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கிருந்து அவர் அலிப்பூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். மே19 ஆம் தேதியிலிருந்து ஓராண்டு காலம் விசாரணை நடந்தது. 42 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 4000 சான்றாவணங்கள்(exhibits), 300- 400 விளக்கச் சான்றுகள்(proofs) இருந்தன.
222 பேர் சாட்சிகள். இந்த வழக்கு வங்காளத்தில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒன்றாகும்.
அலிப்பூர் சிறையில் ஒன்பதடி நீளமும், ஆறடி அகலமும் உடைய தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார் அரவிந்தர். பகவத் கீதையைப் படித்தும்,உபநிஷதங்களின் ஆழ்ந்த கருத்துகளை ஆராய்ந்தும்,தியானம் செய்தும் வாழ்ந்தார். சிறைச் சாலையில் கைதிகளின் பேச்சு,சிரிப்பு, விளையாட்டுக் கூச்சல்கள் என பல சப்தங்களுக்கு நடுவிலும் அவரால் தியானம் செய்ய முடிந்தது. அதே சமயம் அவர் தனக்குள்ளிருந்து எழும் இறைவனுடைய குரலைக் கேட்க ஆர்வமுடையவராயிருந்தார்.
அரவிந்தரைக் கைது செய்வதற்கு சுமார் ஒரு மாதத்துக்குமுன் அரசியல் தொடர்பான அனைத்து நிகழ்வுகளிலிருந்தும் விடுவித்துக் கொள்ளும்படி அவரது ஆன்மாவின் குரல் கட்டளையிட்டது..ஆனால் அரவிந்தரோ தன்னை அரசியல் வாழ்விலிருந்து விடுவித்துக் கொள்ளமுடியாதவராக இருந்தார்.
சிறையில் அவருடன் அந்தக் குரல் மீண்டும் பேசியது! " உன்னால் விடுவித்துக் கொள்ள முடியாமல் இருந்த அரசியல் பந்தங்களிலிருந்து நான் உன்னை விடுவித்துவிட்டேன்......உனக்கு மகத்தான வேறு வேலை ஒன்று உள்ளது, அதற்குத் தயார் செய்யவே உன்னை இங்கே கொண்டுவந்திருக்கிறேன்" என்றது. அந்த நேரத்தில் அரவிந்தர் மனதாலும் உடலாலும் தளர்ந்து போயிருந்தார்.
"நான் இறைவனை தீவிரமாக, மிகுந்த மனஒருமைப்பாட்டுடன் வழிபட்டு என் அறிவு மழுங்கி போகாமலிருக்க வேண்டும் என வேண்டினேன். அந்தக் கணத்தில் என் உடலில் மென்மையான குளிர்ந்த காற்று தழுவுவதை உணர்ந்தேன். சூடேறியிருந்த என் மூளை அமைதியடைந்தது. எழுத்துகளில் வடித்தற்கரிய ஒரு ஆனந்தம் என்னுள் நிறைந்தது. அப்போதே என் சிறை வாழ்க்கை துயரமற்றதாயிற்று. அந்தக் கணத்தில் என் உள்ளம் அளப்பறிய வலிமையடைந்தது.
அதுவரை இருந்த துயரங்கள் சுவடற்று மறைந்தன. தனிமைச் சிறையில் நான் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தேன்.
பிரார்த்தனை....மனிதனை,இறையருட் சக்தியுடன் இணைக்கும் பாலம் என்பதை உணர்ந்தேன்." என்கிறார்.
(இவருடைய சிறை அனுபவங்கள்" சிறைச்சாலைக் கதைகள்" என்ற பெயரில் வெளிவந்துள்ளன.)
(ஶ்ரீஅரவிந்தர், வாழ்க்கைவரலாறு, ஆன்மிக சாதனைகள், அலிப்பூர்சிறைச்சாலை)