16 Apr 2017

பேரு மாறிப்போச்சு....😂

பேரு மாறிப் போச்சு, ஆளு மாறவில்லை

முன்பெல்லாம் ஒருவருடைய பெயருக்கு முன்னால் சொந்த ஊர்ப் பெயரின் முதல் எழுத்தும், தந்தை பெயரின் முதல் எழுத்தும் வரும். உதாரணமாக திருப்பூர் ராமசாமியின் பெண் கண்ணம்மா, என்பதை தி. ரா. கண்ணம்மா என எழுதுவார்கள்! அதுவே மகனாக இருந்தால் தி.ரா. கண்ணன். இப்போதெல்லாம் பெரும்பாலும் ஊர் பெயர் சேர்த்துக் கொள்வதில்லை.


பெண்ணுக்குத் திருமணமானால் கணவன் பெயரைச் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் வந்தது! நீங்க திருமதி கண்ணன் தானே? ஆமாம் நீங்க திருமதி ரவியில்லையா?என்று மேல்தட்டுப் பெண்கள் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள்.  

கண்ணம்மாவுக்குக் கல்யாணம் ஆனது! கணவர் பெயர் ராமன்கண்ணம்மா, திருமதி.கண்ணம்மா ராமன் ஆனார்!

அதாவது கல்யாணம் ஆனதும் கணவன் பெயர் தந்தையின் பெயரை நீக்கிவிட்டது. அது ஒரு பெண் திருமணமானவள் என்பதை அறிவிக்கும் சாதனமாகப் பயன்பட்டது. அதே சமயம் அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பாகவும் கருதப்பட்டது.

ஒரு பெண் திருமணமானவள் என்பதைக் குறிக்க கழுத்தில் மஞ்சள் கயிறும், காலில் மெட்டியும் அணிந்தனர்தற்காலத்தில் மஞ்சள் கயிறு அதை மஞ்சளாகவே வைத்துக் கொள்வதன் கஷ்டங்கள் காரணமாக தங்கச் சங்கிலியாகிவிட்டது. மாங்கல்யம் கோர்த்துக் கொள்ளும் செயின் இத்தனை பவுன் என்று சீர்வரிசையாகவும் மாறிவிட்டது

இன்று பல விவாகரத்துகள்! அதனால் பெண்டிர் தாங்கள் திருமணமானவரா என்று வெளிப்படுத்துவதை விரும்புவதில்லை! மெல்லிதாக ஒரு செயின் தான் அணிகின்றனர்.

அட எங்கேயோ போய் விட்டோம்! சில ஆண்டுகளுக்கு முன் வருமானவரித்துறை Pan card என்ற அடையாள அட்டையை அறிமுகப்படுத்தியது!அது இன்னாருடைய மகனின் மகன் அல்லது மகள் என்பதைத் தெரிவிக்கிறது.   மூன்று தலை முறைகள்!! கணவர் பெயர் தேவையில்லை!

ஆக பழையபடி அப்பா பெயர்தான் Pan card'ல்! தி. ரா. கண்ணம்மா, திருப்பூர் ராமசாமி கண்ணம்மாதான்.
ஆனால் கண்ணம்மாவின் கணவர் அவளுக்கு ஏற்படுத்திக் கொடுத்த வங்கிக் கணக்குகளில், மற்றும் சேமிப்பு பத்திரங்களில் கண்ணம்மா ராமன் என்ற பெயர்தான் இருந்தது
ராமன் ஒருநாள் இறைவனடிசேர்ந்தார். சேமிப்புப் பத்திரங்களை தன் பெயருக்கு மாற்றிக் கொள்ள கண்ணம்மா வங்கி சென்றார். வங்கி மேலாளர் உங்கள் Pan 
card கொண்டு வாருங்கள் என்றார். சேமிப்புப் பத்திரங்களில் தி. ரா. கண்ணம்மா என மாற்றிக் கொடுத்தார். என்னங்க இது, எல்லாப் பணமும் என் கணவருடையதுதானே? அவர் பெயர் வேண்டாமா எனக் கேட்டார் கண்ணம்மா
பணம் உங்கள் கணவருடையதாக இருக்கலாம்! ஆனால் உங்கள் பெயர் எப்போதும் தி.ரா.கண்ணம்மாதாங்க என்றார் அதிகாரி

அப்பா பொண்ணு! அப்பா பிள்ளை!அப்பா இருந்தால் போதும்!அம்மா,கணவன் எல்லாம் வேண்டாம்
என்ன அநியாயம்!ஒன்றுமில்லை
கண்ணம்மாவின் குழந்தைகளுக்கு அப்பா பெயர் கூட வரும்

இரண்டு நாட்களுக்கு முன் பெண்கள் தங்களுடைய பாஸ்போர்ட்டில் திருமணத்திற்கு முன் உள்ள பெயரையே கொடுக்கலாம், ஆட்சேபணையில்லை 
என பிரதமர். மோதி அறிவித்திருந்தார்

அதைப்படித்ததும் இந்தப்பதிவை எழுதத் தொடங்கினேன்அதனால் திருமணம் ஆனதும் யாரும் கஷ்டப்பட்டு கணவர் பெயர் சேர்த்து லாக்கர், வங்கிக் கணக்குகள் வைத்துக்கொள்ளத் தேவையில்லை. உங்களின்  பத்தாம் வகுப்பு சான்றிதழில் இருக்கும் பெயர்தான் உங்கள் பெயர். பணத்தை விடுங்கள்!பெயரையாவது இழக்காமல் இருக்கலாம் அல்லவா?
                                                                 
இந்தப் பெயர் மாற்றங்கள் எல்லாம் பெண்களுக்குதான். ஆண்களுக்கு இல்லை. அவர்கள் திருமணமானாலும் அவர்களாகவே இருக்கும்போது பெண்களும் அப்படியே இருக்கலாம் அல்லவா

சமீபத்தில் வங்கிக்குச் சென்றபோது ஒரு வயதானவர் தன் சேமிப்புக் கணக்கை முடித்து பணம் வாங்கிக் கொண்டிருந்தார்
வங்கி அதிகாரி கேட்டார், அம்மா பெயரில் இருக்கிறதே, கூட்டிட்டு வரலீங்களா
வயதானவர் சொல்கிறார், அவ எதுக்குகையெழுத்து இருக்கு இல்ல? நான் இதெல்லாம் அவகிட்ட சொல்வதில்லை

பெண்களிடம் பணத்தைக் கொடுக்க ஆண்கள் தயங்குவது போல் .சம்பாதிக்கும் பெண்களும் தங்கள் வருமானத்தை கணவனிடம் கொடுக்கத் தயங்குகிறார்கள் என்பதில் வியப்பொன்றும் இல்லை!
🙏
No comments:

Post a Comment