'' ஒற்றி ஊரனைப் பற்றி நெஞ்சமே நிற்றி நீ அருள் பெற்றி சேரவே. இல்லை இல்லைகாண்
ஒல்லை ஒற்றியூர் எல்லை சேரவே அல்லல் என்பதே'' முத்தி உபாயம்.
சென்னைக்குப் போக வேண்டும் என்று எண்ணிய உடனேயே கண்டிப்பாக என்னைக் காணவர வேண்டும் என்று ஒற்றியூர்ப் பெருமான் சொல்லிவிட்டார். திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றிய பதிகங்களில் 68 பதிகங்கள் ஒற்றியூரைப் பற்றினவாகும். அருட்பா பாக்களைப் படித்துப் படித்து, உள்ளம் உருகி, காதலாகிக் கசிந்து, ஒற்றியூரப்பனைக் காணவிரும்பியது மனம்.
''திருவார் கமலத் தடம்பணை சூழ் செல்வப் பெருஞ் சீரொற்றி, கண்கள் களிப்ப வீண்டு நிற்கும் கள்வர் இவரூர் ஒற்றி, முந்தை மறையோன் புகழொற்றி, திருவை அளிக்கும் திருவொற்றி,'' என இங்கித மாலையின் 165 பாடல்களில் ஒற்றியூர்ப் பெருமை பேசும் வள்ளலார் சென்னையில் 33 ஆண்டுகள் வாழ்ந்தார். பெரும்பாலும் திருவொற்றியூரிலேயே இருந்திருக்கிறார்.
சென்னையின் வடக்கில் கடற்கரைச்சாலையில் உள்ளது திருவொற்றியூர். இறைவன் ஆதிபுரீஸ்வரர், படம்பக்கநாதன், எழுத்தறியும் பெருமான், தியாகேசர், புற்றிடங்கொண்டார் என்னும் திருநாமங்கள் உடையவர். இறைவி வடிவுடைநாயகி. தல விருட்சம் மகிழமரம்
ஒற்றியூரில் மூலட்டானத்தை ஒட்டிய திருச்சுற்றில் உள்ள திருமுருகன் திருமுன் ஒருமையுடன் முருகன் திருவடியை நினைந்த காரணத்தால் உத்தமனாகும் பெருமை பெற்றவர் வள்ளல் பெருமான்.
''துன்று தீம்பலாச் சுளையினும் இனிப்பாய்த்
தொண்டர் தங்கள் நாச் சுவைபெற ஊறி
ஒன்றும் ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே''
என 'அருள் நாம விளக்கப்'பாடல்களில் முருகப் பெருமானை துதிப்பதற்குரிய மந்திர எழுத்துக்களை அமைத்துப் பாடியுள்ளார்.
நானும் என் சகோதரியும் காலை 8.30 மணியளவில் திருவொற்றியூருக்குப் புறப்பட்டோம். 9.30 மணிக்கு கோயில் வாசலை அடைந்தோம்.
ஒற்றியூர் என்பதன் பொருள் என்ன? உடம்புடன் இணைந்து இவ்வுலகில் வாழ்கின்ற எந்த உயிரும் ஒற்றியூர் என்பதாகும். ஒன்று எனத்தோன்றும் உயிர், உடம்பு என்ற இரண்டையும் இணைத்து நிறுத்தி, அந்த இரண்டையும் ஒற்றி, ஊர்ந்து மேல் சென்று தங்கி இருப்பவன் என்பது பொருள். எல்லாப் பொருள்களையும் உயிர்களையும் ஒற்றி - இணைந்து நின்று தனக்கெனத் தனியே ஊர் இல்லாமல் ஒற்றிய அந்த இடத்தையே ஊராகக் கொண்டு வாழ்கிறான். எல்லா உயிர்களும் இறைவன் உறையும் இடங்களே என்னும் உண்மையை உணர்த்த அமைந்த தலமே ஒற்றியூர்.
இந்த ஊருக்கு ஆதிபுரி என்ற பெயரும் உண்டு. உயிர்களில் பரம்பொருளாம் இறைவன் இடம் கொண்டு விளங்குவதால் அப்பெயர். ஊழிக்காலத்தும் அழியாத ஊர் என்பது விளக்கம்.
திருவொற்றியூரில் முற்காலத்தில் கோயில் இருந்ததாகத் தெரியவில்லை. ஒற்றியூர் ஒரு தலம். ''படம் பக்க நாதன்'' என்ற பெயர் இறைவனுக்கு உண்டு. படம் என்பது வாசுகி என்னும் பாம்பு. அது இறைவனிடம் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டது. அதை ஏற்றுக் கொண்ட இலிங்கம் வாசுகியின் படத்துடன் விளங்குவதால் ''படம் பக்க நாதன்''
''ஒக்க நெஞ்சமே ஒற்றி யூர்ப்படம்
பக்க நாதனைப் பணிந்து வாழ்த்தினால்
மிக்க காமத்தின் வெம்மை யால்வரும்
துக்க மியாவையும் தூர ஓடுமே.'' - நெஞ்சொடு நேர்தல்
இவ்வூர்ப் பெருமானுக்கு ''எழுத்தறியும் பெருமான்'' என்ற பெயரும் உண்டு. அரசன் ஒருவன் தனது ஆட்சிக்கு உட்பட்ட கோயில்களின் நாள் செலவுக்கு உரிய பொருள் அளவை குறைக்க எண்ணி, அவ்வளவை நிர்ணயித்து ஆவணம் அமைத்தனாம். மறு நாள் காலையில் அந்த ஆவணத்தில் நடுவே பிளந்து ''ஒற்றியூர் நீங்கலாக'' என எழுதப் பெற்றிருந்த காரணத்தால் இப்பெயர் பெற்றதாம். ஒற்றியூர்ப் பெருமான் அந்தந்த உயிரை ஒற்றித் தங்கியிருக்கிறான் அதனால் அங்கே வரிவிதிக்கவோ விலக்கவோ, செலவுக்குப் பொருள் கொடுக்கவோ தேவையில்லை.
''உண்ணாடும் வல்வினையால் ஓயாப் பிணிஉழந்து
புண்ணாக நெஞ்சம் புழுங்குகின்றேன் புண்ணியனே
கண்ணாளா உன்தன் கருணை எனக்களிக்க
எண்ணாயோ ஐயா எழுத்தறியும் பெருமானே.'' என்ற பாடலைப் படித்து இன்புறுங்கள்.
இவ்வூரில் இறைவனுக்கு ஒருநாளில் சைவர், வைணவர், ஆதிசைவர், மலையாளத்து நம்பூதிரியர், ஸ்மார்த்தர், உவச்சர் என அறுவர் பூசை செய்யும் வழக்கம் இருந்ததாக ஒரு செய்தி கூறுகிறது. இங்கே ஒரு பொதுமை அனுபவத்தைத் தான் பெற்றதாக வல்ளலார் ஒரு பதிகத்தில் கூறுகின்றார்.
ஒற்றிப் பெருமான் ஒன்பது உருவில் விளங்குபவன் என்பதை
''துன்ப வாழ்வினைச் சுகம் என மனமே
சூழ்ந்து மாயையுள் ஆழ்ந்து நிற்கின்றாய்
வன்பதாகிய நீயும் என்னுடனே
வருதியோ அன்றி நிற்றியோ அறியேன்
ஒன்பதாகிய உருவுடைப் பெருமான்
ஒருவன் வாழ்கின்ற ஒற்றியூர்க்கு இன்றே
இன்ப வாழ்வுறச் செல்கின்றேன் உனக்கும்
இயம்பினேன் பழி இல்லை என் மீதே'' என்ற பாடல் கூறுகிறது.
இங்கு வட்டப் பாறை என்றொறு இடம் உண்டு. சென்று நிற்பவர் எந்த தெய்வத்தை விரும்பினாரோ அந்தத் தெய்வமெல்லாம் வருதற்குரியது ஆதலின் வட்டப்பாறை என்று பெயர் வந்திருக்கலாம் என்கின்றனர்.
மேலும் 27 நட்சத்திரங்களும் லிங்கவடிவில் அமைந்துள்ளது மற்றொறு சிறப்பாகும்.
தேவாரம் பாடிய சுந்தரர் சங்கிலியாரை மணம் செய்து கொண்டது இங்குதான்.
ஒற்றியூர் இறைவனுக்கு தியாகராஜன் என்ற திருநாமமும் உண்டு. ''திவ்ய ஒளி திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே,'' எனவும் ''ஒற்றியூர்த் தியாகநாயகனே'' எனவும்,'' ஒற்றியூர் அரசே, உயிரே, கரும்பே,உறவே, உவப்பே, செழுந்தேனே'' எனவும் உருகுகிறார் வள்ளலார். அத்தனை பாடல்களும் தித்திக்கும் தேனா, பாலா, செழுந்தேனா என எடுத்துச் சொல்ல முடியாது! இந்தத் திருத்தலத்தைக் காணவிரும்பியதில் என்ன வியப்பு இருக்கிறது?
சரி, திருவொற்றியூர் கோயில் வாசற் புறமெங்கும் கூட்டம். சைக்கிள், மோட்டார் பைக், ஆட்டோ, கார் என வாகன நெரிசல். காய்கறிகள்,கீரைகள் விற்போர் கடைவிரித்திருக்க, தட்டுத்தடுமாறி கோயிலுள் நுழைந்தோம். தியாகராஜ மண்டபத்தில் சுமார் பத்து ஜோடிகள் திருமணக்கோலத்தில்! கூட்டத்தைப் பிளந்து சென்று, "ஹலோ தியாகப் பெருமானே, தெரியாமல் முகூர்த்த நாளில் வந்து விட்டோம்! என்றாலும் உனக்கு வந்தனங்கள்," என்று சொல்லி விடை பெற்றோம்.
அடுத்து ஒற்றியூர்ப் பெருமான் சந்நிதி! உள்ளே நுழையும் மண்டபத்தில் சுமார் 60 மாணவர்கள் அமர்ந்திருக்க, பிரமுகர் ஒருவர் துணைகளுடன் நின்றிருக்க, ஆசிரியப் பெருமக்கள் காவல் செய்ய, ஒரு பேச்சாளர் மாணவர்களிடம், ''அவர்களுக்கு மூளை என்று ஒன்று இருக்கிறது'' என்று எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். கோயிலுக்குள் நுழைய முடியாமல் இதென்ன புதிதாய் என்று நினைத்தேன். பின்னர் தான் தெரிய வந்தது அது அறநிலைத் துறையின் நிர்வாகத்தில் இருப்பது.
சரிவிடுங்கள், மாணவக்கூட்டத்தைப் பிளந்துகொண்டு சந்நிதியடைந்தோம். அர்ச்சகர் போனால் போகிறது என்று விளக்கை இறைவனிடம் காண்பித்தார். என் மனமோ இறைவனைப் பற்றிக் கொண்டது.
' 'வில்வத் தொடும்பொன் கொன்றைஅணி வேணிப் பெருமான் ஒற்றிநகர்
செல்வப் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருஅழகை
கல்வைப் புடைய மனம்களிக்கக் கண்கள் களிக்கக் கண்டுநின்றேன்
இல்வைப் புடையேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.''
விடைபெற்று வடிவுடை மாணிக்கத்தை, இறைவனின் இடப்பாகம் கொண்டாளை, கோமளவல்லியை, தரிசித்தோம்.
''போற்றிடு வோர்தம் பிழைஆ யிரமும் பொறுத்தருள்செய்
வீற்றொளிர் ஞான விளக்கே மரகத மென்கரும்பே
ஏற்றொளிர் ஒற்றி யிடத்தார் இடத்தில் இலங்குமுயர்
மாற்றொளி ரும்பகம் பொன்னே வடிவுடை மாணிக்கமே.''
வடிவுடை மாணிக்கமாலையில் 101 பாடல்கள்.
மாணிக்க வடிவுடையாள், மாணிக்கமாலையினாள் பாடல்களைப் பாடிப்பரவினால் பிறவிப் பயன் எய்தலாம்.
திரு. வள்ளலாரின் காலம் 1823 முதல்1874 வரை. 1825 முதல் 1858 வரை சென்னையில் வாழ்ந்தார். அந்த நாட்களில் வாகனங்களும், நெரிசல்களும் இல்லாத காலகட்டத்தில் திருவொற்றியூர் அமைதியின் இருப்பிடமாக, தெய்விக அலையொளிகளால் நிரம்பியிருந்திருக்க வேண்டும். தங்க சாலையிலிருந்து தினந்தோறும் ஒற்றியூர் செல்வதை வழக்கமாய்க் கொண்டிருந்தார் என அவர் வாழ்க்கை வரலாறு கூறுகிறது.
அப்பரும், சுந்தரரும், பட்டினத்தாரும், வள்ளலாரும் போற்றிய பாடல் பெற்றதலம்! சரியான பராமரிப்பு இல்லை என்ற குறைகள் கண்முன் நின்றாலும் உயிருடன், உடலை ஒற்றி நிற்கும் திருவொற்றியூரனின் தரிசனம் பெற்றது நான் பெற்ற பேறாகும்.
இன்னுமொரு செய்தி.
ஒரு சமயம் மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் வேதங்களைத் திருடிக் கிழித்து கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தனர். மகாவிஷ்ணு அசுரர்களுடன் போராடி வெற்றி பெற முடியாமல் சிவபெருமானின் உதவியை நாடினார். அவரோ ''மகரம்'' நண்டு உருவம் எடுத்துக் கொண்டு கடலடியில் இருந்த வேதங்களை மீட்டு இந்தத் தலத்து இறைவனிடம் சேர்த்தாராம். அது மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டதாம். எனவே ஒற்றியூர் என்ற பெயர் என்கிறது வலைத்தளம்.
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!